பதிலடி தரும் விவாத நூல்களைப் படித்தறிந்து… இளைய தலைமுறையிடம் மனம்விட்டுப் பேசுங்கள்!

வேதங்களை இழிவுபடுத்தி ஒரு பதிப்பகம் நூல் வெளியிட்ட போது மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே சில லட்சம் காப்பிகள் விற்று போயின

பாரத தேசத்தின் வேதம், புராணம், இதிகாசம் – இவை உலக நாகரிகத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இயற்கை, பிரபஞ்சம், மனிதன், மனோதத்துவம், ஜீவன், ஜெகதீசன், விவேகம், வைராக்கியம்… போன்ற எண்ணற்ற அம்சங்களின் மேல் அற்புத தரிசனங்களை வெளியிட்டுள்ள கல்வியறிவு மூலங்கள் இவை.

இவற்றிலுள்ள எல்லாக் காலத்துக்கும் எல்லா மக்களுக்கும் பொதுவான விழுமியங்களையும் விஞ்ஞானங்களையும் உலக அளவில் எத்தனையோ மேதாவிகள் ஆய்ந்தறிந்து விளக்கி வருகிறார்கள். ஆனால் நம் நாட்டில் மட்டும் அவற்றை வக்கிரப் புத்தியோடு விமர்சிப்பதும் வேலைக்கு உதவாத கிரந்தங்களாக வீசி எறிவதும் கடந்த பல ஆண்டுகளாக நிகழ்வது வழக்கமாக உள்ளது.

இந்து மதத்தை தவிர்த்து இதர மதங்களைக் கொஞ்சிக் குலாவும் அரசியல் பிரபலங்கள், தேசியத்தை வெறுக்கும் இடதுசாரி மேதாவிகள் போன்றோர் ஒன்று கூடி இத்தகைய குள்ளநரி தந்திரத்திற்கு முனைகிறார்கள்.

விபரீதமான முறையில் நம் புராதன நூல்களையும் பிரசித்தி பெற்ற மரியாதைக்குரிய கதாபாத்திரங்களையும் மலினப்படுத்தி எழுதும் புத்தகங்களுக்கு அரசாங்க விருதுகள் கிடைப்பதோடு பெரிய பதிப்பக அமைப்புகள் அவற்றை வெளியிட்டு உள்நாட்டில் மட்டுமின்றி உலக அளவிலும் முக்கிய இடங்களில் அவை எளிதாக கிடைக்கும்படி செய்து வருகின்றன. பத்திரிக்கைகளும் அவை பற்றி உயர்வாக மதிப்பீடு எழுதுகின்றன.

சரியான வியாக்கியானங்களோடு உள்ளது உள்ளபடி விஷயங்களை விவரிக்கும் சிறந்த நூல்களை எழுதுவோர் இல்லாமல் போகவில்லை. ஆனால் அவற்றுக்கு அரசு விருதுகள் கிடைப்பதில்லை. பத்திரிக்கைகளும் ஆன்மீக நூல்கள் என்ற வரிசையில் அவற்றை ஒதுக்கி வைத்து சரியான மதிப்புரைகளை எழுதாமல் தவிர்க்கின்றன.

அதேசமயம் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் வேதங்களையும் திட்டி அவமதித்து எழுதும் நூல்களுக்கு பத்திரிக்கைகள் புகழ்ந்து விமர்சனங்களை எழுதுகின்றன. டிவி சேனல்கள் அவை பற்றி உற்சாகமாக கலந்துரையாடல்கள் நிகழ்த்துகின்றன. சரியான புரிதலோடு சரியாக விளக்கிப் பொருள் கூறும் நூல்களை குறித்து பேச்சே இருக்காது. அந்த புத்தகங்களுக்கு முக்கிய பதிப்பகங்களில் இடம் இருக்காது. பூஜை புத்தகங்கள் தோத்திர நூல்கள் போன்றவற்றை விற்கும் கடைகளிலேயேயே அவற்றையும் வைத்து விற்க வேண்டி உள்ளது. அதனால் மேதாவிகளின் புத்தகங்களாக அவற்றுக்கு இடம் கிடைப்பதில்லை. மக்களிடம் அவற்றின் மதிப்பு சென்று சேர்வதில்லை.

சமீபத்தில் தேவதத்த பட்நாயக் என்னும் எழுத்தாளர் புராண கதா பாத்திரங்களை சரியாகப் படித்து புரிந்து கொள்ளாமலேயே பல நூல்களை எழுதித் தள்ளியுள்ளார். இன்னுமொரு எழுத்தாளர் துரியோதனின் கண்ணோட்டத்தில் மகாபாரதம் என்று ஒரு நூல் எழுதியுள்ளார். கர்ணனை மகாபாரதத்தின் ஹீரோவாக்கி மற்றொருவர் எழுதியுள்ளார்.

மூல நூல்களைப் படிக்கும் பொறுமையோ அறிவுத் திறனோ அற்ற இளைய தலைமுறை மேற்சொன்ன நூல்களையே உண்மை என்று நம்பி மயக்கத்தில் ஆழும் அபாயம் உள்ளது. அவற்றுக்கு சரியான பதிலடி கொடுத்து விமர்சிக்கும் நல்ல நூல்களை மட்டும் காட்சி ஊடகங்களும் செய்தி ஊடகங்களும் கண்டு கொள்வதில்லை.

ஒரு பெரிய நிறுவனம் சமீபத்தில் வேதங்களில் உள்ள அற்புதமான விஞ்ஞானத்தை பல பாகங்களாக வெளியிட்டுள்ளது. அவை நாடு முழுவதும் மாதத்திற்கு ஆயிரம் காப்பிகள் விற்பது கூட கஷ்டமாக இருக்கிறது. அதே சமயம் வேதங்களை இழிவுபடுத்தி ஒரு பதிப்பகம் நூல் வெளியிட்ட போது மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே சில லட்சம் காப்பிகள் விற்று போயின

அதற்குக் காரணம் இவர்கள் கொடுக்கும் பரபரப்பான விளம்பரங்களே! தொலைக்காட்சி சேனல்கள் கூட நம் கிரந்தங்களையும் கலாச்சாரத்தையும் அவமதிக்கும் சர்ச்சைகளை அதிகமாக ஏற்பாடு செய்கின்றன. அவற்றில் உள்ள அற்புதமான கருத்துக்களை எடுத்துக் கூறும் நிகழ்ச்சிகள் ஒன்று கூட தென்படுவதில்லை.

வாஸ்து, ஜோதிடம், மந்திர தந்திரங்கள்… போன்ற மக்களின் பலவீனங்களைப் பணமாக்கும் நிகழ்ச்சிகளின் இடையே பக்தி சேனல்களில் முக்கியத்துவம் இல்லாத நேரங்களில் மக்கள் அதிகம் பார்க்காத பொழுதுகளில் ஏதோ ஒரு சில ஆன்மீக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.

குழந்தைகளுக்கு நம் நாட்டு கலாச்சாரத்தில் சிரத்தை ஏற்படுத்தக்கூடிய பொறுப்பும் பொறுமையும் இல்லாத பெற்றோரால் அவை பற்றிய புரிதல் இல்லாத இளம் தலைமுறை உருவாகி வருகிறது. அவர்களின் கைகளில் இத்தகைய விபரீதமான புத்தகங்கள் கிடைத்தால் நம் பண்பாட்டின் மேல் நல்ல அபிப்பிராயம் ஏற்படாமல் போவதோடு அவற்றுக்கு ஆதரவும் கிடைக்காமல் போகும்.

நம் கலாச்சாரத்தின் மீது நல்ல அபிப்ராயம் உள்ள ஒவ்வொருவரும் இது குறித்து ஆலோசிக்க வேண்டும். நம் வேத புராண இதிகாசங்களை பற்றிய சரியான கோணத்தில் நல்ல விதமாக வியாக்கியானம் செய்துள்ள உள்நாட்டு வெளிநாட்டு மேதாவிகளின் நூல்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அவற்றின் விவரங்களையும் மதிப்பையும் தொழில்நுட்பத்தால் சமூக ஊடகங்கள் மூலம் அனைவருக்கும் தெரியச் செய்ய முயற்சிக்க வேண்டும்.

குள்ளநரி விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள நல்ல நூல்களைப் பெற்று அவற்றைப் படித்துணர வேண்டும். எதிர்கால தலைமுறைக்கு பாரத தேசத்தின் பெருமையை ஊட்டி வளர்க்க வேண்டும்.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
(ருஷிபீடம் மாத இதழ், மே 2019 தலையங்கத்தின் தமிழ்வடிவம்)

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...