
— ஆர். வி. ஆர்
திமுக-வின் உயர் மட்டத் தலைவர்களின் பொதுவான குணம் இது: ஹிந்து மதத்தை இடித்துப் பேசுவது, இழித்துப் பேசுவது. கிறிஸ்துவ மதத்தையும் இஸ்லாம் மதத்தையும் போற்றிப் பேசுவது, அந்த மதத் தலைவர்களிடம் குழைந்து பணிந்து நடப்பது. திமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநில அமைச்சரான பொன்முடியும் இதில் ஒருவர்.
மிக அநாகரிகமாக, ஆபாசமாக, பெண்கள் கூடி இருக்கும் அவையில், பொன்முடி சமீபத்தில் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. ஹிந்து மத சம்பிரதாயங்களான சைவத்தையும் வைணவத்தையும் குறிப்பிட்டு ஏதோ கீழ்த்தரமாகப் பேசி, கேட்பவர்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார் பொன்முடி. திமுக-வின் இன்னொரு துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியே கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருந்தது பொன்முடியின் எட்டாந்தரப் பேச்சு.
பொன்முடியின் ஆபாசப் பேச்சைத் தொடர்ந்து, திமுக-வின் தலைவர் மு.க ஸ்டாலின் பொன்முடியைத் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி இருக்கிறார் – காரணம் குறிப்பிடாமல். பொன்முடி இதுவரை தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. தெரிவித்தாலும் அது போலியாக இருக்கும்.
தனது ஆபாசப் பேச்சால் கட்சிப் பொறுப்பில் இருக்கும் தகுதியைப் பொன்முடி இழந்தார், ஆகையால் அவருடைய கட்சிப் பதவி பறி போனது என்றாகிறது. கட்சிப் பொறுப்புக்கு லாயக்கில்லாத பொன்முடி, அமைச்சர் பதவிக்கும் லாயக்கில்லாதவர் ஆயிற்றே? சரி சரி, கண்துடைப்புக்காக எடுத்த நடவடிக்கையில் லாஜிக் பார்க்க முடியுமா?
கீழ்த்தரமாக, ஆபாசமாகப் பொதுமேடையில் பேசிய பொன்முடி, அனுபவமில்லாத இளவயதுக் காரரா? படிப்பறிவும் பெரிதாக இல்லாதவரா? இல்லை. அவருக்கு வயது 75 ஆகப் போகிறது. திமுக-வின் சீனியர் தலைவர்களில் ஒருவர். 18 வருடங்கள் கல்லூரி ஆசிரியராக வேலை செய்தவர். இதையும் நம்புங்கள்: அவர் மூன்று துறைகளில் எம்.ஏ, அது தவிர பி.எட், பி.எல் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் பெற்றவர். என்ன இருந்து என்ன? கடைசியில் அவர் ஒரு முன்னணி திமுக தலைவர், கட்சித் தலைமைக்கு நம்பிக்கையானவர். அவர்களுக்குள் அதில் நிறைய விஷயம் இருக்கிறது.
நினைத்துப் பாருங்கள். தமிழகத்தில் ஒரு பாஜக தலைவரோ காங்கிரஸ் தலைவரோ பொன்முடி பாணியில் ஆபாசமாக, ஹிந்து மதத்தை மலிவாக இழித்தும், பேசியிருக்க முடியுமா? முடியாது. அதற்குக் காரணம், அது போன்ற அருவருப்பான பேச்சுகளை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேசியத் தலைமையில் உள்ள தலைவர்கள் பேசுவதில்லை. ஆனால் திமுக-வின் தலைமை அப்படி அல்ல.
நீங்கள் ஒரு அமைப்பில் பணி செய்கிறீர்கள், அந்த அமைப்பின் தலைவர் நாகரிகமாகப் பேசுகிறவர் என்றால் உங்களுக்கே பிறரிடம் அநாகரிகமாகப் பேசக் கூச்சமாக இருக்கும். ‘அநாகரிகமாகப் பேசினால் தலைமையின் கண்டனத்திற்கு நாம் ஆளாவோம், இந்த அமைப்பிலும் நாம் வளர முடியாது’ என்ற உள்ளுணர்வு உங்களிடம் இயற்கையாக இருக்கும். அப்படியான உள்ளுணர்வு கொண்டவர்கள் தான் அந்த அமைப்பிலும் வந்து சேருவார்கள்.
நீங்கள் பணி செய்யும் அமைப்பின் தலைவரே அநாகரிகமாகப் பேசுகிறவர் என்றால் நீங்களும் பிறரிடம் அநாகரிகமாகப் பேச முனைவீர்கள். ‘அநாகரிகமாகப் பேசினால் நாம் தலைமையால் மெச்சப் படுவோம், இந்த அமைப்பிலும் எளிதாக வளரலாம்’ என்ற உள்ளுணர்வு உங்களுக்கு இயல்பாக வரும் – ஒரு ரவுடிக் கூட்டத்தில் உள்ள மாதிரி. அப்படியான உள்ளுணர்வு கொண்டவர்கள் அந்த அமைப்பில் அதிகம் வந்து சேருவார்கள். அப்படித் திமுக-வில் சேர்ந்து வளர்ந்தவர் பொன்முடி.
திமுக தலைவர்களின் முறைகேடுகளும் முறையற்ற பேச்சுகளும், ஹிந்து மத விரோதப் போக்கும், சமீப காலமாகத் தமிழக பாஜக-வால் கடுமையாக எதிர்க்கப் படுகின்றன. அதனால் பேச்சு அளவிலாவது இதில் திமுக தலைமை சற்றுப் பின் வாங்கி வருகிறது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலும் நடக்கப் போகிறது.
இந்த நேரத்தில், ஹிந்து மதத்தை இழித்துப் பேசுவது, ஆபாசச் சொற்கள் பேசுவது ஆகிய செயல்களைத் திமுக காரண காரியமாகக் கட்சிக்குள் சற்று மட்டுப் படுத்த விரும்பும். அப்படி இருக்கையில் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசிய அருவருப்பான பேச்சு, திமுக தலைவர் ஸ்டாலினையே பாதித்திருக்கும். அதனால் பொன்முடியின் கட்சிப் பதவி பறிபோயிருக்கிறது.
சிறிது பள்ளிப் படிப்பு மட்டும் படித்த காமராஜ், அன்றைய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கண்ணியமான பேச்சுக்கள் பேசிய பெருந்தலைவராக விளங்கினார். பொறியியல் படிப்பு மற்றும் எம்.பி.ஏ படித்து ஐ.பி.எஸ்-ஸிலும் தேர்வான அண்ணாமலை இன்று ஒரு பாஜக தலைவராக நாகரிகமாகப் பேசுகிறார். ஆனால் பதினெட்டு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக இருந்த பொன்முடி, எம்.ஏ, பி.எட், பி.எல், பி.எச்.டி என்று பல கல்விப் படங்கள் பெற்ற பொன்முடி, காது கூசும் கீழ்த்தரமான பேச்சை – அதுவும் ஹிந்து மதத்தை அநாகரிகமாகத் தொடும் பேச்சை – பேசக் கூடியவர் என்றால் என்ன அர்த்தம்?
நாகரிகமான சிந்தனையும் பேச்சும் கொண்டவர்கள் திமுக-வில் உயர்வது விதி விலக்கானது, இயல்பானது அல்ல. தரம் தாழ்ந்தவர்கள் திமுக-வில் உயர்வதற்குக் காரணம், அந்தக் கட்சியின் தலைவர் பதவி விகித்தவர்கள் காண்பித்த முன்மாதிரி. அவர்களில் திமுக-வின் முந்தைய நெடுநாள் தலைவர் கருணாநிதி முக்கியமானவர். அவரது புதல்வர் ஸ்டாலினும் முடிந்தவரை தந்தைக்கு இதில் ஈடுகொடுக்க அவ்வப்போது முனைகிறார் – தந்தையின் வீரியம் ஸ்டாலினிடம் இல்லை என்றாலும்.
கிட்டத் தட்ட ஏழு வருடங்களாகத் திமுக-வின் தலைவர் பதவியில் இருப்பவர் ஸ்டாலின். அவர் நினைத்தால், அதற்கான உறுதி அவரிடம் இருந்தால், இந்த ஏழு வருடங்களில் அவர் திமுக-வினரின் கீழ்த்தர அநாகரிகப் பேச்சுகளுக்குத் தடை விதித்திருக்கலாம், அவரும் அந்தத் தடையைக் கடைப் பிடித்திருக்கலாம். ஆனால் ஸ்டாலின் அதைச் செய்யவில்லை. ஏனென்றால் அவரும் திமுக-வின் கலாசாரத்தை உயர்த்திப் பிடிப்பவர்.
அந்நியரைக் கடிக்க உங்கள் நாயை நீங்கள் அனுமதித்து ரசித்தால், அது அடுத்தவரை எந்த அளவு கடிக்கும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. அது ஒருவரைக் கன்னா பின்னாவென்று கடித்த பின், ஊருக்காக நீங்கள் விரல் அசைத்து அதைக் கண்டிக்கலாம். ஆனாலும் அது உங்கள் அருமைப் பிராணி. நீங்கள் அதற்கு வேண்டிய இறைச்சி கிடைக்க வழி செய்வீர்கள். உங்களுக்கு வேண்டியது உங்களுக்குக் கிடைக்க அது துணையாக இருக்கும், காவலாக நிற்கும். பிறகென்ன?
Author: R. Veera Raghavan Advocate, Chennai
[email protected]
https://rvr-india.blogspot.com