February 7, 2025, 12:54 PM
30.4 C
Chennai

‘சோ’- ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது வெறும் அலங்கார வார்த்தையல்ல!

டிசம்பர் 7: சோ நினைவு தினம்

— திருப்பூர் கிருஷ்ணன் —
( ஆசிரியர், அமுதசுரபி )

*துக்ளக்கில் சோவின் கேள்வி பதில் பகுதி மிகவும் புகழ்பெற்றது. மாதிரிக்கு என் நினைவிலிருந்து சில கேள்வி பதில்கள் இதோ:

*கே.: நீங்கள் ஒரு முட்டாள் என்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ப: பாம்பின்கால் பாம்பறியும்!

கே. : மீண்டும் அதே கேள்விதான். நீங்கள் ஒரு முட்டாள் என்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சென்றமுறை சொன்ன பதிலை மறுபடி சொல்லக் கூடாது!

ப.: தன்னைப் போலவே பிறரையும் நினைக்கும் உங்கள் உயர்ந்த மனப்பான்மைக்குப் பாராட்டு!

கே.: மழை ஏன் சோவென்று பெய்கிறது? (கேள்வி கேட்டவர் குப்புச்சி பாளையம் கு.மா. கணேசன்.)

ப.: குப்புச்சி பாளையம் கு.மா. கணேசா என்று பெய்தால் மழைக்கு வாய் வலிக்கும்!

கே.: நீங்கள் பைத்தியமா இல்லை முட்டாளா?

ப.: இரண்டில் ஒன்று என முடிவு செய்ய வேண்டாம். ஏன், ஒரு முட்டாள் பைத்தியமாகவும் இருக்கக் கூடாதா?

***

*சோவுக்கும் நா.பா.வுக்கும் இடையே இருந்த நட்பு நாடறிந்தது. சோ, நா.பா. எழுத்துக்களின் ரசிகர். நா.பா., சோ எழுத்துக்களின் ரசிகர்.

அவர்களிடையே இருந்த நட்பு உறுதிப்படக் காரணமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜ்.

ஸ்தாபன காங்கிரஸ் மேடைகளில் பெருந்தலைவரை ஆதரித்து நா.பா.வும், சோவும் இணைந்து பேசியதுண்டு.

நா.பா., சோ, கண்ணதாசன், ஜெயகாந்தன் எனத் தமிழ் மொழியின் முக்கியமான ஆளுமைகள் அனைவரும் பெருந்தலைவர் அணியில் ஒன்றுதிரண்ட காலம் அது.

நான் நா.பா.வின் தீபம் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்த புதிது. சென்னையில் அண்ணாசாலையில் இப்போது விகடன் அலுவலகம் இருக்கும் இடத்தின் முன்பகுதி அப்போது பெரிய மைதானமாக இருந்தது. அங்கு ஒரு மாபெரும் கூட்டம் ஏற்பாடாகியது.

சோ, நா.பா., ஜெயகாந்தன், தா. பாண்டியன் போன்றோர் காந்தி, ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஜீவா போன்றோரைப் பற்றி ஆளுக்கு ஒரு தலைவர் எனப் பேசுவதாக ஏற்பாடு. பெருங்கூட்டம் திரண்டிருந்தது.

நான் நா.பா.வோடு கூட்டத்திற்குச் சென்றேன். நான் பார்வையாளர்களிடையே அமர, நா.பா. மேடைக்குச் சென்றார்.

கூட்டம் பேச்சாளர்களின் பேச்சைக் கேட்க ஆவலோடு காத்திருந்தது. காரணம் அன்றைய கூட்டத்தில் பேசவிருந்த அனைவரும் நட்சத்திரப் பேச்சாளர்கள்.

அன்றுதான் சஞ்சய் காந்திக்கு மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டிருந்தது. சோ பேசுவதற்காக மேடையில் ஒலிபெருக்கிமுன் வந்தார்.

தம் வழக்கமான பாணியில் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

`எனக்குத் தரப்பட்டுள்ள தலைப்பில் நான் பேசுவதற்கு முன் சஞ்சய் காந்திக்கு அஞ்சல் தலை வெளியிட்டிருப்பதைப் பற்றிய என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

சஞ்சய் காந்தி அஞ்சல் தலை வெளியீடு பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று தெரிந்துகொள்ள நீங்கள் ஆவலாக இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்` என்று தன் பேச்சைத் தொடங்கினார்.

மறுபடி தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசலானார். பேசிய ஒவ்வொரு வாக்கியத்திற்கும் இடையே அவர் நீண்ட இடைவெளி விட வேண்டியிருந்தது.

காரணம் அவர் ஒவ்வொரு வாக்கியத்தைச் சொல்லி முடித்ததும் கூட்டத்தின் கைதட்டலும் ஆரவாரமும் அடங்கப் பல நிமிடங்கள் ஆயின.

`நான் சஞ்சய் காந்திக்கு அஞ்சல் தலை வெளியிட்டதை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன். ஏனென்றால் சஞ்சய் காந்தி மாதிரி நபருக்கே அஞ்சல் தலை வெளியிடுவார்கள் என்றால் எதிர்காலத்தில் நம் எல்லோருக்கும் கூட அஞ்சல் தலை வெளியிடப்படும் என நாம் நம்பலாம் அல்லவா?`

எனத் தொடங்கி இன்னும் பலவிதமாக அடுக்கிக் கொண்டே போனார் சோ.

`மகாத்மா காந்திக்கும் அஞ்சல் தலை. சஞ்சய் காந்திக்கும் அஞ்சல் தலையா?` எனக் கேட்டு தன் பேச்சின் அந்தப் பகுதியை அவர் முடித்தபோது பேச்சின் அடுத்த பகுதிக்கு அவர் செல்ல நீண்ட நேரம் ஆகியது. காரணம் கைதட்டல் ஓயவில்லை.

நான் சோவின் துணிச்சலையும் நகைச்சுவையையும் உணர்ந்து பிரமித்துப் போயிருந்தேன்.

கூட்டம் முடிந்து நா.பா.வும் நானும் நா.பா. வின் வீட்டுக்குக் காரில் வந்தோம். நான் `என்ன இத்தனை தைரியமாகப் பேசுகிறார் சோ!` என வியந்தபோது நா.பா. சொன்னார்:

`துணிச்சலும் நகைச்சுவை உணர்வும் சோவின் ரத்தத்திலேயே கலந்திருக்கிறது! அவருக்கு தலையில் மட்டுமல்ல, உடம்பெல்லாம் மூளை!`

அதன்பிறகு சோ எங்கு பேசினாலும் அவர் பேச்சைக் கேட்க நான் போவது வழக்கமாகியது.

`இன்று மாலை சோ கூட்டமா? நீங்கள் போவீர்களே?` எனச் சிரித்துக் கொண்டே நா.பா. கேட்பதும் வழக்கமாகியது.

சோ கேட்டுக் கொண்டதன் பேரில் துக்ளக்கில் கட்டுரைத் தொடர் எழுதலானார் நா.பா.

ஒவ்வொரு கட்டுரையையும் எழுதி முடித்தபின் தானே காரில் நேரில் சென்று சோவிடம் கொடுத்துவிட்டு நீண்ட நேரம் உரையாடிவிட்டு வருவார். அப்போதெல்லாம் என்னையும் உடனழைத்துச் செல்வார்.

நான் நா.பா. எழுத்துக்களின் ரசிகன் என்பதோடு கூட, சோவின் ரசிகனும் கூட என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

நான் சோவின் ரசிகனாக இருப்பது பற்றி நா.பா.வுக்குப் பொறாமை கிடையாது. பெருமிதம் தான் உண்டு. காரணம் நா.பா.வே சோவின் பரம ரசிகர்தான்.

நா.பா. தினமணி கதிருக்கு ஆசிரியரானபோது சோவிடம் தொடர் கேட்டார். சோ வாரந்தோறும் கதிரில் எழுதலானார். ஒருமுறை அவர் கட்டுரை வரத் தாமதமானபோது தினமணிகதிர் அலுவலகத்திலிருந்து இரவு பதினொன்றரை மணிக்கு தயங்கியவாறே அவரைத் தொலைபேசியில் அழைத்தேன்.

`எழுதிக் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் அனுப்பிவிடுகிறேன் சார்` என்று உற்சாகமாகப் பேசிவிட்டுத் தொலைபேசியை வைத்தார்.

சோவிடமும் நா.பா.விடமும் நான் கண்டு அனுபவித்த குணம் அவர்களின் வற்றாத உற்சாகம்தான். சோர்வென்பது அவர்கள் இருவரிடமும் அறவே கிடையாது.

இரவு பன்னிரண்டு மணிக்குத் தூக்கத்தில் சோவை எழுப்பினால் கூட அவர் அலுத்துக் கொள்ளாமல் உற்சாகமாகத் தான் பேசுவார் என்று தோன்றும். நா.பா. முகத்தில் களைப்பை நான் பார்த்ததேயில்லை. சோவிடமும் அப்படித்தான்.

நா.பா. காலமான பிறகு எழுத்தாளரும் கல்வியாளருமான வழக்கறிஞர் திருவள்ளூர் என்.சி. ஸ்ரீதரன் என் நெருங்கிய நண்பரானார்.

அவர் சோவின் நண்பரும் கூட. அவரோடும் சிலமுறை சோவைச் சென்று சந்தித்திருக்கிறேன்.

எவ்வளவு அவசரப் பரபரப்பில் அவர் இருந்தாலும் கனிவாக இரண்டு வார்த்தையாவது பேசாமல் சோ எங்களை அனுப்பியதில்லை.

சோவின் அளவுகடந்த சாதனைகளுக்கும் புகழுக்கும் காரணம் அவரிடம் வற்றாத ஜீவநதிபோல் எப்போதும் ஓடிக்கொண்டிருந்த சுறுசுறுப்புத் தான். அலுப்பும் களைப்பும் சோவின் அகராதியில் இல்லாத வார்த்தைகள்.


*82 வயது வாழ்ந்தவர் சோ. தந்தை சீனிவாச ஐயர். தாய் ராஜம்மாள். நடிகர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.

பகீரதன் எழுதிய தேன்மழை நாடகத்தில் சோ என்ற பெயருடைய பாத்திரத்தில் நடித்ததால் அவர் பெயர் சோ என்றே ஆகிவிட்டது.

தம்பியாக அண்ணனாக கதாநாயகனாக என்றெல்லாம் வேடமேற்று நடித்தவர் பெண்வேடம் கூடப் போட்டிருக்கிறார்.

ஆனால் ஒரு படத்தில், தான் யாரோ அதே பாத்திரத்தில் நடித்தார். அவர் பத்திரிகை ஆசிரியராக நடித்த படம் `நிறைகுடம்`. சோ தான் கதை வசனம். முக்தா சீனிவாசன் இயக்கம்.

உயிரோடிருக்கும் ஒருவர் இறந்துவிட்டதாக அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியாகும். காலமானதாகச் சொல்லப் பட்ட நபர் நேரில் வந்து சீறுவார்.

`எங்கள் பத்திரிகை செய்திகளை முந்தித் தரும் பத்திரிகை` என்று சொல்லும் சோ, `குறிப்பிட்ட நபர் இன்னும் காலமாகவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்பதாக மறுநாள் செய்தி வெளியிட்டுச் சரிசெய்வதாய்` வாக்குறுதி கொடுப்பார்!

நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் 180 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். சோவும் செல்வி ஜெயலலிதாவும் சேர்ந்து 19 படங்களில் நடித்திருக்கிறார்கள்.

சோவும் மனோரமாவும் சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். சோவின் `முகமது பின் துக்ளக்` திரைப்படமாக ஆனபோது அதில் இந்திரா காந்தி வேடத்தை ஏற்று நடித்தவர் நடிகை மனோரமா.

*அவர் எழுதிய ராமாயண மகாபாரத நூல்கள், இந்து மகா சமுத்திரம் என்ற நூல், எங்கே பிராமணன் என்ற நூல் போன்றவை குறிப்பிடத் தக்கவை.

ஈடுசெய்ய முடியாத இழப்பு என்கிறார்களே, சோவின் இறப்பு உண்மையிலேயே அப்படியான ஓர் இழப்பு.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது.

Topics

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது.

கெடுபிடி தடைகளைத் தகர்த்து, அதிர்ந்த திருப்பரங்குன்றம்; ஹெச்.ராஜா வீரமுழக்கம்!

நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு திருப்பரங்குன்றம் வந்த ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் ஆர்பாட்டம் ஏன் என்பது பற்றி உரை நிகழ்த்தினர்.

பஞ்சாங்கம் பிப்.04- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

உசிலம்பட்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

பாலமேடு அருகே 66 மேட்டுப்பட்டி உசிலம்பட்டியில்அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷே விழா நடைபெற்றது. 

Entertainment News

Popular Categories