திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நெய் காணிக்கையில் கொள்ளை!

அரசியல் சற்றுமுன் சென்னை புகார் பெட்டி
கோப்பு படம்: திருவண்ணாமலை தீபம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நெய் காணிக்கையில் கொள்ளை.. பக்தர்களின் பக்தியை வைத்து கொள்ளையடிக்கும் இந்து சமய அறநிலையத் துறையை கண்டிக்கிறோம்.. என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது….

திருகார்த்திகை விழாவின் பிரசித்தி பெற்றது மஹாதீபம் எனப்படும் திருவண்ணாமலை உச்சியில் ஏற்றபடும் தீபம். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் சிவ பக்தர்கள் திருவண்ணாமலை நோக்கி ஆன்மீகப் பயணம் வருவார்கள். தீபத்தை தரிசிப்பார்கள். இதற்கான முழு ஏற்பாடுகளும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் தேவஸ்தானம் செய்ய வேண்டும்.

தமிழகத்திலே பழனி திருக்கோவிலுக்கு அடுத்தபடியாக அண்ணாமலையார் கோவிலில் வருமானம் அதிகம். அந்த திருக்கோயிலின் ஏற்பாடுகளின் போது தீபத்திற்கு நெய் வாங்க வேண்டும். கடந்த ஆண்டு ஆவின் நிறுவனத்தில் நெய் விலை 700 ரூபாய் இருக்கும் போது தேவஸ்தானம் 250-க்கு வாங்கியது. இந்த வருடம் தீபத்திற்கான நெய் ரூ. 600-க்கு இந்து சமய அறநிலைத்துறை வாங்க முடிவு செய்ததாக தெரிகிறது.

நிர்வாகம் செய்ய தெரியாத அரசாங்கமாக இந்த அரசு இருப்பதை நொடிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறது. சாதாரண பாமரனுக்கு கூட சென்ற வருடம் வாங்கிய விலையில் இருந்து இவ்வளவு விலை அதிகமாக கொடுத்து வாங்கும் போது சந்தேகம் ஏற்படும்.

அதன்படி இந்த கோவிலை நிர்வாகிக்கும் அதிகாரிகள் ஊழலில் ஏற்படுகிறார்களா? அல்லது பக்தர்களை சுரண்டி அரசுக்கு வருமானம் சேர்க்கும் நோக்கத்தில் இதனை செய்கிறார்களா? என்கின்ற சந்தேகம் அனைத்து பக்தர்களுக்கும் வருகிறது. இப்படி கோவில் தேவைக்கான ஒரு பொருளின் விலையை அதிக விலை கொடுத்து வாங்குவது என்பது திருவண்ணாமலை போன்று அதிக வருமானம் வரும் கோவிலுக்கு சாத்தியமான விஷயம் அல்ல! ஏதோ கோவில் பணத்தையும் பக்தர்களையும் ஏமாற்றும் நோக்கத்தில் செயல்படுத்துவது போன்று தோன்றுகிறது.

கோவில் பணம் மற்றும் உண்டியல் பணம் ஆகியவை பக்தர்களுக்கு செலவிட வேண்டுமே தவிர, அரசுக்கு வருமானம் வருவதற்காக அதிக விலை கொடுத்து வாங்குவது சட்ட விரோதமாகும். உடனடியாக அரசு நெய் ஆவின் பாலகத்தில் இருந்து குறைந்த விலையில் வாங்க முன்வர வேண்டும். இவ்வாறு பக்தர்கள் பணத்தை உதாசீனப்படுத்தினால் இந்து முன்னணி கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கும்.

மேலும் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக கோபுரத்தை சுத்தப்படுத்துவதற்காக பணியாளர்கள் தண்ணீர் பாய்ச்சி சுத்தப்படுத்தினர். பல கோடி வருமானம் வரும் கோவிலில் சுத்தப்படுத்துவதற்கு ஏணி வாங்குவதற்கு வக்கில்லையா? என்று பக்தர்கள் நினைக்கின்றார்கள்.

சாமி உலா வரும் நந்தி வாகனத்தின் மீது ஏறி பணியாளர் கோபுரத்தை சுத்தப்படுத்தியுள்ளனர். வாகனம் என்பது இறைவன் வீதியுலா வரும் புனிதமாக போற்றப்படுவதாகும். ஆனால் இந்து சமய அறநிலையத்துறைக்கு இது வெறும் மரத்தால் செய்யப்பட்ட பொம்மையாக சுத்தம் செய்ய பயன்படும் ஏணியாக தெரிகிறது என்றால், இப்படியான அலுவலர்கள், அதிகாரிகள் திருக்கோயிலில் பணி செய்ய தகுதியற்றவர்கள். இதனை பார்த்த பக்தர்கள் கடும் வேதனை அடைந்துள்ளார்கள். கோவிலின் ஆகமத்தையும் கோவில் புனிதத்தையும் கெடுக்கும் செயலுக்கு இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம்..

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை பொறுத்தவரை இந்து சமய அறநிலைத்துறை கோவிலுக்கு எதிரான விஷயங்களை செய்து வருவது, நெய் விஷயத்திலும் சாமி ஆகம விதியை அவமானப்படுத்துவதிலும் வெட்ட வெளிச்சமாக தெரிய வருகிறது. இந்த கோவிலின் இணை ஆணையர் மண்டல துணை ஆணையர் ஆகியோர் தான் இதுபோன்ற செயலுக்குக் காரணம்.

உடனடியாக திருவண்ணாமலை கோவில் இணை ஆணையர் மற்றும் மண்டல துணை ஆணையர் ஆகியோரை அரசு நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களை பணியிடை நீக்கம் செய்து விட்டு நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் இருந்தும், தேசம் முழுவதிலிருந்தும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் திருக்கார்த்திகை தீபம் காண திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் முதலான பல்வேறு தலங்களுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் தமிழகத்திற்கு வருகை தர இருக்கிறார்கள். எனவே தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் தேவையான அனைத்து ஏற்பாடுகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.