1719347 mk stalin - 2026

அரசியல் புயலும்! ‘புயல்’ அரசியலும்!

அரசியல் தலையங்கம்
1719347 mk stalin - 2026

கனமழையால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை வேண்டும்.
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கனமழையால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

— இது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையைப் போல் இருந்தால், அதற்கு நாம் ஒன்றும் கருத்து சொல்ல முடியாது. இப்போதைய மழை வெள்ளக் காலத்தில், தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவுதான் இவை!

தற்போது சென்னையில் பெய்துவரும் மழையின் காரணமாக, முந்தைய காலங்களைப் போலவே, சொல்லப் போனால் அதைக் காட்டிலும் சற்று மோசமாகவே சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களை பெரிதும் சிரமத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

மழை பெய்தால் வெள்ளம் தான் என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொண்டு இதுதான் விதியெனக் கடந்து போய்க் கொண்டிருந்தவர்களும் இப்போது கேள்வி எழுப்புகின்றனர். காரணம், ஆளும் அரசின் மேயராக உள்ளவர்,ம் பேக்கேஜ் திட்டங்கள் என கடந்த வருடங்களில் சொல்லி, சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய்களை இதற்குச் செலவிட்டிருப்பதாகக் கூறி, கடந்த வருட வெள்ளக் காலத்திலேயே 90 சத பணிகள் முடிந்து விட்டது என்றெல்லாம் கூறியதுதான்!

இப்போது அடுத்த வெள்ளக் காலம் வந்துவிட்டது. வெள்ளமும் வந்து பெருகிவிட்டது. ஆனாலும், மழை நின்றுவிட்டால், வெள்ளம் தானாக ஒரு மணி நேரத்தில் வடிந்துவிடும் என்று சொல்லி வருகிறார் சென்னை மேயர். இந்தப் பேச்சுகள் இப்போது சமூகத் தளங்களில் பெரும் கேலிப் பொருளாக மாறியுள்ளது.

இடையில், சென்னை வெள்ள நீரைப் படம் பிடித்துப் போட்ட, குறிப்பாக சென்னை கொளத்தூர் தொகுதி அவல நிலையை வீடியோ பதிவு செய்த தனியார் சேனல்களின் வீடியோக்கள் அவற்றின் சமூகத் தளங்களில் இருந்து திடீரென நீக்கப் பட்டிருக்கின்றன. வெள்ள நீர் நீக்கப்படவில்லை, வெள்ளச் செய்திகள் மட்டுமே நீக்கப் பட்டிருக்கின்றன என்றும் சமூகத் தளங்களில் பலரும் உள்ளக் கொதிப்பை வெளியிட்டிருக்கின்றனர்.

இதனிடையே, போன வருடம் வெள்ளத்தின் போது படகு ஓட்டிச் சென்று கொளத்தூரில் மக்களைச் சந்தித்து சில வாக்குறுதிகளைக் கொடுத்து வந்த பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்…

சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தில் சென்னை தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம்.

அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், மழை வெள்ளத்தில் வேட்டியை மடித்துக் கட்டி இறங்கி நடந்தால் மட்டுமே போதும் என்ற எண்ணத்தில் இருப்பதால், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலையே இருக்கிறது. ஒவ்வொரு அரசும், மழைநீர் வடிகால் பணிகள் என்று கூறி செலவிட்ட பல்லாயிரம் கோடி நிதி என்ன ஆனது என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

அதிகாரிகள் கடுமையாக உழைத்தும், நிலைமையை முழுமையாகச் சீர்செய்ய முடியவில்லை என்றால், அடிப்படையிலேயே தவறு இருக்கிறது என்பதுதான் பொருள். சென்னை முழுவதும் பழுதான சாலைகளும், எங்கும் தேங்கி நிற்கும் மழைநீரும், இத்தனை ஆண்டு காலமாக, தமிழக ஆட்சியாளர்கள் செய்ததாகக் கூறிய மழை நீர் வடிகால் பணிகளைக் கேள்விக்குரியதாக்கியிருக்கின்றன.

தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்? – என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வெள்ளம் வரும், அதனைக் காரணமிட்டு செலவு செய்து பணம் போகும்! அண்ணாமலை கேட்பது போல், ”ஆமாம் இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்? தமிழக அரசு பாடம் படிக்க?!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.