வைணவ ஆலயங்களில் பகல் பத்து ராப் பத்து என்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கொண்டாடப் படும் அத்யயன உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக வைக்கப் பட்டிருக்கும் வாசல் கதவை வேறு பயன்பாட்டுக்காகத் திறந்து பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நிர்வாகம்.
பரமபத வாசல் என்பது, ஸ்ரீவைகுந்த ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப் பட வேண்டிய வாசல் கதவு. மற்ற நாட்களில் அதை மூடியே வைத்திருப்பர். இது, சம்பிரதாய வழக்கம். கோயில் ஆகம விதிகளில் அடங்காவிட்டாலும், அத்யயன உத்ஸவம் நடைபெறும் சம்ப்ரதாய கோயில்களில் வைக்கப் பட்டிருக்கும் பரமபத வாசல் கதவை, அத்யயன உத்ஸவம் அன்றி வேறு நாட்களில் திறக்கக் கூடாது என்பது சம்ப்ரதாய விதி. ஆனால் அதை மீறி, கோயிலில் அடுக்கப் பட்டிருக்கும் மூட்டைகளை பரமபத வாசல் கதவைத் திறந்து சாதாரண ஒரு வேலைக்காக பயன்படுத்திக் கொள்வது மிகவும் தவறு என்கின்றனர் வைணவப் பெருமக்கள்.
நடந்தது இதுதான்… ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அடுத்து திருப்பதி, திருவல்லிக்கேணி வரிசையில் இணைந்த மிக முக்கியமான கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர். இங்கே பரமபத வாசல் திறப்பு திருவிழா பெரும் விமர்சையாக நடைபெறும். பகல்பத்து ராப்பத்து உத்ஸவங்கள் முடியும் வரை, முறைப்படி திறக்க வேண்டிய நாட்களில் மட்டுமே இந்த சொர்க்க வாசல் கதவுகள் திறக்கப்படும். அதன் பின் அடுத்த வருடம் தான் திருவிழா நாட்களில் திறக்கப்படும். இதுதான் சம்பிரதாயம்.
ஆனால் அண்மைக் காலமாக இந்த விதி மீறப் படுகிறது. நேற்று (29.04.19) காலை 6.30 மணியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கோவிலின் பரம்பத வாசல் கோடவுன் வாசலாக மாற்றப் பட்டு, கோயில் நடைமுறையை மீறி திறக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது… என்று புகார் கூறுகின்றனர் பக்தர்கள். அறநிலையத்துறையின் இந்த அராஜகப் போக்குக்கு மண் வாரித் தூற்றி வருகின்றனர் சிலர்.
அண்மைக் காலமாக, ஸ்ரீவி. திருக்கோவிலின் ஆன்மீகம் மற்றும் ஐதீக விதிமுறைகள் மீறப்படுவதால் நமது நல்லெண்ணம் படைத்த சில இளம் பட்டாச்சாரிகளை நாம் இழந்துள்ளோம்… என்று உள்ளம் குமுறும் அன்பர்கள், இப்படிப்பட்ட விதிமீறல்களை மேற்கொள்ள இது ஒன்றும் அரசு அலுவலகம் அல்ல, நினைத்த நேரத்தில் நினைத்த அறையைத் திறந்து நினைத்த படி கதவுகளைத் திறந்து பயன்படுத்துவதற்கு..! இது கோயில். இதற்கு ஆகமங்கள், விதிகள் உண்டு என்று அறநிலையத்துறை அதிகாரிக்கு நினைவூட்டி வருகின்றனர்.
கோயிலை வைத்துதான் ஊர் உள்ளது. ஊரில் நல்ல செழிப்பும், மழைப் பொழிவும் விளைச்சலும் திகழ, அவ்வூர் அந்தணர்கள் மூன்று வேளை சூரியனைப் போற்றுவதும், வழிபடுவதும், கோயிலில் பூஜைகள் குறைவற நடைபெறுவதும் முக்கியம் என அந்நாளில் ராஜாக்கள் கருதினர். அதனால்தான் கோயில்களை முக்கியமானதாகப் போற்றி, ஆகமம் அறிந்த நல்லோரால் கோயில்களைப் பாதுகாத்தனர். ஆனால், சில ஆண்டுகளாக சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மட்டும் மழை பெய்வதில்லை. இறைவனின் கோபத்தினால்தான் மழை பெய்வது இல்லை எனக் கூறுகின்றனர் ஊர்ப் பெரியவர்கள்.
எனவே, சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஆணையர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் ஆலய அன்பர்கள், இங்கே பணிபுரியும் அறநிலையத்துறை அதிகாரி, ஆலய பணியாளர்கள் ஆகியோரே இந்த தீவினைகளுக்குப் பொறுப்பாவார்கள் என்று கை நீட்டுகின்றனர். எனவே இதுதொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்து, தவறு செய்தவர்களை தண்டிக்காவிட்டால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊர் மேலும் மோசமாகிவிடும் என்று உள்ளம் பதைபதைத்துக் கூறுகின்றனர்.
ஏப்.29 ஆம் தேதி காலையில் பதிவு செய்த வீடியோ…





we have to டாகà¯à®•à¯à®®à¯†à®£à¯à®Ÿà¯ ஆல௠these