டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் – பத்திரிகையாளர்கள் மீது மிரட்டல்கள் விடுப்பது, ஊடக சுதந்திரத்துக்கு விடப்பட்ட சவால் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் விடுத்த கண்டன அறிக்கை…
“ தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் நிறுவனங்கள், மாநகராட்சி ஒப்பந்தங்களை முறைகேடாக எடுத்துள்ளது.” என்ற புலனாய்வு செய்தித்தொகுப்பினை கடந்த 04-09-2018 அன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
இதனைத் தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தியாளர் கோமல் கவுதம் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கோவைப் பதிப்பின் துணை ஆசிரியர் மயில்வாகனன் ஆகியோரை தொடர்பு கொண்ட மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் சந்திரபிரகாஷ் , தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதுடன் மிக மோசமாக மிரட்டியுள்ளார். பெண் பத்திரிகையாளர் கோமல் கவுதமிடம் , வாட்ஸ் அப்பில் நாகரீகமற்ற முறையில் தகவல்களை அனுப்பி அவதூறு செய்துள்ளார் சந்திரபிரகாஷ்.
பத்திரிகையாளர்கள் மீதான இந்த மிரட்டல் போக்கினை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
பத்திரிகையாளர்களை மிரட்டுவதும், தரக்குறைவாக சித்தரிக்க முயற்சிப்பதும் கருத்துரிமையை – ஊடக உரிமைகளை நசுக்கும் போக்கு என்றே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது. பத்திரிகையாளர்களிடம் முறைகேடாக நடந்து கொண்ட ஓப்பந்தக்காரர் சந்திரபிரகாஷ் மீது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சார்பில் இன்று (10-09-2018) சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் வழங்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. மேலும் பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்.




