பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் தங்க காணிக்கைகளை உருக்கி அதை வங்கிகளின் மூலம் தங்க பத்திரங்களாக மாற்றி அதன் மூலம் கிடைக்கக்கூடிய வட்டியை மற்ற கோவில்களின் பராமரிப்புக்கு செலவு செய்வோம். இது சட்டவிரோதமானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது. அரசியலமைப்பு விதி 25 மற்றும் 26 க்கு முற்றிலும் எதிரானது.
தங்களுடைய நம்பிக்கை மற்றும் பக்தியின் அடிப்படையில் தான் பக்தர்கள் குறிப்பிட்ட கோவில்களில் உள்ள தெய்வத்திற்கு தங்கத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர். கோவில்களின் சொத்துகளுக்கு சொந்தக்காரர் அந்தந்த கோவில்களில் உள்ள தெய்வம் தான் என உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவாக கூறியுள்ள நிலையில், பல கோவில்களில் உள்ள சொத்துகளை உருக்கி ஒரே பத்திரமாக மாற்றி கோவில்களுக்கு ஹிந்து அறநிலையத்துறை தான் சொந்தக்காரர் என்பது போல், பக்தர்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் தி மு க அரசு செயல்படுவது சட்டவிரோதம் மட்டுமல்ல நம்பிக்கை துரோகமும் கூட.
பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற செலுத்திய காணிக்கைகள், குறிப்பிட்ட கோவில்களின் முன்னேற்றத்திற்கு, நிர்வாகத்திற்கு பயன்பெற வேண்டுமே தவிர, அந்த வளத்தை பயன்படுத்தி மற்ற கோவில்களுக்கு செலவு செய்வதற்கு அரசுக்கு அல்லது ஹிந்து அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.
உண்மையிலேயே இந்த அரசுக்கு கோவில்களின் முன்னேற்றத்தில் அக்கறை இருந்தால், அரசின் வருமானத்தை பெருக்கி, அதைக்கொண்டு செலவிட வேண்டும். மாறாக ஒரு கோவிலின் சொத்தை ஈடாக வைத்து வேறு கோவில்களுக்கு செலவிடுவது முறையான செயல் அல்ல. மேலும், அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்கள், திருப்பதி கோவிலில் இது போன்று செய்வதாக சொல்லியிருப்பது உண்மைக்கு புறம்பானது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த கோவில்களின் சொத்தின் மூலம் அல்லது அதன் வருமானத்தை கொண்டே அந்த கோவில்களுக்கு செலவிடப்படுகிறது என்பதே உண்மை.
ஆகவே, சட்டத்திற்கு புறம்பான, மக்கள் நம்பிக்கைக்கு விரோதமான இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதோடு, இந்த அறமற்ற செயலை ஹிந்து அறநிலையத்துறையின் மூலம் செய்ய முனையும் நடவடிக்கையை தமிழக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
- நாராயணன் திருப்பதி