
காசியில் கார்த்திகை தீபம் ஆயிரக்கணக்கில் ஜொலிக்கிறது: காசி தமிழ் சங்கத்தில் டிச.6 நேற்று பிரமாண்ட தீபத்திருவிழா கொண்டாடப் பட்டது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆம்பி தியேட்டர் மைதானத்தில் என்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் மற்றும் காசி குடிமக்களால் 5 ஆயிரத்து 100 விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்த விழாவை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்பதே இந்த காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியின் நோக்கம். தென்னிந்திய சமுதாய மக்கள் உலகில் எங்கும் வாழ்கிறார்கள், அவர்கள் இந்த பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். தீபங்கள் ஏற்றும் இந்த விழா, கார்த்திகை தீபத்திருவிழா என்று அழைக்கப்படுகிறது.

இந்த திருவிழா பற்றி புராணக்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது: தாங்களே உயர்ந்தவர்கள் என்று நம்பிய விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் முன் சிவபெருமான் ஒளியின் சுடராக தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் அவரது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த, தன் தலையையோ அல்லது பாதத்தையோ கண்டுபிடிக்கும்படி விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் சவால் விடுத்தார். உடனே, விஷ்ணு வராக வடிவம் எடுத்து பூமியின் ஆழத்துக்குச் சென்றார், ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பிரம்மா, அன்னம் உருவெடுத்து தாழம்பூ மலரின் உதவியால் சிவபெருமானை அடையாளம் கண்டுகொண்டதாக கூறினார். சிவபெருமான் அந்த பொய்யை உணர்ந்து, உலகில் பிரம்மாவின் கோவிலே இருக்காது என்றும், அவரை வணங்கும்போது தாழம்பூ பயன்படுத்தப்படாது என்றும் சாபமிட்டார். விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் முன் சிவபெருமான் ஜோதி வடிவில் தோன்றிய நாளே கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீபம் பற்றி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால லகேந்திரா, “இந்த கார்த்திகை தீபம் நிகழ்ச்சி இரண்டு கலாச்சார மையங்களின் சந்திப்பு. காசி தமிழ்ச்சங்க நிகழ்ச்சி நிரலின் கீழ் இன்று நடத்தப்படும் கார்த்திகை தீப நிகழ்ச்சியானது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இரு மாநிலங்களுக்கும் கலாச்சார உணர்வின் அடையாளமாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.