இரண்டு கையில் இரண்டு கடிகாரம் கட்டிக் கொண்டு புதுவித ட்ரெண்டை உருவாக்கியுள்ள நவீன ட்ரெண்ட் செட்டர், தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன், இன்று இரண்டு லேப்டாப்கள் கொண்டு சென்றதற்காக விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இன்று காலை 6 மணிக்கு தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராசன். அவர் தன்னுடன் இரண்டு லேப்டாப்களை எடுத்து வந்ததால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவருடன் நிதி அமைச்சர் கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது இரண்டு லேப்டாப்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று எந்தக் கட்டுப்பாடும் பயணிகளுக்கு இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால் உதவி ஆய்வாளர் அவ்வாறு இரண்டு லேப்டாப்கள் எடுத்துச் செல்லக்கூடாது என அனுமதிக்க மறுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில், தாம்தான் தமிழக நிதி அமைச்சர் என்று கூறியுள்ளார் பழனிவேல் தியாகராசன். இந்த விஷயம் மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
அதை அடுத்து, மாநில நிதி அமைச்சரை தடுத்து நிறுத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படை எஸ்ஐ.,யும் அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். பின்னர் இரண்டு லேப்டாப்களுடன் பயணிக்க பழனிவேல் தியாகராசனை அனுமதித்துள்ளனர்.
ஏற்கெனவே இரண்டு கைக்கடிகாரங்கள் கட்டியிருப்பதால், சமூக வலைத்தள எழுத்தர்கள் அவரை டபுள் வாட்ச் டக்ளஸ் என்று செல்லமாக குறிப்பிடுகின்றனர். இப்போது டபுள் லேப்டாப்புடன் வேறு செய்தியில் அடிபட்டுள்ளதால், என்ன செல்லப் பெயரைச் சூட்டி பாசத்துடன் அழைக்கப் போகிறார்களோ!
இந்நிலையில், பழனிவேல் தியாகராசனுடன் எவ்வாறு இந்த அதிகாரி பேசியிருப்பார் என்ற கற்பனைக் கண்ணோட்டத்தையும் சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவு செய்துள்ளனர். அவற்றில் ஒன்று…
: செக்யூரிட்டி ஆபீசர், நீங்க எங்க வாட்ச்ஃபுல் நிதிய ஏர்போர்ட்ல நிறுத்தி வச்சீங்களா?
: அவரு ரெண்டு லேப்டாப் வச்சிருந்தாரு சார். அதான்..
: அவர் மினிஸ்டர்ன்னு தெரியாதா உனக்கு?
: மொதல்ல தெரியாது. அப்பறம் அவரே சொன்னாரு சார்.
: அவர் மினிஸ்டர்ன்னு தெரிஞ்சும் நீ ஏன் அவரை ரெண்டு மணிக்கூர் வெயிட் பண்ண வச்ச?
: இல்ல சார், அவர் மினிஸ்டர்ன்னு சொன்னதும் நான் போகச் சொல்லிட்டேன் சார்.
: அப்பறமும் ஏன், அவரு ரெண்டு மணிக்கூர் வெயிட் பண்ணாரு?
: சார், அவரு வந்ததும் ரெண்டு லேப்டாப் கொண்டு போகக்கூடாதுன்னு சொன்னேன், அதுக்கு அவரு நான் மினிஸ்டர்ன்னு சொன்னாரு. நான் உடனே சாரி சார், நீங்க போங்கன்னு சொன்னேன். இவ்ளோவும் 30 செகண்ட்ஸ்ல முடிஞ்சுட்டு சார். அப்பறம், அவர் யாரு, அவரு தாத்தா யாரு, அவரு அப்பா யாரு, லீமேன் பிரதர்ஸ் யாரு, அப்பேர்ப்பட்ட அவரை நான் எப்படி தடுத்து நிறுத்தலாம்ன்னு, அவர் தான் மீதி ஒன் ஹவர் 59 மினிட்ஸ் 30 செகண்ட்ஸ் பேசிட்டு இருந்தாரு சார்.