
“சென்னையில் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டிற்கு தட்டுப்பாடு”
– சு.ஆ. பொன்னுசாமி
சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி முதல் ஆவின் அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளும் 10% வரை குறைவாக அளவு நிர்ணயம் செய்து சீலிங் முறை வைத்து பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் பச்சை நிற பாக்கெட்டில் வரும் 4.5% கொழுப்பு சத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளை இன்று (15.09.2023) முதல் 30% குறைவான அளவில் வழங்கி விட்டு, அதே விற்பனை விலை கொண்ட, ஆனால் அதை விட 1% கொழுப்பு சத்து குறைவான ஊதா நிற பாக்கெட்டில் வரும் 3.5% பசும்பால் பாக்கெட்டுகளை தான் வழங்க முடியும், அல்லது 10% குறைவான அளவில் தான் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்ய முடியும் என ஆவின் நிர்வாகம் சண்டித்தனம் செய்து வருகிறது.
இந்த நிலையில் பால் முகவர்களுக்கு எந்தவிதமான முன்னறிவிப்போ, சுற்றறிக்கையோ இல்லாமல்,
ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகாரம், மொத்த விநியோகஸ்தர்களின் அராஜகம் காரணமாக 30% அளவிற்கு பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகளின் விநியோக அளவு திடீரென குறைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக சத்து குறைவான பசும்பால் பாக்கெட்டுகளை வழங்கியுள்ளதால் அந்த பாக்கெட்டுகளை சில்லரை வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகம் செய்யும் கட்டாயத்திற்கு பால் முகவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 10% பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 30% அளவு பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் அளவை குறைத்து சத்து குறைவான பசும் பாலினை தான் வாங்கியாக வேண்டும் என நிர்பந்தம் செய்து வரும் ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கின் காரணமாக பால் முகவர்களிடம் சில்லரை வணிகர்களும், பொதுமக்களும் கருத்து மோதல்களில் ஈடுபடும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.
அத்துடன் பால் முகவர்களிடம் அந்த வகை பாலினை வாங்க மறுத்து சண்டையிட்டு வருவதால் இறக்கி வைத்துள்ள ஊதா நிற பாக்கெட்டில் வரும் பால் பாக்கெட்டுகளை என்ன செய்வது என தெரியாமல் பால் முகவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதால் ஆவின் பால் விநியோகம் செய்யும் தொழிலை செய்து தான் ஆக வேண்டுமா..?, பேசாமல் இந்த தொழிலை விட்டு ஒதுங்கி விடலாமா..? என்கிற மன நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
ஆவின் நிர்வாகத்தின் சண்டித்தனத்தையும், சர்வாதிகார போக்கினையும் தடுக்க வேண்டிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களோ ஆவினில் சதா ஆலோசனை கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறாரே தவிர ஆக்கபூர்வமான தீர்வுகளை காணாமல் இருப்பது வேதனைக்குரிய விசயமாகும்.