images 92 - 2026

வங்கியில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது..

சென்னை

வங்கியில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருப்பத்தூரை சேர்ந்தவர் புருஷோத் ராவ். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் ‘பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.) அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறி, என்னை போன்ற 39 பேரிடம் போலி நியமன ஆணைகளை வழங்கி சிலர் பண மோசடியில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில், இந்த வழக்கில் தஞ்சையை சேர்ந்த வினோத் (வயது 31), சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (39) ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளியான திருப்பத்தூரை சேர்ந்த மணிகண்டன் (36) என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவரிடம் இருந்து போலி பணி நியமன கடிதங்கள், செல்போன் மற்றும் காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.

images 92 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.