
இப்போதெல்லாம் பழமொழிகள்தான் மக்களின் அதிகபட்ச கேலிப்பொருளாக விவாதிக்கப்படுகிறது. இதைத் தொடங்கி வைத்தவர் திமுக.,வின் செயல் தலைவர் ஸ்டாலின்.
தொடர்ச்சியாக பாழமொழிகளை பதம் பார்த்து வரும் அவர், அண்மையில் பூனை மேல் மதிலாக என்றார். அதைக் கேட்டு சிரிப்பதற்கு பதிலாக பலரும் அதிர்ச்சியடைந்தனர். முதல்வர் எடப்பாடி என்பதற்கு பதிலாக, வாழப்பாடி என்றார். அப்போது அருகில் இருந்து செய்தியாளர் சந்திப்பை உன்னிப்பாக கவனித்து வந்த துரை. முருகன், சற்றே ஷாக் ஆனார். உடனே ஸ்டாலின் பக்கம் திரும்பி முகம் சுளித்தார்.
இதை அடுத்து, சமூக ஊடகங்களில் மு.க.ஸ்டாலின் பழமொழிகள் கேலிப் பொருளாக மாறிப் போனது. பலரும் பழமொழிகளை ஸ்டாலின் ஸ்டைலில் மாற்றிச் சொல்லி கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் என்னால் பழமொழியை சரியாகச் சொல்ல முடியும் என்று ஸ்டாலினுக்குக் காட்டுவது போல், இன்று துரை.முருகன் பழமொழியை சரியாகச் சொல்லி ஒரு பிட் போட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை போலீஸார் ஆங்காங்கே கைது செய்து விடுவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க., முதன்மைச் செயலாளர் துரை.முருகன், காவல்துறையை வைத்து தாக்கினாலும் சரி, துப்பாக்கியால் சுட்டாலும் சரி போராட்டம் ஓயாது. பாலுக்கு காவல் பூனைக்கு தோழன் என்பது போல் தமிழக அரசு உள்ளது மத்திய அரசுக்கு காவலாகவும் எங்களுக்கு பூனையாகவும் இருக்கிறார் முதலமைச்சர் என்று குறிப்பிட்டார்.
நல்லவேளை பழமொழியை சரியாச் சொல்லி, மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கிட்ட இருந்து தப்பிச்சோம்டா சாமி என்று ஒரு பெருமூச்சு விட்டிருப்பார் துரை.முருகன்!



