
சென்னை:
அஜீத் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவேகம் படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. இது வெளிநாடுகளில் நேற்றே வெளியாகியிவிட்டது.
இன்று ரிலீசான இந்தப் படத்திற்கான டிக்கெட்டை வாங்க அஜித் ரசிகர்கள் பெரிதும் முயன்று வருகின்றனர். சில தியேட்டர்களில் ரசிகர்களுக்கே டிக்கெட் கிடைக்கவில்லை. ரசிகர்மன்றங்களின் பெயரில் சிலர் டிக்கெட்களை வாங்கிச் சென்று வெளியில் அதிக விலைக்கு விற்று வருமானம் பார்த்துவிட்டார்கள் என்று புகார் கூறப்பட்டது.
புதுச்சேரியில் டிக்கெட் கிடைக்காத சில அஜீத் ரசிகர்கள் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த விவேகம் பட பேனரை கிழித்த சம்பவமும் இன்று காலை நடந்தது. இந்நிலையில் இப்படத்திற்கான விமர்சனத்தை இன்று காலையிலேயே பல ஊடகங்களில் வெளியிட்டு விட்டன. இணையதளங்களிலும் இன்று விவேகத்தின் பேச்சுதான்.
விவேகத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் அஜீத் நடித்துள்ளார். அனைத்து காட்சிகளிலும் அஜீத் அழகாக இருக்கிறார் எனவும், பார்ப்பதற்கு ஹாலிவுட் படம் போல் இருக்கிறது என்றும், படத்தில் காட்டப்படும் இடங்கள் அழகாகவும், கண்களுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கிறது என பலரும் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் இப்படம் ஒரு ஆங்கிலப் படம் போல் எடுக்கப்பட்டிருகிறது என்றும் படத்தில் நிறைய காட்சிகளில் ஆங்கில வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதைக்களமும், கதை சொல்லப்பட்டிருக்கும் விதமும் நகர்ப்புற ரசிகர்கள், படித்த ஏ சென்டர் ரசிர்களுக்கு மட்டுமே புரியும் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. பி,சி சென்டர் எனப்படும் கிராமப்புற, சிறு நகரங்களில் படம் பார்ப்பவர்களுக்கு இப்படம் புரியாமல் போக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் சில காட்சிகள் ஏ செண்டர் ரசிகர்களுக்கே புரியவில்லை என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.
இருப்பினும் வழக்கமான தமிழ் சினிமா மசாலாக்கள் இல்லாமல் இப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும், நிச்சயம் ஒரு வித்தியாச களனுடன் வரவேற்பைப் பெறும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



