
சென்னை: தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக., செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சியினர் வியாழக்கிழமை இன்று மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திய போலீஸார், சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓய மாட்டோம் என்று கூறி, இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஸ்டாலின். அதன் படி திமுக.,வினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மறியல், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் என நடத்தி வருகின்றனர். தொடர் போராட்டம் நடத்தப் படும் என்ற அறிவிப்பால், இன்று தொட்ர்ந்து 5ஆவது நாளாக அண்ணா சாலையில் மா சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்களான திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் அந்த இடதுக்கு உடன் சென்றனர். பின்னர் அங்கிருந்து அண்ணா நினைவிடம் நோக்கி பேரணியாக சென்றனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே ஸ்டாலின் உள்ளிட்டோர் காமராஜர் சாலை அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்களை அங்கு செல்லக் கூடாது என்று போலீஸார் தடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உழைப்பாளர் சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து, போலீஸார் அவர்களை தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றி, கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



