நமக்கு நாமே! பயணத்தில் ஆட்டோவில் சென்று மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்

நெல்லை

நாகர்கோவில்:

தமிழகத்தில் பல இடங்களில் நமக்கு நாமே என்ற திட்டத்தை வைத்து பயணத்தை மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், நாகர்கோவிலில் ஆட்டோவில் நின்றபடி பயணித்து மக்களிடம் பிரசாரம் செய்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆலோசனைப்படி, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய ‘‘நமக்கு நாமே’’ விடியல் மீட்பு முதல் கட்ட பயணம் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் இருந்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து ‘‘நமக்கு நாமே’’ விடியல் மீட்பு பயணத்தை தொடங்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நேற்று நடந்தது. இதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று காலை 8.30க்கு கன்னியாகுமரியில் உள்ள கடற்கரைப் பகுதிக்கு வந்தார். அங்கு வந்திருந்த மகளிர் சுய உதவிக் குழு பெண்களுடன் கலந்துரையாடி நடைப் பயணத்தை தொடங்கினார். வரும் வழியில் கன்னியாகுமரியில் உள்ள கடை வியாபாரிகள் சிலரை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து காந்தி மண்டபத்துக்கு சென்று, காந்தியின் அஸ்தி கட்டத்துக்கு (நினைவிடம்) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு காமராஜர் நினைவு மணிமண்டபத்துக்கு வந்து காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் கன்னியாகுமரி சந்திப்பு பகுதிக்கு மக்களோடு நடந்து வந்தார். அண்ணா சிலை அமைந்துள்ள இடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்துக்கும், அருகில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி, ‘‘நமக்கு நாமே’’ விடியல் மீட்பு பயணத்துக்காக வரவழைக்கப்பட்டு இருந்த வேனில் ஏறி நாகர்கோவிலுக்கு புறப்பட்டார்.

பின்னர் நாகர்கோவிலுக்கு வந்த அவர் கோட்டார் சந்தைப் பகுதியில் வியாபாரிகளை சந்தித்துப் பேசினார். ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆட்டோ ஓட்டுநர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், அங்கிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி நின்று ஆட்சியர் அலுவலக பிரதான வாயில் அருகில் மக்களைப் பார்த்து கை அசைத்தவாறு பயணித்தார்.

குமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் பேசிய அவர், குமரி மாவட்டம் அய்யா வைகுண்டர், மார்ஷல் நேசமணி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, ஜீவா போன்ற பல சான்றோர்களை உருவாக்கிய மாவட்டம். அப்படி பெருமைக்குரியவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் இருந்து இந்த பயணம் தொடங்கப்படுகிறது.

கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்தபோது வணிகர்களுக்கு பல நன்மைகளும், சாதனை திட்டங்களும் கிடைத்து வந்தன. ஆனால் இன்று எந்த புதிய திட்டமும் கிடையாது. நீங்கள் சுதந்திரமாக தொழில் செய்யும் நிலை வரும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே உடனடியாக ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்கு நல்ல வாய்ப்பு வருகிற 2016–ம் ஆண்டு. இன்னும் 237 நாட்கள்தான் உள்ளன. மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.