spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைதிமுக-வின் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதம்: வெட்கம் கெட்டதற்கு வெளிச்சமா?

திமுக-வின் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதம்: வெட்கம் கெட்டதற்கு வெளிச்சமா?

- Advertisement -
dmk udhayanidhi neet fasting

— ஆர். வி. ஆர்

ஒருவர் வெட்கம் கெட்டவர் என்றால் என்ன அர்த்தம்? ‘தனது அசட்டுத்தனத்தை, அபத்தத்தை, அபாண்டத்தைப் பார்த்து விவரம் தெரிந்தவர்கள் சிரிப்பார்களே’ என்ற கவலை இல்லாமல் அதைச் செய்கிறவர் என்று அர்த்தம். அதை ஒரு சாதனையாக, ஊர் ஊராக மேடை போட்டு செய்தால் அது திமுக என்று அர்த்தம்.

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான ‘நீட்’-இல் இருந்து தமிழ்நாட்டிற்குச் சட்ட ரீதியான விலக்குத் தர வேண்டும் என்று கோரி வருகிறது திமுக. அதை வலியறுத்த தமிழக மாவட்டங்கள் தோறும் சமீபத்தில் மேடை போட்டு, அந்தக் கட்சியின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் ஒரு-வேளைக்கான கடும் உண்ணாவிரதத்தைக் கடைப் பிடித்தார்கள். அதோடு அபத்தமாகவும் பேசினார்கள்.

‘பன்னிரெண்டாம் வகுப்பு மார்க்குகளின் அடிப்படையில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்தினால் போதும். தமிழக மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வையும் நடத்தி அதன் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைகளைத் தமிழகத்தில் நடத்த வேண்டாம்’ என்பதுதான் திமுக-வின் நீட் விலக்குக் கோரிக்கை.

திமுக ஏன் ‘நீட் வேண்டாம்’ என்று சொல்கிறது? பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் நீட் நுழைவுத் தேர்வை விடத் தரமானவை, மாணவர்கள் அந்த வகுப்பில் எடுக்கும் மார்க்குகளின் அடிப்படையில் மட்டுமே தமிழ்நாட்டில் மருத்துவ சேர்க்கைகள் நடத்தினால் சிறப்பான மருத்துவர்களை உருவாக்கலாம் என்று திமுக நினைக்கிறதா? இல்லை – அப்படி நினைப்பதும் பேசுவதும் மிகப் பெரிய ஜோக் என்று திமுக-வுக்கே தெரியும்.

உண்மை நிலை எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரியும், விவரமான எல்லா மக்களுக்கும் புரியும், மருத்துவ ஆசை கொண்ட எல்லா மாணவர்களும் உணர்ந்ததுதான். அதாவது: நீட் தேர்வை விடப் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் எளிதானவை, பல மாநிலங்களில் சுமாராகப் படிக்கும் பணக்கார மாணவர்கள் அந்த வகுப்புத் தேர்வுகளில் அலட்டாமல் அப்பா ஆதரவுடன் பாஸாகலாம், அதிக மார்க்குகளும் வாங்கலாம், அந்த மார்க்குகளை வைத்து மருத்துவச் சேர்க்கைகள் நடத்தினால் ஏனோதானோ பாஸ், எப்படியோ பாஸ், என்று பாஸான மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகக் கோட்டாவில் ரகசிய பேச்சுக்கள் மூலம் அட்மிஷன் வாங்க முடியும். அதில் நிகழும் பணப் பறிமாற்றம், சப்புக் கொட்டி நிற்கும் அரசியல்வாதிகளின் பங்குக்கு மரியாதையாக வந்து சேரும்.

நீட் நுழைவுத் தேர்வின் கதை வேறு. அதில் தேறாமல் ஒரு மாணவர் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேர முடியாது. அந்தத் தேர்வு மத்திய அரசு ஏற்படுத்திய ‘நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி’ என்ற தனி அமைப்பால் இப்போது கறாராக நடத்தப் படுகிறது. அதில் மாநில அரசுகளின் தலையீடோ அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கைவேலையோ கிடையாது. திரைமறைவு வேலைகளால் அதில் மார்க் வாங்க முடியாது. ஒழுங்காகப் படித்து நீட்-டில் பாஸாகிறவர்களில் பணக்காரர்கள் சொற்பம் என்பதால், நீட்-டுக்கு முன்பு தமிழகத்தின் தனியார் கல்லூரிகளுக்கு கிடைத்த மலைப்பான நிர்வாகக் கோட்டா சம்பாத்தியம் இப்போது பெரிய அடி வாங்குகிறது. அந்த அடி, அரசு நடத்தும் அரசியல்வாதிகளுக்கும் வெளியில் சொல்ல முடியாத வலியைத் தருகிறது.

வலி தாங்காத தமிழக அரசியல்வாதிகள் பொங்குகிறார்கள். அவர்கள் மாநிலம் முழுவதும் மேடை போட்டுத் தங்கள் சுய நல ஆதாயத்திற்காக நீட் எதிர்ப்பு என்ற பேரில் ஒரு-வேளை உண்ணாவிரமும் நடத்துகிறார்கள். வெளிப் பேச்சுக்கு, ஏழை மாணவர்கள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்காகத் தாங்கள் போராடுகிறோம் என்று அபத்தமான காரணத்தைச் சொல்லி ஒரு நாடகத்தை வெட்கமில்லாமல் நடத்துகிறார்கள்.

தமிழகத்தின் மற்றொரு பெரிய கட்சியான அதிமுக-வும் நீட் நுழைவுத் தேர்வை எதிர்க்கிறது – திமுக எதிர்க்கும் அதே மறைமுகப் பயன்களுக்காக. இந்த விஷயத்தில் அதிமுக-விற்கும் திமுக-வைப் போல் ஆசை இருக்கிறது, ஆனால் திமுக-வைப் போல் அதிமுக பகிரங்கமாக வெட்கத்தை விடத் தயங்குகிறது. திமுக-தான் இப்போது ஆளும் கட்சி என்பதால், நீட்-டால் திமுக-விற்குத்தான் இப்போது கடுமையாக வலிக்கும், அவர்கள்தான் இப்போது அதிகம் துடிப்பார்கள்.

திமுக ஏன் இந்த அளவிற்கு வெட்கம் கெட்டு நிற்கிறது? அதை வெளிச்சம் போட்டும் காட்டுகிறது? அதற்கான காரணம், பெருவாரியான தமிழக வாக்காளர்களின் ஏழ்மையும் அதோடு சேர்ந்த அறியாமையும் – அதைத் திமுக-வின் தலைமை தனது சுய லாபத்திற்காகப் பயன்படுத்த விரும்புகிறது.

வாழ்க்கையும் முன்னேற்றமும் பெரும் சவாலாக இருக்கும் சாதாரணத் தமிழ் மக்களுக்கு, மருத்துவக் கல்லூரிகளில் யார் சேருகிறார்கள், எந்தத் தகுதியில் அவர்களின் மருத்துவச் சேர்க்கை நடக்கிறது என்பதெல்லாம் ஒரு பொருட்டில்லை. அந்த மனிதர்களின் குடும்பத்தில் ஒரு மாணவருக்கு மருத்துவ ஆசையும் அதற்கான முனைப்பும் இருந்தால், அவர் வசதிப்படி அதற்கு முனைவார் – நீட் வழியாகவும் கூட. ஆனால் அப்படியான மாணவர்கள் அந்த மக்களில் மிகச் சிறிய எண்ணிக்கையினர். ஆகையால்தான், திமுக தனது சுய லாபத்திற்காக ஒரு அப்பட்டமான அபத்தக் கோரிக்கையை முன்வைத்துப் போராடினாலும், அதனால் சாதாரண மக்களிடம் அந்தக் கட்சிக்குப் பெரிதாக ஓட்டிழப்பு ஏற்படாது என்று அதன் தலைமை கணிக்கிறது – அது சரியாகவும் இருக்கும்.

திமுக-விற்கு ஓட்டளிக்க வேண்டாம் என்றிருக்கும் வாக்காளர்களிடம் அக்கட்சியின் பெயர் இன்னும் கெட்டால்தான் என்ன? அது பற்றித் திமுக கவலைப் படாது. சிறுபான்மை மதத் தலைவர்களைத் தாஜா செய்துகொண்டு, மதிப்பிழந்த காங்கிரஸ் கட்சி, ஆதாயங்கள் தேடும் சில சிறிய கட்சிகள் ஆகியவற்றோடு கூட்டணி வைத்து சட்டசபைத் தேர்தலில் ஜெயித்துவிட்டால், எல்லாவற்றையும் எப்படியோ ஈடு கட்டி விடலாம் என்று திமுக நினைப்பதாகத் தெரிகிறது. பிறகு எதற்கு வெட்கம்?

2021 மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் போது, “தமிழ்நாட்டிற்கு நீட்-டில் இருந்து விலக்குப் பெறும் ரகசியம் எங்களுக்கு மட்டும் தெரியும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார். அது என்ன ரகசியம் என்பதை உண்ணாவிரத மேடையில் பேசும்போது அவராகவே சொன்னார். அந்தப் பேச்சிலும் வெட்கம் இல்லை, அர்த்தமும் இல்லை. நேற்று அவர் பேசிய வார்த்தைகள் இவை:

முதல்வர் மு. க ஸ்டாலினை மனதில் வைத்து உதயநிதி முதலில் இப்படிச் சொன்னார்: “நம்முடைய தலைவர் அவர்கள் கண்டிப்பாக நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கித் தருவார்கள்”. ஆனால் தனது பேச்சை முடிக்கையில் அவர் வேறு திசையில் தாவி, தான் முன்னர் குறிப்பிட்ட நீட் விலக்கு ரகசியம் இதுதான் என்றும் உதயநிதி தெளிவு படுத்தினார்:

“எல்லாரும் சொல்றாங்கல்ல, நீட் ரகசியத்தை உதயநிதி சொல்வாரா, சொல்வாரான்னு? இப்ப சொல்றேன் அந்த ரகசியத்தை. வருகின்ற நாடாளுமன்றத் தேரதல்ல பாஜக-வை ஓட ஓட விரட்டுங்க. கீழ இறக்கி காங்கிரஸ் ஆட்சியை, நம்முடைய கூட்டணி ஆட்சியை, உக்கார வச்சீங்கன்னா, கண்டிப்பாக தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு ரத்தாகும். அருமை சகோதரர் ராகுல் காந்தியும் அந்த வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார். எனவே அதை நோக்கி நாம் பயணிப்போம்.”

உதயநிதி தனது ரகசிய பார்முலாவை விளக்கியதின் அர்த்தம் இதுதான்: “தமிழ் மக்களே, நான் சொன்ன ரகசியம் ஒர்க் ஆகுறது உங்க கைலதான் இருக்கு! என்னன்னா, 2024 லோக் சபா தேர்தல்ல பாஜக கூட்டணி தோத்துப் போகணும் – திமுக, காங்கிரஸ் கட்சிகள் இருக்கற கூட்டணி நாடு பூரா மெஜாரிட்டி தொகுதிகள்ள ஜெயிச்சு மத்தில ஆட்சி அமைக்கணும். இதுல பாருங்க, தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் நீட் விலக்கு கேட்டு திமுக போராடுது. ஆனா அது நடக்கணும்னா, நாடு பூரா இருக்கற லோக் சபா தொகுதிகள்ள எங்க கூட்டணி மெஜாரிட்டியா ஜெயிக்கணுமே! அதுனாலதான் சொல்றேன், தமிழ்நாட்டு மக்கள் நீங்கதான் 2024-ம் வருஷ தேரதல்ல எப்படியாவது அகில இந்திய அளவுல எங்க கூட்டணிக்கு மெஜாரிட்டி வாங்கிக் குடுத்து எங்களை ஒன்றிய ஆட்சில உக்கார வைக்கணும்! உங்க ஊர்ல இருந்துக்கிட்டே நீங்க அதை எப்படி செய்வீங்கன்ற ரகசியம் உங்களுக்குத்தான் தெரியும்! நீங்க அதை மட்டும் செய்யுங்க, போதும். அதுக்கப்பறம் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வுலேர்ந்து விலக்கு கிடைக்கற வழியக் கண்டுபிடிச்சு செயல் படுத்திருவாரு!”

இவ்வாறு வெட்கம் இல்லாமல், விவஸ்தை இல்லாமல் பிதற்றி இருக்கிறார் உதயநிதி. பாவம், நீட் தேர்வினால் அவர்களுக்கு விழுந்த அடியின் வலி அவர்களுக்குத்தான் தெரியும். முனகல் வரத்தான் செய்யும்.


Author:R. Veera Raghavan, Advocate, Chennai


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe