அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த போது, காதல் தோல்வி நினைவுக்கு வர நரக வேதனையுடன் நடித்தேன் என்று நடிகை ஷாலினி பாண்டே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம், பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதுடன், அதில் நடித்த ஷாலினி பாண்டேவுக்கு பெரும் ரசிகர் கூட்டத்தையும் சேர்த்தது. அத்துடன், அவருக்கு இப்போது படவாய்ப்புகளையும் குவித்து வருகிறது.
சாவித்திரி வாழ்க்கைக் கதை படத்திலும் வந்தார் ஷாலினி பாண்டே, தற்போது தமிழில் தயாராகும் 100 பர்சன்ட் காதல், கொரில்லா ஆகிய படங்களில் நடிக்கிறார். இதனிடையே தான் சினிமாவுக்கு வந்த விதம், குடும்ப வாழ்க்கை என்பது குறித்து பேட்டி ஒன்றில் ஷாலினி பாண்டே தெரிவித்த போது…
எனக்கு சினிமாவில் நடிக்க வீட்டில் எதிர்ப்பு இருந்தது. ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடும் படி நிர்பந்தப் படுத்தினர். ஆனால் நான் அதை எல்லாம் மீறி, சினிமா மேல் இருந்த தீவிர காதலால் முதலில் நாடகங்களில் நடித்தேன். பிறகு சினிமா வாய்ப்பு தேட வீட்டில் சண்டை போட்டுவிட்டு மும்பைக்குச் சென்றேன்.
எனது சினிமா வெறியைக் கண்டு எனது தந்தை நீ தெருவில் பிச்சைதான் எடுப்பாய் என்று திட்டினார். அதையும் சகித்துக் கொண்டேன்.
மும்பையில் பெண்களுக்கோ ஆண்களுக்கோ தனியாக வீடு கொடுப்பது இல்லை. அதனால் இரண்டு ஆண்கள் இருந்த வீட்டில் நானும் உடன் இன்னொரு பெண்ணும் தங்கினோம். அந்த ஆண்கள் நல்ல குணமுள்ளவர்களாக இருந்தார்கள். எங்களையும் நன்றாக கவனித்துக் கொண்டனர். ஒரு முறைகூட எங்களை தவறாகப் பார்த்ததில்லை. அவர்களது கவனிப்பால் புதிய உலகத்தை பார்த்தேன்.
அர்ஜுன் ரெட்டி படம் பெரிய வெற்றி பெற்று எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. அதன் பின்னர் என்னை என் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர்.
என் வாழ்க்கையில் என்ஜினீயரிங் படித்த போதும், சினிமாவுக்கு வந்த பிறகும் இரண்டு முறை காதல் ஏற்பட்டு, அவை தோல்வியிலேயே முடிந்தன. அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தபோது அந்தக் காதல் தோல்வி தந்த நினைவுகளால் தவியாய்த் தவித்தேன். அப்போது விஜய்யுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தபோது நரக வேதனையை அனுபவித்தேன்… – என்று கூறியுள்ளார் ஷாலினி பாண்டே.






