ஜெயமோஹன் தாக்கப்பட்ட விவகாரம்… உண்மை என்ன?!

உரத்த சிந்தனை கிரைம் நியூஸ் நெல்லை லைஃப் ஸ்டைல்

jayamohan - 2026

ஜெயமோகன் தரப்பு வாதம் மட்டுமே வெளியே வந்திருக்கிறது. தரமற்ற பொருளைத் திருப்பித் தந்ததற்கு பெண் முதலாளியால் வசைபாடப்படிருக்கிறார்; ஆண் முதலாளியால் அடிக்கப்பட்டிருக்கிறார். உதைக்கப்பட்டிருக்கிறார்.

இவ்வளவு நடந்த பிறகும் அமைதியாக வீடு திரும்பிய ஜெயமோகனை ஆண் முதலாளி வீடு தேடி வந்து வசைபாடியிருக்கிறார். குடும்பத்தினரை அவமதித்திருக்கிறார். மிரட்டியிருக்கிறார்.

ஜெயமோகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது கடை முதலாளிக்கு ஆதரவாக கட்சிப் பிரமுகர்கள், பெரிய தலைகள் பேசியிருக்கிறார்கள். கடை உரிமையாளர் குடிகாரர்; சம்பவத்தின் போது குடித்துமிருந்திருக்கிறார். என ஜெயமோகன் தரப்பு வாதங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன.

ஜெயமோகன் தரப்பில் சொல்லப்பட்டிருப்பதையும் தாண்டி வேறு சிலவும் நடந்திருக்கும். அவை என்னவாக இருந்தாலும் ஜெயமோகன் அடிக்கப்பட்டது நிச்சயம் கண்டிக்கத் தக்கதுதான்.
*
இந்த சம்பவம் தொடர்பாக முக நூலில் பல்வேறு கேலிகள், கிண்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. செய்திகளை உருவாக்கும் வட்டத்தில் இருப்பவனென்று ஜெயமோகன் சொல்லி ஓரிரு நாட்கள் கூட ஆகவில்லை.

உடனேயே செய்திகளின் மையத்துக்கு வந்துவிட்டிருக்கிறார். பொதுவாக சொல்லடி படும்வகையில்தான் அவருடைய செயல்பாடுகள் இருக்கும். எனவே, இது அவரை மீறி செய்திச் சுழலுக்குள் சிக்கிய நிகழ்வாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

சமூக வலைதளங்களில் இந்நிகழ்வு தொடர்பான கேலிகளைக் கண்டு பலர் வருத்தப்படுவதைப் பார்க்க முடிகிறது.

இதே தமிழகத்தில் இந்துத்துவச் செயல்பாட்டாளர்கள் ஓடஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காவல் துறையும் பொது சமூகமும் அந்தக் கொலைகளைக் கள்ளக் காதலுடனும், பணத்தகராறுடனும் இணைத்துப் பேசியிருக்கிறது. அஞ்சலிக் கூட்டம் நடத்தியவர்களை அவதூறு பேசியிருக்கிறது.

சுவாதி போன்ற எளிய தனி நபர் கொடூரமாகப் பொது இடத்தில் கொல்லப்பட்டபோதும் அவரைப் பற்றிய அவதூறுகள் சகஜமாக முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு ஜாதிப் படுகொலையின் போதும் இப்படி நடக்கத்தான் செய்கின்றன.

உயிரைக் கொடுத்து நாட்டைக் காக்கும் ராணுவத்தினர் அவமானப்படுத்தப்படும் அளவுக்கு வேறு யாரும் அவமானப்படுத்தப்படுவதில்லை.

கோவிலுக்கு செல்லும் பெண்கள் வேசைகள் என்று சொல்ல எழுத்தாளருக்கு கருத்துச் சுதந்தரமும் கலைச் சுதந்தரமும் உண்டு என்று சொல்லும் எழுத்தாளர்கள் தம்மைப் பற்றிச் சொல்லப்படும் கிண்டல்களையும் புண்படாமல் எடுத்துக்கொள்ளப் பழகிக் கொள்ளவேண்டும்.

ஏனென்றால் இந்த சமூகத்தில் பலர் இதைவிடக் கொடூரமான, சோகமான நிகழ்வுகளின் போதும் இதைவிடக் கேவலமாக எள்ளி நகையாடப் பட்டிருக்கிறார்கள். அனைத்து எழுத்தாளர்களுமே அப்படியான நிகழ்வுகளின் போது தத்தமது அரசியல் சார்ந்தே எதிர்வினை புரிந்திருக்கிறார்கள்.

ஒரு கலைஞர் கலைஞராக மட்டுமே செயல்பட்டிருந்தால்தான் அப்படியான கண்ணியமான எதிர்வினைகளை எதிர்ப்பார்க்கமுடியும். அரசியல்வாதிபோல் நடந்துகொண்டிருந்தால் அவ்வண்ணமே எதிர்வினைகள் நடக்கும்.

மாற வேண்டியது சமூகம் மட்டுமல்ல.

  • பி.ஆர். மகாதேவன் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.