
பாரதத் தாயின் தவப்புதல்வர் வீர சாவர்க்கர் நினைவுதினம் இன்று.
நாடு முழுவதும் தாக்குதல் நடத்தி வெள்ளையனை விரட்டிட அவர் போட்ட புரட்சித் திட்டம் காலத்தின் சதியால் கைகூடவில்லை. செக்கிழுத்த செம்மல் வ.உ.சி-யைப் போல இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற விடுதலைப் போராட்டத் தியாகி.
தாய் நாடு பிரிக்கப்பட்டபோது அதனைத் தடுக்க கடும் முயற்சி மேற்கொண்டவர். அது கைகூடாவிட்டாலும், பிளந்துபோன பாகிஸ்தானுக்கு முழு பாஞ்சாலமும் முழு வங்காளமும் தாரைவார்க்கப்பட இருந்ததைத் தடுத்து நிறுத்திய புண்ணியவான். அத்துடன் மேற்கு பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தானுக்கு பாரதத்தின் வழியாக போடப்படவிருந்த வழித்தட யோசனையையும் விழிப்புணர்வுடன் வழித்தெறிந்தவர்.
அப்பெருமகனார் எழுத்தாளர், ஆய்வாளர் மற்றும் மாபெரும் கவிஞரும்கூட. அன்னாரின் மராட்டியக் கவிதை ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்து தியாகசீலருக்குக் காணிக்கை மலராய் சமர்ப்பிக்கிறேன்.

பாரதத்தாய் அடிமையானதேன்?
வீரசாவர்க்கர் கவிதை
தமிழில்: பத்மன்
அன்னையே கதறுகின்றேன் நின்னகம் புகுந்தே
அன்னிய ராட்சதர் ஆக்கிரமித் ததெவ்விதம்?
என்னதாயே சொல்கின்றாய்! ஆக்கிரமிப் பல்லவிது
முன்னமென் மூடத்தனம் மூட்டிய வரவழைப்போ?
பலமிருந்த போதுநானோ வளமிகுந்த புண்ணியவான்
அயலவனின் கொள்ளைகளால் ஆற்றொண்ணாப் பாவியானேன்
என்றழியும் அன்னையே என்னுடை மதிமயக்கம்?
நற்குண வரமெனக்கு நாசந்தரும் சாபமன்றோ!
கொடுவிலங்கு நின்மேனி குதறிடும் வேளையிலே
கொல்வது பாவமெனக் கதிகலங்கி நிற்கிறேனே!
காத்திடும் நரசிம்மனைக் கைவிட்டேன் கண்டனையோ
காராம் பசுவினைக் கைதொழும் அற்பனானேன்
புலியென முன்பிருந்தேன் புழுங்குகிறேன் ஐயோ!நான்
பூஜிக்கும் பசுவினும் பயந்திடும் சாதுவானேன்!
நின்னைக் கடித்ததுயார்? நஞ்சை உமிழ்ந்தது யார்?
பால்வார்த்த பாம்பன்றோ பல்லைப் பதித்துள்ளது!