October 12, 2024, 9:06 AM
27.1 C
Chennai

நியூமராலஜி: 9ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

நியூமராலஜி: 9ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு!

9, 18, 27ஆம் உங்கள் எண்ணுக்கான பொதுப் பலன்:-

பிறந்த எண் 9-ல் கூட்டு எண் 1

செவ்வாயுடன் சூரியன் சேர்ந்த ஆதிக்கப் பலன் கொண்டவர். உயரமாக ஒல்லியாக இருப்பார். சிவப்பு நிறமிருக்கும். கம்பீரமான தோற்றம் தூயதாக இருக்கும். உறுதியான உடலும், மந்த குரல் இருக்கும்.

போர்க் குணமுள்ளவர். அரசனைப்போன்று பிறர் மீது ஆளுகையும் பெருத்தன்மையும் உள்ளவர். நல்ல தைரியசாலி. கைச்சண்டை, வாய்ச்சண்டை ஏதாயிருந்தாலும் தயார் என்று முன்னே நிற்பர். ஆத்திரம் கொண்டால் கண் மண் தெரியாமல் காரியம் செய்து விடுவர்.

அனுபவமும் அறிவும் நிதானமாக இருக்கும் போதே இவரிடம் வெளிப்படும். எவ்வளவு வலியவராயினும் வம்பு செய்தால் எதிர்த்து நிற்பர். தம் சொந்தத் தீர்மானப்படியே நடப்பர். பிறர் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்.

பெற்றோரிடம் இருக்கும் போதே சகோதரிகளிடம் சச்சர விடுவர். காரணமின்றிச் சிலர் இவரை வெறுப்பர். குடும்பத்தில் சன்டை, குழப்பங்கள் ஏற்படும். பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணும் சாடிஸ்ட் இவர்கள்.

உறுதியான உடலும் உள்ளமும் இவர்களை ஊக்கத்துடன் உழைக்கச் செய்யும். போலீஸ், தீயணைப்புத்துறை, மருத்துவமனை, ராணுவம் இவர்கள் பணிபுரிய ஏற்றத்துறை. வக்கீல், பேராசிரியர், பதவி பொருத்தம்.

உயர் ரத்த அழுத்தம், வயிற்று வலி, அம்மை, அக்கி, மஞ்சள் காமாலை, கண் நோய் முதலியவை வரும். எலும்பு தொடர்பான நோய், மூலம் முதலிய நோய்கள் பாதிக்கலாம்.

பிறந்த எண் 9-ல் கூட்டு எண் 2

இவ்வெண் கொண்டவர்கள் செவ்வாயுடன் சந்திரன் சேர்ந்த ஆதிக்கப் பலன் கொண்டவர்கள்.  இவர்கள் சராசரி உயரம் அமையப் பெற்றவர்கள், முடி அடர்ந்து இருக்கும். கண்கள் அகலமாக அழகாக இருக்கும்.

நல்ல பேச்சுத் திறமை, கற்பனை வளத்துடன் இருக்கும். எதையும் தர்க்கம் செய்தே ஒப்புக் கொள்வர். தெய்வ பக்தி, இரக்கம் உண்டு. பொய் நிறையச் சொல்லுவார். துணிவு இருக்கும். பயமும் வரும். தம் எண்ணம், கருத்து, பேச்சு, செயல், எல்லாம் சரியே எனப் பிடிவாதம் பிடிப்பர்.

தெய்வ பக்தி இருக்கும். கூடவே மூட நம்பிக்கையும் இருக்கும், தம்மைச் சார்ந்த மதம், மனிதர், மொழி, தத்துவ வழி எனப் பலவற்றிலும், குடும்பத்திலும் பற்று அதிகம் கொண்டவராக இருப்பார்.

பிறந்த குடும்பத்தில் செல்லமாக வளருவர். படிப்பு, அனுபவ கல்வி இரண்டில் ஒன்று நன்கு அமையும். காதலுணர்வு எழும். ஆனாலும் திருமணம் நடப்பது சிரமம். பொது வாழ்க்கைக்கும் பொது சேவைக்கும் ஆன்மிக வழிச் செல்லவும் இவ்வெண் ஏற்றது.

இவர்கள் மனம் சக்தி வாய்ந்ததாகையினால் பல தொழில்களும் அத்துபடியாகும். கலைகளில் சிறந்து விளங்குவர். ரியல் எஸ்டேட், சிவில் இன்ஜினியரிங், புகைப்படமெடுத்தல், எரிபொருள், எண்ணெய், குடிநீர் சம்பந்தப்பட்ட வியாபாரம், மதுக்கமை நடத்தலாம்.

எப்போதும் பரபரப்பாக இயங்குகிறவர். ஆக விபத்துக்கள் ஏற்படலாம். சிறுநீரகத்தில் கல் உண்டாகும். பிபி, கட்டிகள் ஏற்படும். நீரிழிவு நோய், மனக் கோளாறு, ஜலதோஷத் தொடர்பான நோய்கள் உண்டாகும்.

 பிறந்த எண் 9-ல் கூட்டு எண் 3

செவ்வாயில் குரு சேர்ந்த யோகம் உடையவர்கள். இவர்கள் உயரமாக, சிவப்பாக அழகாக இருப்பர். கம்பீரமான வாட்டசாட்டமான கவர்ச்சி உருவம் உண்டு.

தெய்வ பக்தி, பூசை, சாத்திரம் சம்பிரதாயங்களில் நம்பிக்கையிருக்கும். ஒழுக்கம், கட்டுப்பாடு இருக்கும். வாழ்க்கையில் ஏதாவதொரு நோக்கம் கொண்டு உழைப்பர். குடும்பப் பற்று பாசம் இருக்கும். எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விடுவர். அறப்பணி, கோயில் பணி என்று பொதுப் பணிகளில் ஈடுபடுவர்.

காதல் திருமணம் பிரச்னையைத் தரும். தொழில், கலையறிவை விரும்பி அடைவார். திருமண பாக்கியம் உண்டு. நல்ல துணை அமையும்.

ஆராயும் புத்தியும் சுயநல நோக்கமும் உடைய இவர்கள் நன்கு படிப்பர். படிப்பு அமையாவிடினும் அனுபவத்தில் தொழிலறிவை மிகப் பெறுவர். சிக்கனத்தை அறிவுறுத்துவார். தொடக்கத்தில் தொடங்கிய தொழிலைக்கூட விடாமல் கடைசி வரை நடத்தி ஆதாயம் பண்ணிடுவார். அணு விஞ்ஞானம் முதல் ஆத்திச்சூடி வரை அறியாத சங்கதிகளே இல்லை என இருப்பர்.

தோல் நோய், எக்சீமா, வயிறு தொடர்பான கோளாறு, அசிடிடி போன்ற நோய்கள் தாக்கக் கூடும். கபம், வாதம் தொல்லை தரும்.

பிறந்த எண் 9-ல் கூட்டு எண் 4

இவ்வெண் கொண்டவர்கள் செவ்வாயில் ராகு சேர்ந்த ஆதிக்கப் பலன். உயரமாகப் பருமனாகவும் இருப்பர். உடல் முழுக்க முடி நிறைந்திருக்கும்.

நல்லவரான இவர் மிகவும் ஜாலியான பேர்விழியாக இருப்பார். இரக்கமுள்ளவர். பிரதிபலன் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்வார். ஊனமுற்றவர், அனாதைகள், ஏழைகள் என்றால் இவர்களுக்கு மிகவும் கருணை பிறக்கும்.

நிறையப் படிப்பர். நன்றாகப் பேசுவர். அறிவு தட்சணியம் உள்ளவர். எதையும் ஊன்றிக் கவனிப்பார். எவரையும் எதையும் சரியாக எடைபோட்டு விடுவார். யாரும் இவர்களை வெறுக்க முடியாது. பிறர் மகிழ்ச்சியில் இவர் குறுக்கிட மாட்டார்.

காதல் வயப்படுவர். திருமண வாழ்க்கை தள்ளிப் போகும். சிலருக்கு திருமணம் நடந்தாலும் நிலைக்காது. சகோதர சகோதரிகளிடம் அன்பு வைத்திருந்தாலும் யாருடனும் ஒட்ட மாட்டார்.

போலீஸ், ராணுவம், தீயணைப்புப் படை, மருத்துமனையில் செவிலியர், கம்பௌண்டர் எனப் பணிபுரிவார்.எரிபொருள், எண்ணெய் வியாபாரம் செய்வார். அச்சகம், பத்திரிக்கை, நூலகம், பதிப்பகம் நடத்துவார். ஸ்டூடியோ நடத்துவார். கதை, கட்டுரை எழுதுவார்.

வாத சம்பந்தமான நோயும், உஷ்ண தொடர்பான நோயும் தாக்கும், வயிற்று வலி, கை, கால் முடங்கல், கல்லீரல் கெடும்.

 பிறந்த எண் 9-ல் கூட்டு எண் 5

செவ்வாயுடன் பதன் சேர்ந்து தரும் ஆதிக்க பலன் கொண்டவர்கள். இவர் உயரமாகவும், சிவப்பாகவும் இருப்பர். கண்கள் பெறியதாக தாமரை இதழ்போல இருக்கும்.

உடலில் உறுதி மனத்திலும் திடம் இருக்கும். துணிச்சலும், சுறுசுறுப்பும் உண்டு. விளையாட்டில் திறமை வரும். யாராயிருந்தாலும் எதிர்த்துப் போராடுவர். மரியாதையோடு வாழ விரும்புவர். பிறர் துன்பத்தை ரசிக்கவும் செய்வார்.

நூல்கள் நிறைய படிப்பர். தானே நுண்ணறிவை முயற்சியால் அடைவார். தனியாக இருக்க பிரியப்பட்டாலும் நண்பர் நிறைய இவருடன் சேருவார். அரட்டையடிப்பதில் நேரம் அதிகம் செலவிடுவார். சுயநலம் இருக்கும்.

பெரிய குடும்பத்தில் பிறந்து செல்வாக்குடன் வளருவர். காதல் விவகாரம் உண்டு. இனக்கவர்ச்சியாகவே முடியும். அழகுணர்வுள்ள இவர் கண்டவுடன் காதல் வயப்படுவர். பொருளாதாரத் தட்டுப்பாடு வராது. வீடுவாசல் சொந்தமாக அமையும்.

இவர்கள் நல்ல கல்வி கற்றவராவர். பட்டங்கள் பெறுவர். அரசாங்கம், தனியார் அலுவலகத்தில் பெரும் அதிகாரிகளாக இருப்பர். ஓவியக் கலையில் தேர்ச்சி பெறுவர். கம்யூட்டர், கணிதம் பிற விஞ்ஞானம் நன்கு படிக்கலாம். சிறந்த விளையாட்டு வீரராகலாம். சினிமாவிலும் நடிப்பு முதலிய கலை சார்ந்த தொழில்களைச் செய்து வாழ முடியும்.

வெப்ப மிகுதியால் வயிற்று வலி ஏற்படும். நரம்புத் தளர்ச்சி இருக்கும். பிபி உண்டாகும். கட்டிகள், காய்ச்சல், பித்த வாந்தி போன்ற நோய்கள் தாக்கக்கூடும்.

 பிறந்த எண் 9-ல் கூட்டு எண் 6

இவர்கள் செவ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்த ஆதிக்கப் பலன் கொண்டவர்கள். உயரமாக சதைப்பிடிப்புடன் இருப்பர். பெண்மை கலந்த தோற்றத்தில் உள்ளவர். நல்ல நீண்டமைந்த புருவங்கள், அடர்ந்த தலைமுடி உடையவர்கள்.

மகிழ்ச்சியாக எப்போதும் இருப்பர். உல்லாசமாகக் கேளிக்கையில் பொழுதைப் போக்குவர். இவர்கள் உலக வாழ்வில் சுகம் அனுபவிப்பதையே நியாயமாகக் கருதுவர். இதற்கு மாறாக வறட்டு வேதாந்தம் பேசினால் இவருக்குப் பிடிக்காது. நல்ல கவிதை, நயமான நகைச்சுவைப் பேச்சு, பொழுது போக்கான அரட்டை இவர்களுக்கு மிகப் பிடிக்கும்.

தெய்வ நம்பிக்கை உண்டு. நியாயத்தை எல்லாரும் மதிக்க வேண்டும் என்பர். எல்லாரும் வாழ்வில் மேம்பாடடைய எண்ணுவர். ஆலோசித்தே எதையும் செய்வர். மிகவும் நல்லவர். தவம், தியானம் செய்து தத்துவப்படி வாழ்கிறவராவார். இடைவிடாமல் முயன்று எதையும் அடைய நினைப்பர்.

கண்டதும் காதல் கொள்ளும் போக்கும், யாரையும் எதையும் லட்சியம் செய்யாமல் மணம் முடிக்கும் துணிவும் உள்ளவர். நல்ல துணை அமையும். பணம் காசு தாராளமாகச் சம்பாதிப்பார்.

இவர்களுக்குக் கலையும் கலை சார்ந்த தொழில் தான் ஏற்றவை. சினிமாவில் கதை வசனம் பாடல் எழுதலாம். சொந்தமாகப் படம் எடுக்கலாம். பிரமிக்க வைக்கும் பேச்சாற்றல் இருக்கும்.  வக்கீலாகலாம். அரசியலில் சேர்ந்து பெரிய பதவியை அடையலாம். அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களாக, ஜவுளி, பட்டு, நகைக்கடை முதலாளிகளாக ஆகலாம்.

நீரிழிவு, வெப்பப் பாதிப்பால் வரும் நோய்கள், தொண்டை, கண் கோளாறு, பிபி, சிறுநீரகக் கேடு, வாத பாதிப்பு, இதயக் கோளாறு உண்டாக வாய்புண்டு. வயிற்றுவலி தாக்கக்கூடும்.

 பிறந்த எண் 9-ல் கூட்டு எண் 7

இவ்வெண் கொண்டவர்கள் செவ்வாயில் கேது சேர்ந்த ஆதிக்கப் பலன். சிலர் குட்டையாகவும், சிலர் உயரமாகவும் இருப்பர். வாட்டசாட்டமாக சிவப்பாக இருப்பர்.

துணிவு, வீரம், அறிவு இருந்தும் சாதுவாக இருப்பர். அச்சமே அற்றவராக இருப்பர். ஆனால் அமைதியாயிருப்பார். துன்பங்களைத் தாங்கும் சகிப்புத் தன்மை, விடாமுயற்சி இவர்களிடம் உண்டு.

வயதாக ஆக முயற்சி, உழைப்பு அலுப்பையே தரும். தெய்வ நம்பிக்கை இருக்கும். பிறர் செய்யும் சூழ்ச்சி தந்திரம் ஏதும் அறியாமல் பிறர் வலையில் சிக்குவார். வாழ்க்கையில் லாபம் அடையும் வழி தெரியாது. இவர் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் இவரின் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடும்.

குடும்பத்தில் பெற்றோர் ஆதரவு குறையும். உடன் பிறந்தோரும் இவரைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். கோபம், முரட்டுத்தனம் இவர் அறிவை மறைத்து போகும் இடமெல்லாம் பிரச்னையைத் தரும். குடும்பத்தில் சச்சரவு போராட்டம் இருக்கும். வைத்தியச் செலவு அதிகமாகும்.

கற்பனை வளம் மிக்க இவர் நன்றாக எழுதுவார். பேசுவார். கவிதை நன்கு தொடுப்பார். இன்ஜீனியரிங் போன்ற தொழிற்படிப்பே வரும். யோகம் பழகி வேதாந்தம் துணை கொண்டு சொற்பொழிவாற்றுவார். அசனம் பயிற்றுவிப்பார். ஆன்மிக நூல் எழுதுவார். மீடியேட்டராக இருப்பார். மின்சாரம், மின்னனு தொடர்பில் வேலை வியாபாரமோ செய்வார்.

சிறுசிறு தொல்லைகளை உடல் சிறுவயது முதலே தந்து கொண்டிருக்கும். எலும்பு முறிவு ஏற்படும். வயிற்றுவலி உண்டு. தலைவலியிருக்கும். நரம்புத் தளர்வு ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய்களுண்டு. நீரிழிவும், மஞ்சட் காமாலை முதலிய நோய்கள் தாக்கக்கூடும்.

 பிறந்த எண் 9-ல் கூட்டு எண் 8

பெரும்பாலும் செவ்வாயுடன் சனி சேர்ந்து உண்டாகும் ஆதிக்கம் இது. சராசரி உயரமிருக்கும். கட்டான உடல் அமையும். சிவப்பாக இருப்பர்.

பார்க்க அமைதியானவர்களாக இருக்கும், ஆனால் இவர்கள் சண்டைக்காரரே. துணிவும் உடல் பலமும் கொண்டவர். பிறரை நன்கு எடை போட்டு விடுவார். தந்திரமாகப் பிரச்னையைச் சமாளிப்பார். வீரமும் நியாயமும், கடும் உழைப்பும் உள்ளவர்.

அடுக்கடுக்காகத் துன்பங்கள் வந்தாலும் தளரமாட்டார். ஒன்றை அடையக் கடும் முயற்சி செய்வார். இளம் வயதில் வறுமை இருக்கும். சிலர் பெற்றோரில் ஒருவர் மறைய நேரிடலாம். பிறருக்காகவும் போராடுவர். வெற்றி தோல்வி பற்றிக் கவலைப் படமாட்டார். செலவாளியாக இருப்பார்.

அடிக்கடி விழுந்து எழும் வாழ்க்கையில் நிறைய அனுபவம் ஏற்படும். வறுமை, வளமை, திண்டாட்டம், நிம்மதி மாறி மாறியமையும். தாய் மீது பற்று அதிகம் வைத்திருப்பார். மணவாழ்க்கை அமைதியாயிராது.

இவர்கள் எதையும் பக்குவமாக முழு ஈடுபாட்டோடு செய்வர். வறுமையை மீற எடுத்துக் கொண்டு தொழிலிலேயே முன்னேறிவிட முடியும். ஒரே தொழிலில் நீட்டித்திருப்பர். நிலத் தொடர்பான தொழிலும் கை கொடுக்கும். சிவில் இன்ஜீனியரிங், ரியல் எஸ்டேட், விவசாயம், எண்ணெய் எரிபொருள் இரும்பு தொடர்பான தொழில் நன்மையாகும்.

நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, வாத சம்பந்தக் கோளாறுகள் வரலாம். மூச்சுக் கோளாறும், மூட்டு வலி, தலைவலி, கால் பாதிப்பு, கண் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாகலாம்.

 பிறந்த எண் 9-ல் கூட்டு எண் 9

இவர்கள் செவ்வாய் இணைந்த ஆதிக்கப் பலன் கொண்டவர்கள். முழுவதுமாய் செவ்வாய்ப் பாதிப்பிருக்கும். சம உயரம் இருக்கும். சுமாரான நிறமாக இருப்பர். விழிகள் சிவந்து காண்ப்படும்.

துணிவும், வீரமும் இருக்கும். எளிதில் களைப்படைய மாட்டார். பேச்சு இவர்களிடம் கடுமையாக இருக்கும். எப்போதும் முரட்டுத்தனத்தைக் காட்டாமல் ஆளுக்கும் சமயத்திற்கும் தக்கவாறு தந்திரமாகவும் செயல்படுவர்.

யார் பேச்சையும் கேட்காமல் தம் சொந்த யோசனைப்படி நடப்பர். பிறர் நோகப் பேசுவர். யோக, உடற்பயிற்சி, விளையாட்டு, போர்ப் பயிற்சியில் ஈடுபடுவர். பிரச்னைகள் நிறைய விரும்பித் தலையிடுவர். அமைதியாக ஆட்களை எடை போடும் குணம் கொண்டவர். சத்தம் சண்டையின்றி இவர் அடங்க மாட்டார்.

பெருந்தன்மை உடைய இவர்கள் தம்முடன் பலரையும் தம் குடும்பமாக வைத்துக் காப்பார். பிறர் பசி தீர்க்கப் பாடுபடுவார். அழகை ரசிக்கும் இவர் காதலில் ஈடுபடுவார். ஆனால் காதல் போரட்டமாகும்.

அனல் கக்கும் பேச்சாளராக, எழுத்தாளராக இருக்கலாம். அரசியலிலும் அரிய பதவிகளைப் பெறலாம். போலீஸ், ராணுவம், தீயணைப்பு, மருத்துவமனைகளில் வேலை பார்ப்பார். சிலர் ஓட்டர்களில் பணிபுரிவராக இருப்பார். பிறந்த, கூட்டு எண் ஒரே எண்ணாக இருப்பதால் பெயர் எண்னைப் பொறுத்தும் தொழிலமையும்.

பிபி, வயிற்று வலி உண்டாகலாம். உணவுக் குழாய், குடல்களில் கோளாறுண்டாகும். மூச்சு தொடர்பான நோய், கண், பல் நோய் ஏற்படலாம்.

      பலன்கள் கணிப்பு: எழுத்தாளர் ஸ்வாமி
author avatar
செங்கோட்டை ஸ்ரீராம்
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.