
சென்னை: குடும்பம் நடத்த வா என்று வருந்தி அழைத்தும் வராமல், தன் தாய் வீட்டிலேயே இருந்து கொண்டு வர மறுத்த மனைவியை 11வது மாடியில் இருந்து தள்ளி விட்டுக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர், 37 வயதாகும் ராஜ் கண்ணு. இவர், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இவருக்கும் அம்பத்தூரில் வசித்து வரும் இவரது அக்கா சுகுணாவின் மகள் ஜெயசுதாவுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள். இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி ஜெயசுதாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக ராஜ்கண்ணுவுக்கு சந்தேகம் வரவே, அதை அவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த ஜெயசுதா, ஒன்றரை வருடம் முன் அவரிடம் இருந்து பிரிந்து, தன் குழந்தைகளுடன் அம்மாவின் வீட்டுக்கே வந்துவிட்டார்.
கொரட்டூர் கெனால் ரோடில் 11 மாடிக் குடியிருப்பில் வசித்து வந்த தன் அக்கா சுகுணா வீட்டுக்கு வந்த ராஜ்கண்ணு, பலமுறைகள் தன் மனைவி ஜெயசுதாவை தன் வீட்டுக்கு வந்து ஒழுங்காக குடும்பம் நடத்துமாறு வற்புறுத்தி அழைத்துள்ளார். ஆனால், அதற்கு ஜெயசுதா மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ராஜ்கண்ணு, வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு 10 மணி அளவில் அக்கா சுகுணா வீட்டுக்கு வந்துள்ளார்.
அக்கா சுகுணாவுடன் கோபத்துடன் பேசிக் கொண்டிருந்த ராஜ்கண்ணு, ஜெயசுதாவை என்னுடன் வந்து வாழச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அக்கா சுகுணா, நீங்களே ஒருவருக்கொருவர் பேசி முடிவுக்கு வாருங்கள் என்று கூறிவிட்டு, தன் மகன் கார்த்திக்குடன் நடு ஹாலுக்கு வந்துவிட்டாராம்.
இந்நிலையில், கோபம் கொப்புளிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ராஜ்கண்ணுவுக்கும் ஜெயசுதாவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அதில் ஆத்திரம் அடைந்த ராஜ்கண்ணு, மனைவி ஜெயசுதாவை திறந்து கிடந்த ஜன்னல் வழியாக 11வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டாராம். இதில் தலைகுப்புறக் கவிழ்ந்த ஜெயசுதா, அலறியுள்ளார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது, ஜெயசுதா மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜெயசுதாவை அண்ணாநகர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஜெயசுதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து, ஜெயசுதாவின் தாய் சுகுணா கொடுத்த புகாரின்பேரில் கொரட்டூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்கண்ணுவை கைது செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குடும்பம் நடத்த வராத மனைவியை ஆத்திரத்தில் 11 வது மாடியில் இருந்து கணவனே தள்ளிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



