
கட்சி சாராதவர்களை அப்பதவியில் அமர்த்த வேண்டும் என்ற காலம் மலை ஏறி விட்டது! எந்தக் கட்சியும் பிறர் விமர்சனத்தையோ, சுயவிமர்சனத்தையோ ஏற்கும் மனப்பாங்கு இன்றைய அரசியல் சூழலில் இந்தியாவில் இல்லை. எனவே இது ஒரு நிதிச்சுமையாக, குறுக்கீடுகளாகவே இருக்கும்
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் மேல் சபை, சட்ட மன்றம் எடுக்கும் முடிவுகளை, திட்டங்களை, முன்மொழிதல்கள் முதலியவற்றை கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார மேதைகள், அரசியல் ஆளுமை மிக்க தலைவர்கள் விவாதித்துச் சட்ட மன்ற முடிவுக்கு ஆலோசனை வழங்கிச் செயல்பட்டது.
ஆனால் இப்போது இந்திய அரசியலில் பதவி மோகமும்,
கட்சி மாறுவதும், கொள்கையில்லாத மனப்போக்கும் அதிகரித்து விட்டன. எந்தக் கட்சியும் ஆட்சியும் வல்லுநர்களின் விமர்சனத்தை ஏற்கும் மனப்பாங்கு இப்போது இல்லை.
இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு அதிகக் கடன் சுமையும், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் செய்ய பெரு நிதியைப் பல வழிகளில் அதிகரிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
எனவே மாநில அரசு அமைத்துள்ள கொள்கை முடிவுக்
குழுவின் ஆலோசனைகளைப் பெற்று தமிழக அமைச்சர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டால் தமிழ்நாட்டை அறிவு வளமிக்க, தொழில் நிறைந்த, பொருளாதார வளர்ச்சிமிக்க உயர்த்த முடியும்.
கட்சிக்காரர்களுக்கும், கட்சிமாறி வந்தவர்களுக்கும்
பதவி கொடுக்க மேல்சபை உருவாக்கினால் நிதிச்சுமையும், அரசியல் சிக்கலும் விரைவான கொள்கை முடிவுகளில் தாமதம் ஏற்படும். இது ஆட்சிக்கு விரும்பி வரவேற்கும் இன்னொரு பிரச்னையாகி விடும்.
தாங்கள் விரும்பும் கட்சிக்காரர்களைத் திருப்திப்படுத்த வாரியங்களில் பதவி வழங்கலாம். அமைச்சர்களில் பல முறை பதவியில் இருந்தவர்களை மாற்றி விட்டுப் புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துக் கட்சியை, ஆட்சியை மேம்படுத்தலாம். 75 வயதுக்கு மேல் இருப்பவர்களைக் கட்சியின் வளர்ச்சிக்குழுவில் இடம் பெறச் செய்யும் விதிமுறையைக் கொண்டு வேண்டும். கட்சியில் மூத்த முன்னோடிகள் காலச்சூழலை அறிந்து முதியவர்கள் பதவியை விட்டுக்கொடுத்துத் தலைமைக்கு வலிமை சேர்க்க வேண்டும்.
எனவே தமிழ் நாடு அரசு கல்வி, மருத்துவம், தொழில், வேளாண்மை, அறிவியல் ஆராய்ச்சி, கலைப்பண்பாடு, நீர்மேலாண்மை, வேலைவாய்ப்பு முதலியவற்றில் திட்டமிட்டுச் செயல்பட மேலவை உருவாக்க முன்முயற்சிகளைக் கைவிட்டுச் சிறப்பான ஆட்சி நடத்த வேண்டுகிறேன்.
- பெ.சுபாஷ் சந்திரபோஸ்,
பேராசிரியர் (பணிநிறைவு), திருச்சி