
புகழ்பெற்ற பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் இன்று காலமானார். புகழ்பெற்ற நடிகையுமான எம்.என்.ராஜம்தான் இவர் மனைவி. ஆதர்ச தம்பதி என்று புகழப்பட்டவர்கள் இவர்கள். இந்நிலையில் ஏ.எல்.ராகவன் உடல்நிலை பாதிப்பு காரணமாக இன்று காலமானார்!
அய்யம்பேட்டை லட்சுமணன் ராகவன் என்பதுதான் அந்த ஏ.எல்.ராகவன் என்ற பெயரின் சுருக்கம். இவர் ஒரு பாடகராக அனைவருக்கும் தெரியுமே தவிர, பன்முக வித்தகர் என்பது யாரும் அறியாதது.
ஆரம்பத்தில் நடிப்புதான் உயிர் பாய்ஸ் கம்பெனியில் இவர் ராஜபார்ட் வேடம் போட்டு நடித்தால், பெண் வேடமிட்டு உடன் நடிப்பது எம்ஜிஆர்தானாம். நன்றாக மிருதங்கம் வாசிப்பார். வயலின் வாசிப்பார். ஆனால் குரல் என்னவோ அப்போது பெண் குரலாக இருந்தது. இருந்தாலும் அதையும் பிளஸ் ஆக மாற்றி, பல படங்களில் பெண் கோரஸில் பாட ஆரம்பித்தார்.
விடாமுயற்சியும், அதீத திறமை காரணமாக எம்எஸ்வியிடம் பாடும் வாய்ப்பு கிடைத்தது. “புதையல்” படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து “ஹலோ மை டியர் ராமி” என்ற பாடல் பாடினார். இதுதான் ஆண்குரலில் ராகவன் பாடிய முதல் பாட்டு. அதன்பிறகு அடுத்த வீட்டுக்குரலில் தக்கார் நிறைந்த சங்கமிது பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவியது.
தொடர்ந்து பல ரம்மியமான பாடல்களும், ரகரகமான பாடல்களும் வெளிவந்தன. “பார்த்தால் பசி தீரும்” படத்தில் “அன்று ஊமைப் பெண்ணல்லோ” “நெஞ்சில் ஓர் ஆலயம்” படத்தில் பாடிய “எங்கிருந்தாலும் வாழ்க”, இருவர் உள்ளம் படத்தில் “புத்தி சிகாமணி பெத்த புள்ள”, வேட்டைக்காரன் படத்தில் “சீட்டுக்கட்டு ராஜா”, பூவா தலையா படத்தில் “போடச்சொன்னா போட்டுக்கறேன்” என்று பல தனித்துவம் மிக்க பாடல்களை ரசிகர்கள் காதும், மனமும் குளிர கேட்டு கொண்டே இருந்தனர்.
டிஎம்எஸ், சீர்காழி என்ற இரு ஜாம்பவான்கள் இருந்தாலும் இவர்களுக்கு நடுவில் சாப்ட் வாய்சுடன் நுழைந்தார் ராகவன். மிகவும் மென்மையான குரல் அது. வெஸ்டர்ன் பாட்டு என்றால் ராகவன்தான். கிளப் டான்ஸ், கலாட்டா பாடல்கள், ஈவ்-டீஸிங், கிக்-பாடல்கள் அனைத்துக்கும் ராகவன்தான் பொருத்தம் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை! குறிப்பாக நாகேஷ்-க்கு இவரது குரல் பெர்பெக்ட்டாக பொருந்தும். அதனால்தான் அவருக்கு மட்டும் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

ஒருகட்டத்தில் இவர் படம் எடுக்கவும் ஆரம்பித்து விட்டார். “கண்ணில் தெரியும் கதைகள்” என்ற படத்தை தயாரித்தார். ஆனால் அதிலும் ஒரு புதுமையை செய்தார். கேவி மகாதேவன், டிஆர் பாப்பா, இளையராஜா, ஜிகே. வெங்கடேஷ், சங்கர்-கணேஷ் என 5 மியூசிக் டைரக்டர்களை இணைத்தார். இதில் எல்லா பாட்டுமே ஹிட். ஆனால் கதை என்னவோ வலுவாக இல்லை. அதனால் போதிய வசூலை இந்த படம் அள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு பிறகு ஒரு சில படங்கள் எடுத்தாலும், அவை எல்லாம் எடுபடவே இல்லை. நிறைய பணத்தை இழந்துவிட்டார்.
எத்தனையோ பாடகரை இமிடேட் செய்து பாட முடியும். ஆனால் ராகவன் குரலை மட்டும் இமிடேட் செய்ததே இல்லை. அப்படி செய்யவும் முடியாத குரல் அது. தொழில்நுட்பம் அவ்வளவாக இல்லாத அந்த காலத்திலேயே தன்னுடைய குரலிலேயே எஃக்கோ எபெக்ட்டை மிக துல்லியமாக தந்தவர்.
அதைவிட முக்கியம், மேடைகளில் ஆர்க்கெஸ்டிரா கச்சேரிகளை உருவாக்கியதன் முன்னோடியே ராகவன்தான்.. இந்த ஆர்க்கெஸ்ட்ராவை எல்ஆர் ஈஸ்வரியுடன் இணைந்து உருவாக்கினார். காரணம், இவர்கள் இணைந்து பாடிய பாடல்கள்தான் ஏராளம் என்பதுடன் இந்த ஜோடி குரலுக்கு தனி ரசிகர்கள் கூட்டமும் இருந்தது. “எங்கிருந்தாலும் வாழ்க” என்று எல்லாரையும் சொல்லிவிட்டு இன்று நம்மைவிட்டு போய்விட்டார் ஏ.எல்.ராகவன். எனினும் அவர் பாடல்கள் அத்தனையும் நம்முடன் சேர்ந்தே வாழும்!