தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் உள்ளிட்ட பைரேசி இணையதளங்களின் அட்மின்களிடம் சமீபத்தில் ரிலீசாகிய `சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இயக்குநர் அப்பாஸ் அக்பர் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் படம் ரிலீசான உடனே இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. அந்த அளவிற்கு இணையதள பைரேசி சினிமாவிற்கு ஒரு தர்ம சங்கடமாகவே இருக்கிறது. இணையதள பைரேசியை தடுக்க தயாரிப்பாளர் சங்கமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 7 படங்கள் ரிலீசாகின. அதில் சென்னை 2 சிங்கப்பூர் படமும் ஒன்று. இந்த படத்தை அப்பாஸ் அக்பர் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இந்த படத்தை தயாரித்து இசையமைத்திருக்கிறார். காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் ரிலீசான சில நாட்களில் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் உள்ளிட்ட இணையதளங்களிலும் வெளியாகி இருக்கிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு பைரேசி இணையதளங்களுக்கு கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், சென்னை 2 சிங்கப்பூர் 6 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஒரு படம். 6 வருடமாக எங்களது வியர்வை, ரத்தம், உழைப்பு போட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறோம். மொத்தமாக இந்த படத்திற்காக ரூ.8 கோடியை செலவு செய்துள்ளோம். இந்த பணத்தை ஒரு வாரத்தில் எங்களால் எடுக்க முடியாது.
அதற்கு ஒரு 4 வாரங்களாவது வேண்டும். தற்போது தான் படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணமாக இருக்கிறது. மக்களும் விரும்பி பார்க்க வருகின்றனர். அதேபோல் திரைகளின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. அப்படி இருக்கும் போது எங்களது வியர்வையும், வலியையும் உங்களது இணையதளத்தில் பார்க்கிறோம்.
இந்த படத்திற்காக நாங்கள் பட்ட கஷ்டத்தை தங்களிடம் சொல்லி முடியாது. அதை சொல்லவும் கூடாது. எனவே எங்களுக்காக ஒரு 30 நாட்கள் படத்தை உங்கள் இணையதளத்தில் இருந்து நீக்கிவிடுங்கள். 31-வது நாளே மீண்டும் படத்தை வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இயக்குநர் அப்பாஸ் அக்பரின் கோரிக்கையை ஏற்று `சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது.