
இந்தியாவின் பிரபல பாடலாசிரியரான ஜாவத் அக்தர், ரிச்சர்ட் டாகின்ஸ் விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் அறிவியல், கல்வி, பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் மதச்சார்பின்மை, பகுத்தறிவியல் ஆகியவற்றை வெளிப்படுத்தி அறிவியல் உண்மையைக் கடைப்பிடிப்பவருக்கு விருது வழங்கிக் கெளரவிக்கிறது
அறிவியலாளர் ரிச்சர்ட் டாகின்ஸ் அறக்கட்டளை. இந்த வருடம் ரிச்சர்ட் டாகின்ஸ் விருதுக்கு இந்தியாவின் பிரபல பாடலாசிரியரான ஜாவத் அக்தர் தேர்வாகியுள்ளார்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். வித்தியாசமான சிந்தனை, மனிதகுல வளர்ச்சிக்குப் பங்களித்தல் போன்ற காரணங்களுக்காக இவ்விருது அக்தருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
டாகின்ஸின் முதல் புத்தகமான தி செல்பிஷ் ஜீனைப் படித்ததிலிருந்து அவருடைய ரசிகராக உள்ளேன். இந்த விருதைப் பெறுவதில் பெருமையடைகிறேன் என்று ஜாவத் அக்தர் கூறியுள்ளார்.
75 வயது ஜாவத் அக்தர், திரைப்படப் பாடல்களுக்காக 5 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 1999-ல் பத்மஸ்ரீ விருதும் 2007-ல் பத்ம பூஷன் விருதும் பெற்றதோடு சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார்