முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கொடைக்கானல், வித்தகன் உள்பட பல படங்களில் நடித்த பூர்ணா, சமீபத்தில் ‘ராட்சஷி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இந்த படம் ஆந்திராவில் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த படம் தமிழில் ‘குந்தி’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த படத்தின் தமிழ் மொழியின் வசனங்களை எழுதி மொழிமாற்றம் செய்டஹ் ஏ.ஆர்.கே.ராஜா கூறியதாவது: “தெலுங்கில், ‘ராட்சஷி’ என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்கு படமே, ‘குந்தி’ என்ற பெயரில் தமிழில் உருவாக்கி வருகிறோம். பூர்ணாவுடன் அபினவ், ‘ஆடுகளம்’ கிஷோர், அபிமன்யூ சிங், பேபி தன்வி, பேபி கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பண்ணா ராயல் டைரக்டு செய்ய, மோ.கோ.உலகேசுகுமார் தயாரித்து இருக்கிறார்.
கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்ணாவின் வாழ்க்கையில், ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடக்கிறது. ஒரு பேய், பூர்ணாவின் 2 குழந்தைகளையும் கொல்ல துடிக்கிறது. பேயிடம் இருந்து பூர்ணா குழந்தைகளை எப்படி காப்பாற்றுகிறார்? என்பதே கதை.
சந்திரமுகி, முனி, காஞ்சனா, அருந்ததி ஆகிய படங்களின் வரிசையில் வரும் படுபயங்கரமான பேய் படம், இது. தமிழ் சினிமாவின் அடுத்த திகிலான பேய் படம் இதுதான். படத்தில், ‘கிராபிக்ஸ்’ காட்சிகள் 30 நிமிடங்கள் இடம் பெறும். அந்த காட்சிகள் குலை நடுங்க வைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன.
இதுவரை பேய் படங்களில் நடித்த கதாநாயகிகளை மிஞ்சும் வகையில், பூர்ணா தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய திரையுலக வாழ்க்கையில், ‘குந்தி’ ஒரு மைல் கல்லாக இருக்கும். விரைவில் அனைவரையும் பயமுறுத்த வருகிறாள், ‘குந்தி’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.