
இந்திய ராணுவத்தை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதற்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராணுவத்தை அவமதிப்பதெல்லாம் கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது என்று கறாராகக் கூறிவிட்டது.
இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே நிலவிய மோதல் குறித்து கடந்த 2022ஆம் அண்டு டிசம்பர் மாதம் ராகுல் காந்தி பேசியிருந்தார். அவரது பேச்சில் இந்திய ராணுவத்தை விமர்சிப்பதைப் போன்ற கருத்துகள் இடம்பெற்றிருந்தன.
இதற்கு எதிராக ‘எல்லைப்புறச் சாலைகள் அமைப்பின்'(BRO) இயக்குனர் உதய் சங்கர் ஸ்ரீவாஸ்தவா புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
பாரதப் பிரதமர் மோடி மீதான வெறுப்பில் – நம் நாட்டின் படைகளின் வெற்றியைக் கொண்டாடக்கூட வேண்டாம்; குறைந்த பட்சம் தூற்றாமல் வாயை மூடிக்கொண்டாவது இருந்தால், தன் மீதான மதிப்பு கொஞ்சமாவது ஒட்டிக்கொண்டு இருக்கும் என்பதைக் கூட அறியாத ராகுல், உண்மையில் எதிர்க்கட்சித் தலைவராய் இருக்க லாயக்கில்லாதவர்தான்!
ஆபரேஷன் சிந்தூர் என்பதை பாஜக., தனது அரசியல் லாபத்துக்காக எடுத்துக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டைக் கூறும் முன், இதே போன்ற சூழ்நிலைகள் நாட்டில் நிலவியபோது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்ன செய்தது என்பது ராகுலுக்கு நினைவில்லையா அல்லது அது தங்கள் கட்சியின் தோல்வி என்பதைத்தான் இப்போது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறாரா?
‘நரேந்தர் சர்ண்டர்’ என்று ராகுல் கூறும் எதுகை மோனையை ரசிக்க ஒரு சில மர்ம மனிதர்கள் இந்த நாட்டில் இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் ராகுலையும் காங்கிரஸ் கட்சியையும் அருவெறுப்புடன் பார்க்கிறதே! ஒரு சில மர்ம மனிதர்களை குஷிப் படுத்துவதற்காக நாட்டின் பெரும்பாலான மக்களின் கோபத்தை அல்லவா காங்கிரஸ் இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதானே இப்போது காங்கிரஸை விட்டு பல தலைவர்கள் விலகிக் கொண்டிருப்பது?!
பாகிஸ்தானுக்கு போரில் நேரடியாக ட்ரோன்களை இயக்கி, போரில் பங்கேற்ற துருக்கி நாட்டில், எதற்காக காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறந்து வைத்திருக்கிறது என்கிற கேள்விக்கு பதில் அளிக்க துப்பில்லாமல் போனது ராகுல் காந்திக்கு! போரில் உதவிய சீனாவிடம் காங்கிரஸூக்கு என்ன தொடர்பு? எதற்காக ரகசியமாய் ஒப்பந்தம் போட வேண்டும்? – என்றெல்லாம் எழுப்பப் படும் கேள்விகளுக்கு ராகுலாலோ, காங்கிரஸின் தலைவர்களாலோ எந்த பதிலும் தர முடியாமல் போயிருக்கிறதே!
இந்நாட்களில் சொல்லப் போனால் காங்கிரஸ் தன் தேசியக் கட்சி என்ற அடையாளத்தை இழந்துவிட்டது என்பது தான் இந்திய அரசியல் ஏட்டில் எழுதப்பட்டிருக்கும்!





