
தமிழ்நாட்டில் பாஜக.,வின் உட்கட்சித் தேர்தல் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. கிளைகள், மண்டல், மாவட்டம் என்று கட்சியின் பல்வேறு மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இறுதியாக மாநிலத் தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், தமிழகத்தில் திமுக.,வை வீழ்த்தி, தேஜ., கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்ற கருத்தில் மத்திய பாஜக. தலைமை காய் நகர்த்தியது.
அப்போது, தமிழக பாஜக., தலைவராக இருந்த அண்ணாமலை, ஏற்கெனவே தனது பிரசாரங்களிலும் கடந்த தேர்தல் நேரத்திலும் எடப்பாடி தலைமையிலான அதிமுக.,வுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்தால், நான் பாஜக., தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிவிடுவேன் என்று கூறியிருந்தார். தனது கொள்கையில் தீவிரத்துடன் சமரசமின்றி இருந்த கே.அண்ணாமலையிடம் அதிமுக., கூட்டணி குறித்து பாஜக., மேலிடம் பேசியது. அப்போது அண்ணாமலையின் கருத்தை அறிந்த மேலிடம், வேறு புதிய தலைவரைத் தேர்வு செய்யும் கட்டாயத்துக்கு உள்ளானது.
அதன்படி, தமிழக பாஜக.,வுக்கு புதிய மாநிலத் தலைவரைத் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின. இந்நிலையில், வியாழன் அன்று சென்னைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா, பரபரவென்று சில அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டார். முதலில் தமிழிசை சௌந்தர்ராஜன் வீட்டுக்குச் சென்று அவரது தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விட்டு, பின்னர் எஸ்.குருமூர்த்தி இல்லத்துக்குச் சென்று பாஜக., உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி விட்டு, அதிமுக., உடன் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அண்ணாமலையையும் உடன் வைத்துக் கொண்டு அறிவித்தார்.
பின்னர் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது. மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதில், தற்போதைய பாஜக., சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்திருந்தார். இதை அடுத்து போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட்டார்.
புதிய தலைவரை அதிகார பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதும் இன்று மாலை 5 மணி அளவில் சென்னை, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்க, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு செய்து இருப்பதாகவும், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாநில தேர்தல் அதிகாரியான சக்கரவர்த்தி அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி முன்னிலையில் தேசிய தேர்தல் பொறுப்பாளர் தருண்சுக் தமிழக பாஜக.,மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தார். இதை அடுத்து, நயினார் நாகேந்திரன் உறுதிமொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி,
1.திருவள்ளுர் – ஏழுமலை
2.சென்னை வடக்கு – சதீஷ்குமார்
3.சென்னை தெற்கு – தமிழிசை சௌந்தர்ராஜன்
4.மத்திய சென்னை – டால்பின் ஸ்ரீதர்
5. ஸ்ரீபெரும்புதூர் – லோகநாதன்
6.காஞ்சிபுரம் – ஸ்ரீ நடேசன்
7.அரக்கோணம் – நாராயணன் திருப்பதி
8.வேலூர் – கார்த்தியாயினி
9.கிருஷ்ணகிரி – நரேந்திரன்
10.தர்மபுரி – ஸ்ரீ நரசிம்மன்
11.திருவண்ணாமலை – ஏழுமலை
12.ஆரணி – வெங்கடேசன்
13.விழுப்புரம் – சிவப்பிரகாசம்
14.கள்ளக்குறிச்சி – அசோக் ஜெயின்
15.சேலம் – அண்ணாதுரை
16.கோவை – அண்ணாமலை
17.நாமக்கல் – டாக்டர்.கே.பி.ராமலிங்கம்
18.ஈரோடு – கனக சபாபதி
19.திருப்பூர் – வானதி சீனிவாசன்
20.நீலகிரி – எல்.முருகன்
21.பொள்ளாச்சி – முருகானந்தம்
22.கரூர் – கராத்தே தியாகராஜன்
23.திண்டுக்கல் – திருமலை சுவாமி
24.திருச்சி – வினோஜ் பி செல்வம்
25.பெரம்பலூர் – ஏஜி சம்பத்
26 கடலூர் – பால் கனகராஜ்
27.சிதம்பரம் – டாக்டர்.பிரேம் குமார்
28.மயிலாடுதுறை – S.G.சூர்யா
29.நாகப்பட்டினம் – எம்.பழனியப்பன் புரட்சி கவிதாசன்
30.தஞ்சாவூர் – கருப்பு. முருகானந்தம்
31.சிவகங்கை – எச்.ராஜா
32.மதுரை – பேராசிரியர்.சீனிவாசன்
33.தேனி – அஸ்வத்தாமன்
34.விருதுநகர் – கரு.நாகராஜன்
35.ராமநாதபுரம் – நரசிங்க பெருமாள்
36.தூத்துக்குடி – சசிகலா புஷ்பா
37.தென்காசி – மகாராஜன்
38.திருநெல்வேலி – சரத்குமார்
39.கன்னியாகுமரி – பொன்.இராதா கிருஷ்ணன்