
உலகமே கொரோனா என்ற கிருமியின் காலில் மண்டியிட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அக்கிருமியின் ஊற்றுக்கண்ணான சீனம் ஏன் போருக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்? அதுவும் தனக்கு நிகராக மிகப்பெரிய மக்கள்திறனை இராணுவ வலிமையைக் கொண்ட நாட்டுடன்!
எப்படியும் போர் மூள வாய்ப்பேயில்லை என்று தெரிந்தும் அதற்கான சலசலப்பில் ஈடுபடக் காரணமென்ன? இதனை புரிந்துகொள்ள இந்திய ஒன்றிய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளை அறிந்திருத்தல் அவசியமாகிறது.
இந்த மாதத் துவக்கத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் பாகிசுதான் ஆக்கிரமிப்பு கசுமீருக்கான வானிலை அறிக்கையை தயாரித்து உள்துறை அமைச்சகத்தின் அனுமதியையும் பெற்று வெளியிட்டுள்ளது. இச்செயல் பாகிசுதான் ஆக்கிரமிப்பு கசுமீர் இந்தியாவின் ஒருங்கிணைந்து பகுதி என்று உலக நாடுகளுக்கும், எதிரியான பாகிசுதானுக்கும் பேரறிவிப்பு செய்வதாக அமைந்தது. இந்திய நடுவனரசும் பாகிசுதான் ஆக்கிரமிப்பு கசுமீரை உறுதியாக மீட்போம் என்று வெளிப்படையாக கூறி வருவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதற்கு முத்தாய்ப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாகிசுதான் தனது ஆக்கிரமிப்பு கசுமீர் பகுதியை கைகழுவி விட்டதையும், அப்பகுதி மக்கள் குழுக்களில் சிலர் வெளிப்படையாக இந்தியாவிடம் உணவு வேண்டி கோரிக்கை விடுத்ததையும், பாகிசுதானுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சரி இப்பொழுது சீனம் ஏன் தொடர்பில்லாமல் பதற்றத்தை உண்டாக்க வேண்டும் என்ற கேள்விக்கு சீனம் பாகிசுதான் நாடுகளின் உறவையும், சீனத்தின் கனவுத் திட்டமான மாபெரும் பட்டு சாலைத் திட்டம் பாகிசுதான் ஆக்கிரமிப்பு கசுமீர் வழியாக செல்வதையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இத்திட்டத்தை அப்பகுதி பூர்வகுடி மக்கள் ஏற்கவில்லை, எதிர்க்கிறார்கள். இதற்கும் இந்தியாதான் காரணமென பாகிசுதானும், சீனமும் கருதுகின்றன.
தற்போது இந்தியா அப்பகுதிக்கு உரிமை கோரி அதற்கான செயல்திட்டத்தை முன்னெடுத்ததாலேயே, சீனம் இந்தியாவிற்கு நெருக்கடியை உண்டாக்க நேபாளத்தை தூண்டிவிட்டு எல்லைப் பிரச்சினையை துவக்கியது மட்டுமில்லாமல் தன்னுடைய இராணுவத்தையும் இந்திய ஒன்றியத்தின் எல்லைக்குள் அத்துமீறி நுழைத்து இந்திய ஒன்றியத்தை அச்சுறுத்த முனைந்தது.
இப்பிரச்சினை தற்போது சமரச முடிவை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது என்றாலும், இந்திய இராணுவம் ஏதோ நேபாள இராணுவத்தை விட வலிமையற்றது போலவும், சீனா போர் தொடுத்தால் ஒரே நாளில் மண்டியிட்டுவிடுமெனவும் இந்திய இராணுவத்தின் பலத்தை அறியாமல் பதியும் பதிவாளர்களைக் காண்கையில் உண்மையில் சிரிப்புடன் பரிதாபமே மேலெழுகிறது.

இந்திய இராணுவத்தின் பூர்வகுடிகள் மீதான ஒடுக்குமுறைகள் பற்றிய விமர்சனங்கள் எனக்கும் உள்ளது, அவ்வாறான முரண்கள் இருப்பின் அது உள்நாட்டு பிரச்சினை, அதனை விமர்சிக்க இந்திய ஒன்றிய மக்கள் அனைவருக்கும் முழு உரிமையுண்டு. ஆனால் எதிரி நாடு போர்ப்பிரகடனம் செய்து வரும்பொழுது நம் நாட்டிற்கும் அதன் இராணுவத்திற்கும் ஆதரவாகத்தான் நிற்க வேண்டுமே ஒழிய பகடி செய்து தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொள்ளக் கூடாது.
மேலும் சீனா இந்தியா மீது பொர்த்தொடுத்தால் அதற்கும் சேர்த்தே அழிவும் பின்னடைவும் பலனாகக் கிட்டும், இது 1962 அல்ல என்பதை சீனம் உணர்ந்தே உள்ளது, ஏனோ பாசக வெறுப்பில் உள்ள சிலர்தான் அதை உணரவில்லை போலும்.
- சௌத்ரி மாதேசுவரன்