
— ஆர். வி. ஆர் (R. Veera Raghavan)
அண்மையில் கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 22 நபர்கள், சிகிச்சை பலன் இல்லாமல் மரணம் அடைந்திருக்கிறார்கள். இது நடந்தது விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்.
ஏழ்மையும் அறியாமையும் சேர்ந்து அவல வாழ்க்கை அமைந்ததால், பாதிக்கபட்ட மக்களுக்கு நேர்ந்த ஒரு கேடு இது. அதோடு, இப்போதைய திராவிட மாடல் அரசு கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களை, விற்பவர்களை, தோழமையோடும் பாசத்தோடும் நடத்துவதால், தமிழக அரசே இந்தக் கேட்டை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தது என்றாகும்.
கள்ளச் சாராயம் அருந்தி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பத்து லட்சம் ரூபாயும், ஆஸ்பத்திரி சிகிச்சை எடுத்து உயிர் பிழைத்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணமாக மாநில அரசு வழங்கும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். இதில் பத்து லட்ச ரூபாய் நிவாரணத்தை சமூக வலைத்தளங்களில் பரவலாகக் கண்டனம் செய்கிறார்கள். இதைக் கேலி, கிண்டல், பரிகாசம், இளக்காரம், லந்து என்று பல அடுப்புகளில் வறுத்தெடுக்கும் மீம்களும் ஏராளம்.
புயல், பெரு மழை, வெள்ளம், பூகம்பம் ஆகியவற்றால் பொருள் சேதமும் இறப்புகளும் ஏற்படலாம். அவை இயற்கைப் பேரிடர்கள். அப்போது ஒரு அரசாங்கம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்கு, ஓரளவு நிதி நிவாரணம் அளிக்கலாம். அது புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் கள்ளச் சாராயம் குடித்து உயிர் இழந்த ஒருவரின் குடும்பத்துக்கு அரசாங்கம் பத்து லட்ச ரூபாய் நிவாரணம் கொடுத்தால், அது நல்லதல்ல என்றுதான் நியாய உணர்வு கொண்ட அனைவரும் நினைப்பார்கள்.
கள்ளச் சாராயம் காய்ச்சுவது, எடுத்துச் செல்வது, விற்பது, வாங்குவது, அருந்துவது அனைத்துமே சட்டத்தால் தடை செய்யப் பட்டவை. கள்ளச் சாராயம் குடித்துவிட்டு இப்போது அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து பிழைத்து, அரசிடம் ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணம் பெறுகிறார்களே, அவர்கள் மீதும் அரசு சட்டப்படி வழக்குப் பதிய வேண்டும், தண்டனை பெற்றுத் தர வேண்டும். பின் எப்படி ஒரு அரசு, ‘கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர் குடும்பத்துக்கு பத்து லட்சம்’ என்று நினைத்துப் பார்க்க முடிகிறது? இதற்கு நாமே விடையை ஊகிக்கலாம்.
இப்போது கள்ளச் சாராயத்தால் உயிர் இழந்தவர்கள், சாதாரண ஏழை மக்கள். நல்ல கல்வி பெறுவது, வசதி பெருக்குவது, செல்வம் சேர்ப்பது என்பதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம். அதற்கான வாய்ப்புகளை ஏழை எளியவர்களுக்கு ஒரு அரசு சிறப்பாக ஏற்படுத்தவில்லை என்பதால், அந்த மக்கள் தங்களின் வாழ்க்கை நிலைக்கு அரசின் மீது குறை காண மாட்டார்கள். “விதியே” என்று காலம் தள்ளுவார்கள். இருந்தாலும், எப்படியோ ஜீவித்து உயிர் வாழ்ந்து அவர்கள் வழியில் வாழ்க்கையை அனுபவிப்பது, அந்த சாதாரண மக்களுக்கும் முக்கியம் – எல்லா மனிதர்களையும் போல். ஆனால் அரசாங்கத்தின் அலட்சியத்தால், செயல் இன்மையால், அந்த மனிதர்களில் யாருக்கும் உயிர் இழப்பு ஏற்பட்டால் அவர்களின் சொந்தங்கள் மற்றும் பகுதி மக்கள் வீதிக்கு வருவார்கள், அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவார்கள். எதிர்க் கட்சிகள் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து அதைப் பெரிதாக்குவார்கள். அப்போது பொதுமக்கள் பலரும் அரசாங்கத்தை விரோதியாகப் பார்க்க ஆரம்பிப்பார்கள். ஆட்சி திணறும். அரசு நடத்தும் கட்சி அடுத்த தேர்தலில் ஓட்டுக்களை இழக்கும். இது ஒரு பக்கம்.
அடுத்த ஒரு பக்கம் இது. தமிழகத்தில் அரசாங்கம் டாஸ்மாக் கடைகளை நடத்தி மது விற்பனை செய்கிறது. அந்த மதுவில் உடனடியாக உயிர் பறிக்கும் விஷம் கலந்திருக்காது. ஆனால் கள்ளச் சாராயத்தில் அந்த உத்தரவாதம் இல்லை. கள்ளச் சாராயம் விற்பதும் வாங்குவதும் குடிப்பதும் குற்றம் என்று சட்டமே சொல்கிறது. விஷமான கள்ளச் சாராயத்தை சில மக்களே ரிஸ்க் எடுத்து வாங்கிக் குடித்து உயிர் இழந்தால், அதற்கு அரசாங்கம் எப்படிப் பொறுப்பாகும்? பாதிக்கப் பட்ட மக்களோ அவர்களின் குடும்பத்தவரோ இதில் அரசின் மீது என்ன பெரிய குற்றம் காண முடியும்? இப்படியான பேச்சு ஓரளவு வரை சரி.
கள்ளச் சாராயம் உட்கொண்டதால் இறந்தவர் குடும்பத்துக்கு அரசு உதவித்தொகை வழங்க விரும்பினால், அது ஒன்று அல்லது இரண்டு லட்சம் என்று சிறிதாக இருந்தால், அதைப் பொதுமக்கள் பச்சாதாபம் கொண்டு ஏற்கலாம். ஆனால் அதுவே பத்து லட்சம் என்றால் நிச்சயம் முகம் சுளிப்பார்கள்.
பெருவாரியான மக்கள் இப்படித்தான் நினைப்பார்கள்:
‘ஒரு மனிதர் கள்ளச் சாராயம் குடித்து இறந்தார் என்றால், அவரது தீய பழக்கத்தால் அவர் இறந்தார் என்று அர்த்தம். இப்போது அரசாங்கம் அவர் குடும்பத்திற்குப் பத்து லட்ச ரூபாய் கொடுக்கிறது. நான் குடிப்பதில்லை. என் குடும்பத்திற்காக நான் உழைத்து சம்பாதித்து செலவு செய்கிறேன். எனக்கும் என் குடும்பத்திற்கும் பத்து லட்ச ரூபாய் இனாமாகக் கிடைத்தால், அந்தப் பெரிய தொகை என் குடும்பத்திற்கும் பயன்படும். என் வீட்டில் யாரும் இறக்கவில்லை, அவர் வீட்டில் ஒரு மனிதர் கள்ளச் சாராயம் குடித்துப் போய் விட்டார் என்பதெல்லாம் பத்து லட்சத்திற்கு ஒரு நியாயம் தராது. என் குடும்பத்திற்கும் அது போன்ற தொகை கிடைக்க வேண்டும் என்றால் நானும் கள்ளச் சாராயம் குடித்து மேலோகம் போக வேண்டுமா என்ன?’
கள்ளச் சாராயம் குடிக்காமல் டாஸ்மாக் மது மட்டும் குடிப்பவர்களின் எண்ணம் இப்படிப் போகும்: ‘என் மாதிரி டாஸ்மாக் சரக்கைக் குடிக்காமல், ஒருவன் கள்ளச் சாராயம் குடித்து இறந்தால் அதற்காக அந்த வீட்டுக்குப் பத்து லட்சமா?’
பொது மக்களின் இந்த மன நிலை திராவிட மாடல் அரசுக்குத் தெரிந்ததுதான். பின் எதற்காகப் பத்து லட்ச ரூபாயை அரசு இறந்தவர் குடும்பத்திற்கு அள்ளிக் கொடுக்கிறது? விஷயம் இருக்கிறது.
கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினர், தங்கள் கதியைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அது இப்படித்தானே இருக்கும்?
‘குடியைப் பெரிசா வளர்த்து விட்டது அரசாங்கம். அரசாங்கமே டாஸ்மாக் கடையும் நடத்துது. நிறையப் பேர் குடிச்சா அரசாங்கத்துக்கு வருமானம், அதுனால எல்லாரும் நல்லா குடிச்சுப் பழகட்டும், நல்லா பழகி நிறையா குடிக்கட்டும்னு அரசாங்கமே நினைக்குது.’
‘ஒரு மனுஷனை குடிக்கு ஆசைப்பட வைச்ச அரசாங்கம், அவன் அரசாங்கக் கடைல மட்டும் தான் வாங்கிக் குடிக்கணும்னு நினைச்சா அது நடக்குமாய்யா? குடி ஒரு போதை. அதுக்கு ஒருத்தன் பழகிட்டா, அந்த போதை எங்க சுளுவா கிடைக்குதோ, எந்நேரமும் எங்க கிடைக்குதோ, எந்த வியாபாரி சரக்குல கிக் அதிகம் கிடைக்குதோ, எங்க கம்மி ரேட்டுக்கு சரக்கு கிடைக்குதோ, அங்கதான போவான்?’
‘டாஸ்மாக்ல விலையும் ஜாஸ்தி. அப்படின்னா, போதைக்கு ஆசைப்பட்டு வர்றவன் என்ன நினைப்பான்? ‘கள்ளச் சாராய விலைல வரி இல்லை. டாஸ்மாக் சரக்குல வரி இருக்கு. அதுனால நாம டாஸ்மாக் கடைக்கு போய் அதிக விலைல சரக்கு வாங்கி அரசாங்கத்துக்கு வரி குடுப்போம். அதுவும் போக, டாஸ்மாக் கடைல அரசு நிர்ணயிச்ச விலையை விட பாட்டிலுக்கு பத்து இருபது அதிகம் கேட்டாலும் சிரிச்சுக்கிட்டே குடுப்போம்’னு நினைப்பானா?’
‘ஒருத்தனுக்கு திருடக் கத்துக் குடுத்துட்டு, ‘நான் சொல்ற இடத்துல மட்டும்தான் நீ திருடணும்’னு சொன்னா, திருட்டை கத்துக்கிட்டவன் கேப்பானா?’
‘எங்களுக்கு போதையக் கத்துக் குடுத்து, அது எங்க உடம்புக்கு தினம் வேணும்னு அரசாங்கமே பண்ணி வச்சுருக்கு. அதுனால இப்ப என்ன நடக்குது? அரசாங்கத்துக்குப் போட்டியா கள்ளச் சாராயம் விக்குது – அதுனால அரசாங்கத்துக்கு வரியும் கிடைக்கறதில்லை – கள்ளச் சாராயத்துல திடீர்னு விஷமும் கலந்து வருது – அது எங்க உயிரையும் எடுக்குது. அப்படின்னா, இவ்வளவு கேடு பண்ற கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்தாத நீ என்ன அரசாங்கம் நடத்தற, எதுக்கு நடத்தற?’
‘இப்ப சாவு நடந்த உடனே, கள்ளச் சாராயம் காய்ச்சறவன், விக்கறவன்னு, ஆயிரத்து ஐநூறு பேருக்கு மேல கைது பண்ணி வழக்கு பதிவு பண்ணிருக்கு அரசாங்கம். இத்தனை நாள் அவுங்களை எப்படி விட்டு வச்சீங்க? உங்க எல்லாருக்கும் என்னமோ நல்லா நடக்குதுல்ல? கள்ளச் சாராய வியாபாரிக்கு வருமானம், போலீசுக்கும் அதிகாரிங்களுக்கும் துட்டு, எங்களுக்கு சாவா? தூ!’
கள்ளச் சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இப்படித்தான் நினைப்பார்கள், அதில் நடைமுறை நியாயமும் உண்டு. அதற்கு அரசாங்கம் சட்ட ரீதியான பதிலை எளிதில் உதிர்த்துவிட்டுப் போக முடியாது. இது அரசாங்கம் நடத்துபவர்களுக்கே தெரியும். அதனால் ஆளும் கட்சியான திமுக, இப்படி நினைத்தால் ஆச்சரியம் இல்லை.
‘உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, ஒரு பெரிய தொகையை நிவாரணம் என்ற பேரில் அரசு வழங்குவதுதான், அவர்களின் நியாயமான குமுறலைப் பெரிதாக மூடி வைக்கும