முப்பது வருடங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் தன்னுடைய புகழ்பெற்ற ஷா பானு வழக்குத் தீர்ப்பை வழங்கியது. ஒரு இஸ்லாமிய ஆண் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அவளுக்கு ஜீவனாம்சம் தருவதை நிறுத்திக் கொண்டார். அந்தத் தைரியம் மிகுந்த பெண் நீதிக்காகத் தொடர்ந்து அயராமல் போராடி உச்சநீதிமன்ற வாசலை அடைந்தார். இறுதியாக ஏப்ரல் 23, 1985 அன்று ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. ஜீவனாம்சம் கோரிய ஷா பானுவுக்கு அவர் வாழ்க்கைக்குப் போதுமான நிதியை தரவேண்டும் என்று உத்தரவிட்டது.
ஷா பானு வழக்கு இரு வகையான சட்டங்களுக்கு இடையே சிக்கலைக் கொண்டு வந்தது. குறிப்பிடப்பட்ட காலத்துக்குப் பிறகு
பராமரிப்புத் தொகை எதையும் தரவேண்டியது இல்லை என்று முஸ்லீம் தனிச்சட்டம் குறிப்பாகப் பேசுகிறது. ஆனால், குற்ற நடைமுறை சட்டம் பிரிவு 125 போதுமான அளவு வருமான மூலம் உள்ள ஆண் திருமணம் செய்துகொண்ட பெண்ணைப் பிரிந்தாலும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பேசுகிறது.
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் CrPC சட்டப்பிரிவு 125 ஐ உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டது. ஒரு மனதாகத் தரப்பட்ட இந்தத் தீர்ப்பில் இஸ்லாமிய தனிநபர் சட்டப்படி இஸ்லாமிய கணவன் தான் முடிவு செய்தால் தன்னுடைய மனைவியை நல்ல, மோசமான காரணங்களுக்காகவோ, காரணமே இல்லாமல் கைவிடலாம் என்பதை ஏற்க முடியாது. மேலும் குறிப்பிட்ட காலமான இதாத் காலத்தில் கொடுக்கும் பணம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் அது அதற்குப் பிறகு அப்பெண் தன்னுடைய உடல், ஆன்மாவை பராமரிக்க எதையும் அவன் தரவேண்டியதில்லை என்பதை எத்தனை கருணையற்ற ஒன்று?’ எனக் கேட்டார்கள்.
இப்படி அடிப்படைகளைத் தொட்ட பின்பு உச்சநீதிமன்றம் அரசமைப்பின் சட்டப்பிரிவு 44 பொதுச் சிவில் சட்டம் தேவை என்று கூறியிருந்தாலும் எந்தவொரு அதிகாரப்பூர்வ நடவடிக்கையும் அது சார்ந்து எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டார்கள். நீதிமன்றம், ‘பொதுச் சிவில் சட்டம் முரண்பாடான தத்துவங்களைக் கொண்ட சட்டங்களுக்கு வெவ்வேறு வகையான நேர்மை கொண்டிருக்கும் பிரிவினைகளை நீக்கி தேச ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.’
அரசமைப்பின் சட்டப்பிரிவு 44 ஏன் ஒரு வெற்றுக்காகிதமாக ஆனது? பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் அரசமைப்பை உருவாக்கிய மற்றவர்கள் ஒரு காலத்தில் இந்த நாட்டில் பொதுச் சிவில் சட்டம் அமலுக்கு வரும் என்று நம்பினார்கள். இந்தியா ஒரு பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டிருக்க முடியாத அளவுக்குப் பரந்து விரிந்த நாடு என்று சொல்லப்பட்ட பொழுது ஏற்கனவே பொதுவான கிரிமினல் சட்டத்தை நாடு கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.தனிநபர் சட்டத்தை ‘நாடு சீர்திருத்தாவிட்டால்சமூகப் பிரச்சினைகளில் நாடு தேக்க நிலையை அடைந்துவிடும்’ என்று எச்சரித்தார்
அதே சமயம் சட்ட அமைச்சராக அம்பேத்கரும், பிரதமராக நேருவும் ஒரே அடியாகப் பொதுச் சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது புத்திசாலித்தனமானது இல்லை என்று எண்ணினார்கள். முதலில் பெரும்பான்மை சமூகத்தின் தனிநபர் சட்டங்களை அவர்கள் சீர்திருத்த களமிறங்கினார்கள். இந்து ஆண், பெண் இருவரும் தங்களுக்கான இணையை ஜாதிகளைக் கடந்து தேர்வு செய்யும் உரிமை, கொடுமை, மனமொப்பமின்மை முதலிய சூழல்களில் விவாகரத்து பெறுவது, ஒரு இணைக்கு மேலே திருமணம் செய்து கொள்ள மறுப்பு என்று பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
வேறு சில சீர்திருத்தங்கள் பெண்களின் நிலையைக் குறிப்பாக உயர்த்துவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தன. ஆகவே, முதல் முறையாக விதவைகள், மகள்கள் ஆகியோருக்கு மகனைப் போலவே சொத்தில் சம பங்கு கணவன் இறக்கிற பொழுது வழங்கப்படுவதற்கு வழிவகைச் செய்யப்பட்டது.
அம்பேத்கர், நேரு இந்துச் சட்டங்களைச் சீர்திருத்த முக்கியக் காரணம் பெரிய அளவில் தாராளவாத சிந்தனை கொண்ட இந்துக்கள் நிறையப் பேர் அவர்களை ஆதரித்தார்கள். இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். முதலிய கடுமையான எதிர்ப்புகளைக் கொடுத்த அமைப்புகளை எதிர்கொள்ள அவர்கள் போதிய ஆற்றலும், எண்ணிக்கையும் கொண்டவர்களாக இருந்தார்கள்.
அப்படியும் இந்தச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பத்து வருடங்கள் ஆகின. அவை சட்டங்களாக ஆனபிறகு சட்டத்துறை வல்லுனர் மார்க் கலான்டேர் அவற்றை, ‘முழுமையான, மகத்தான சீர்திருத்தம்’ எனவும், ‘சாஸ்திரங்கள் இந்து சட்டங்களின் மூலமாக இருந்ததை இவை எடுத்துக் கொண்டன’ என்றும் குறித்தார்.
அம்பேத்கர், நேரு இருவரும் காலப்போக்கில் இதே போன்ற தாராளவாத சிந்தனை கொண்ட சக்திகள் இஸ்லாமிய சமூகத்தில் இருந்து எழுந்து அவர்களின் சமூகத்தின் தனிநபர் சட்டங்களை நவீன காலப் பாலின சமத்துவத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பார்கள் என்று நம்பினார்கள். ஆனால், சோககரமாக அப்படி எதுவும் நடைபெறவில்லை.
ஆனால், 1985-ன் உச்சநீதிமன்ற தீர்ப்புப் பொதுச் சிவில் சட்டம் பற்றிய விவாதத்தை மீண்டும் துவங்கி வைத்தது. நவீன சிந்தனை கொண்டவராக அப்பொழுது அறியப்பட்ட ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த பொழுது அவரின் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் நானூறு எம்.பி.க்கள் இருந்தார்கள். பிறகு ஏன் பொதுச் சிவில் சட்டத்தை எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவாக உச்சநீதிமன்றம் வழங்கிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நிறைவேற்ற அவர் முனையவில்லை?
உண்மையில் ராஜீவ் காந்தி ஷா பானு வழக்குத் தீர்ப்பு வந்ததும் முதலில் அதை வரவேற்கவே செய்தார். பழமைவாத இஸ்லாமியர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை நாடாளுமன்றத்தில் எதிர்த்த பொழுது அதற்கு அற்புதமாகப் பதிலைத் தந்ததே மத்திய அமைச்சரே ஆரிப் முகமது கான் என்கிற இஸ்லாமியர் தான். ஆனால், வெகு சீக்கிரமே பிரதமர் ஆரிப் முகமதுவின் கருத்தில் இருந்து தன்னை வேறுபட்ட பார்வை கொண்டவராகக் காட்டிக்கொள்ள வேண்டிய நிலை உண்டானது.
அப்படி ஆரிப் முகமதை ஆதரித்தால் காங்கிரஸ் இஸ்லாமியர்களின் வாக்குகளை இழக்க வேண்டி வரும் என்கிற அச்சமே இப்படி ராஜீவை செயல்பட வைத்தது. தைரியமான, நேர்மையான முறையில் தன்னுடைய பெரும்பான்மையைப் பெண்களின் உரிமைகளைக் காக்கவும், அதிகரிக்கவும் பயன்படுத்தியிருக்க வேண்டிய ராஜீவ் காந்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கும் சட்டத்தை நிறைவேற்ற பெரும்பான்மையைக் கோழைத்தனமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
முப்பது வருடங்களுக்குப் பிறகும் சட்டப்பிரிவு 44 வெற்றுக்காகிதமாகவே இருக்கிறது. இது தொடர்பான விவாதத்தை முன்னெடுக்க யாரேனும் முயல்கிற பொழுது ஆச்சரியப்படும் வகையில் சக்திகள் அணிதிரள்வதைக் காண இயலும். பாரதிய ஜனதா கட்சியின் கருத்தியல் முன்னோடிகள் இந்து தனிநபர் சட்டத்தில் சீர்திருத்தங்கள் வருவதை எதிர்த்ததற்கு (அவை பெண்களுக்கு மிகவும் அதிகமாக விடுதலை தருவதாக) தலைகீழாகப் பா.ஜ.க. பொதுச் சிவில் சட்டத்தை ஆதரிக்கிறது.
நேருவின் பாதையில் நடப்பதாகச் சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் பொதுச் சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதைக் கடுமையாக எதிர்க்கிறது. நேருவே ஒரு காலத்தில் பொதுச் சிவில் சட்டம் வரும் என்று நம்பினாலும் காங்கிரஸ் இப்படி நடந்து கொள்கிறது.
காங்கிரஸ் கட்சியிடம் இதைவிட ஒன்றை தற்போதைக்கு எதிர்பார்த்துவிட முடியாது.
ஆனால், உண்மையில் புரியாமல் இருப்பது பல முக்கியத் தாராளவாத சிந்தனையாளர்கள், பெண்கள் ஆகியோரும் பொதுச் சிவில் சட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காமல் ஒதுங்கிக்கொள்கிறார்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது அடிப்படை உரிமை அல்லவா? பெண்ணியாவதிகளின் மைய செயல்திட்டத்தில் பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் சட்டங்களை எதிர்ப்பது (மதங்களின் தனிநபர் சட்டங்கள் செய்வது போன்ற சட்டங்கள் ) இருக்க வேண்டும் அல்லவா?
பா.ஜ.க. ஆதரிக்கிறது என்பதற்காகவே அதை எதிர்க்க வேண்டுமா?
ஷா பானு சர்ச்சைக்குப் பிறகு செயல்பாட்டாளர்-அறிஞர் வசுதா தாகம்வார் ஒரு சிறிய புத்தகத்தைப் ‘பொதுச் சிவில் சட்டத்தை நோக்கி’ என்கிற தலைப்பில் எழுதினார். அதை இந்திய சட்ட அமைப்பு வெளியிட்டது. அதை அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். அந்நூல் பொதுச் சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தில் அறிவார்ந்த, தத்துவார்த்த வாதங்களைப் பொதுச் சிவில் சட்டத்துக்கு ஆதரவாக, அற்புதமாக எடுத்து வைக்கிறது.
பொதுச் சிவில் சட்டத்துக்கான இயக்கத்தின் நோக்கத்தில் பொதுத்தன்மையை நாடு முழுக்கக் கொண்டுவந்து தேச ஒற்றுமையை வேகப்படுத்த விரும்புவது இருக்கிறது. இந்துத்வா கருத்தியலில் நம்பிக்கை உள்ளவர்கள் சிறுபான்மையினரை தொடர்ந்து திருப்திப்படுத்தவே பொதுச் சிவில் சட்டம் வரவில்லை என்று தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறார்கள்.
கேள்வி என்னவென்றால் தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுகள் வலதுசாரி இந்துக்கள் சொல்வது போலத் தொடர்ந்து பராமரித்து வந்தது என்றால் ஏன் இன்னமும் அவர்கள் பரம ஏழைகளாக, வறுமை சூழந்தவர்களாக இருக்கிறார்கள்/ தாகம்வார் ‘சிறுபான்மையினர் பராமரிக்கப்படவில்லை, அவர்களின் போலியான, சுயநலம்மிக்கத் தலைவர்கள் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்.’ என்று எழுதுகிறார்.
தாகம்வார், ‘இஸ்லாமிய சமூகம் ஒற்றைப்படையானது அல்ல’ என்பதை அழுத்திச் சொல்கிறார். ஷா பானு தீர்ப்பு வந்த பொழுது அதனை எண்ணற்ற இஸ்லாமிய அறிவுஜீவிகள், பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் ஆதரித்தார்கள். அந்தக் குரல்கள் ‘இஸ்லாம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஆபத்தில் உள்ளது’ என்று பெருங்குரல் கொடுத்த அடிப்படைவாதிகளின் சத்தத்தில் ஒடுங்கிப் போனது. ஷபனா ஆஸ்மி இப்பொழுது எழுதிய, வரிகளான’ நெடுங் காலமாகப் பெண்கள் தனிநபர் சட்டம் என்கிற போர்வையில் கொடுமைப்படுத்தப்பட்டும், நீதி மறுக்கப்பட்டும் துன்புறுத்தப் படுகிறார்கள்’ என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.
இஸ்லாமின் சிறந்த வரலாற்று அறிஞரான A.A.A.பைஸின் வரிகளைத் தாகம்வார் குறிப்பிடுகிறார், ’பரிணாமம் என்பது மனிதச்சமூகத்தோடு உடன் இணைந்து. இறந்துபோனவை, உயிரற்றவை தவிர வேறு எதுவும் நிலையானது அல்ல/ சட்டங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி நிச்சயம் இருக்க முடியாது. ‘ மனுவின் சட்டங்கள் தீண்டாமையை அங்கீகரித்தன. அந்தக் கொடிய நடைமுறையை இந்திய அரசியலமைப்புச் சட்ட்டம் நீக்கியது.
அதே போல, குரான் பலதார திருமணத்தை ஆதரிக்கிறதா இல்லையா என்பது தேவையற்றது. நம் முன் உள்ள கேள்வி பாலின சமத்துவத்தில் நவீன பார்வையைக் கொண்ட சமூகம் இவற்றை ஏற்க வேண்டுமா என்பதுதான்.
பொதுச் சிவில் சட்டத்துக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் இன்னுமொரு வாதம் சட்டத்தெளிவு ஆகும். தாகம்வார் சுட்டிக்காட்டுவது போல, ”இந்திய சட்டமைப்பு பல்வேறு வகையான சட்டங்களை உருவாக்கி ஒரு புறம் சட்டங்களைக் கொண்டு உரிமைகளைத் தந்துவிட்டு, இன்னொரு புறம் மதத்தைக் கொண்டு அதே உரிமைகளைப் பறித்துக்கொள்வதைச் செய்கிறது’
A சில பெண்ணியவாதிகள் பொதுச் சிவில் சட்டத்தை அது இந்து சட்டங்களைச் சிறுபான்மையினர் மீது திணிப்பதாகச் சொல்லி எதிர்க்கிறார்கள். இந்த வாதம் உண்மைக்குப் புறம்பானது. ஐம்பதுகளில் கொண்டுவரப்பட்ட இந்து தனிநபர் சட்டங்களையே தற்போது நீட்டிக்க வேண்டும் என்று ஒருவர் கேட்கவில்லை. சட்டங்கள் காலத்துக்கும் ஒரே மாதிரி இருப்பவை அல்ல. அந்தச் சட்டங்கள் சில வகைகளில் குறைபாடுகள் கொண்டதாகவும், முழுமையற்றதாகவும் உள்ளதை நாம் உணர்ந்துள்ளோம். அறுபது வருடங்கள் ஆன நிலையில் இந்தியாவின் மிகச்சிறந்த சட்டத் துறை நிபுணர்கள் ஒன்றாக அமர்ந்து பொதுச் சிவில் சட்டத்தை முதன்மையான தத்துவங்களின் அடிப்படையிலும், சிறந்த அறிவின் அடிப்படையிலும் சீர்திருத்த வேண்டும்..
பாஜக பொதுச் சிவில் சட்டத்தைக் கோருவதாலேயே பல தாராள சிந்தனை கொண்டவர்கள் அதை எதிர்ப்பதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட தடாலடி எதிர்வினைகள் துரதிர்ஷ்ட வசமானது. சமூகப் பழக்கங்களான திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, சொத்துரிமை, தத்தெடுத்தல் முதலியவற்றைப் பொதுவான சட்டங்களைக் கொண்டு நெறிப்படுத்துவது அவசியம். இதை உலகின் சிறந்த சட்ட நடைமுறைகள், பாலின சமத்துவப் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் செய்ய வேண்டும்.
– Ramachandra Guha