
ஹீரோயின் தங்கி இருந்த ஒட்டல் வாடகையை தயாரிப்பாளர் தர மறுத்ததால் நடிகைக்கும் தயாரிப்பாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த் நடித்த படம், நெஞ்சில் துணிவிருந்தால். இந்தப் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் மெஹ்ரின் பிர்ஸாடா.
இந்தப் படம் ஹிட்டாகவில்லை. அடுத்து தெலுங்குக்கு சென்ற அவர், பட்டாஸ் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். இதில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார்.

இவர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர். தெலுங்கில், கிருஷ்ணா காடி வேர பிரேம கதா என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
பின்னர் இந்திக்குச் சென்ற அவர், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் அஸ்வத்தம்மா என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இதில் நாகசவுரியா ஹீரோ. ஜிஸு சென்குப்தா, ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்திருந்தார். ரமண தேஜா இயக்கி இருந்தார். இந்தப் படம், கடந்த மாதம் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை சங்கர் பிரசாத் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை மெஹ்ரின் இந்தப் படத்துக்காக, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். இதன் வாடகையை தயாரிப்பாளர் கட்டவில்லை என்றும் இதனால் நடிகைக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக செய்தி பரவியுள்ளது.
இதுபற்றி கூறப்படுவதாவது: இந்தப் படத்தின் ரிலீஸுக்கு முதல் நாள் கடைசிக்கட்ட புரமோஷனுக்காக, படத்தில் நடித்திருந்தவர்களை அழைத்திருந்தார் தயாரிப்பாளர் சங்கர் பிரசாத். நடிகை மெஹ்ரினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.

கடைசி நேரத்தில் தனக்கு ஸ்கின் அலர்ஜி என்றும் அதனால் வர இயலாது என்றும் தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார் மெஹ்ரின். அவர் புரமோஷனுக்கு வராததால், அவர் தங்கிய நட்சத்திர ஓட்டல் வாடகையை தர முடியாது என்றும் நீங்களே கட்டிவிடுங்கள் என்றும் தயாரிப்பாளர் கோபமாகக் கூறிவிட்டார். இதனால் டென்ஷனான நடிகை அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் மறுநாள் காலையில் யாரிடமும் சொல்லாமல் ஓட்டலில் இருந்து வெளியேறி ஊருக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து ஓட்டல் நிர்வாகம், ஓட்டலில் அறையை பதிவு செய்திருந்த தயாரிப்பாளருக்கு வாடகைத் தொடர்பாக தகவல் தெரிவித்தது.

ஆனால்,அவர் வாடகை கொடுக்க மறுத்துவிட்டாராம். பலவித போராட்டங்களுக்கு பிறகே தயாரிப்பாளர் வாடகையை கொடுத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் இந்த செய்தி பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆனால், இதுபற்றி நடிகையோ, தயாரிப்பாளரோ ஏதும் தெரிவிக்கவில்லை.



