
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
பாரத தேசத்தின் மீது தாக்குதல் நடத்த நினைப்பவர்கள் ஹிந்துக்களின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இதனைத் தெளிவாக அறிய முடிகிறது. பாரத தேசத்தின் வளர்ச்சியை சகித்துக் கொள்ள விரும்பாத தேசத்துரோகிகள் வளர்ச்சிக்குக் காரணமானவர்களை ‘ஹிந்துத்துவர்கள்’ என்று முத்திரை குத்தி கலவரம் விளைவிக்கிறார்கள்.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக அனைத்து மதங்களுக்கும், குலங்களுக்கும், ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் பாரத தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் பயன்படும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பார்த்து வருகிறோம். பகை நாடுகளுக்குச் சரியான புத்தி புகட்டிவரும் அதே வேளையில், ‘எங்களுடையது முன்னேறிய நாடு’ என்று வல்லரசுகளுக்கு உறுதியாக எடுத்துக் கூறும் துணிச்சல் நிறைந்த பாரதத்தை கவனித்து வருகிறோம். இப்படிப்பட்ட உயர்வுக்குக் காரணமான தலைமையை ‘ஹிந்துத்துவம்’ என்று குற்றம் சாட்டுவது இடதுசாரிகளுக்கும், எதிர்கட்சி அரசியல் வாதிகளுக்கும் வழக்கமாகி விட்டது. உண்மையில் முன்னேற்றமே ‘ஹிந்துத்துவம்’ என்றால், பாரத தேசம் ஹிந்துத்துவ தேசமாகவே இருக்க வேண்டும் என்று விரும்புவோம்.
சுதந்திரத்திற்கு முன்பு மட்டுமின்றி, சுதந்திரம் கிடைத்த பின்னரும் கூட வஞ்சனைக்கும் வன்முறைக்கும் ஆளானது ஹிந்து மதமே. அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் வெளிவந்த ‘சங்கூர் பாபா’ வழக்கு நம் தேசத்தில் மதமாற்றக் கும்பலின் கொடூரம் பல பத்தாண்டுகளாக எத்தனை ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைத் தெளிவாக்குகிறது.
ஹிந்து பாபாக்களின் வேடத்திலும், பக்தர்களின் வேடத்திலும் பிற மதத்தவர் செய்யும் சதித் திட்டங்களும், வன்முறைக் கொடூரங்களும், வியூகங்களும் ஹிந்துக்களை மத மாற்றம் செய்வதும், பாரத தேசத்தைத் துண்டாடுவதுமே அவர்களின் இலக்காக இருப்பதைப் பறை சாற்றுகின்றன. பொறுமையும், சமரசமும், இணைந்து வாழ்வதும் இயல்பாகக் கொண்ட ஹிந்துக்களின் உதார குணத்தையும், அப்பாவித்தனத்தையும் அந்தத் தீயவர்களான துஷ்டர்கள் வாய்ப்புகளாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஹிந்துக்களின் ஊர்வலங்களில் கல்லெறிவது, பக்தர்கள் காவடிகளைச் சுமந்து காலில் செருப்பின்று நடந்து செல்லும் பாதையில் கண்ணடித் துண்டுகளைப் போடுவது போன்ற தாக்குதல்கள் பாரத தேசத்தில் பல இடங்களில் நடந்து வருவதைக் காண முடிகிறது.
பங்களாதேஷிலும், பாகிஸ்தானிலும் ஹிந்துக்களின் மீது கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதேபோல், இந்தியாவின் மேற்கு வங்கம், காஷ்மீர், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஹிந்து விரோதிகளின் கொடுஞ்செயல்கள், தலைவிரித்தாடுகின்றன.
இச்செயல்கள் ஹிந்து மதத்தின் மீது மட்டுமின்றி பாரத தேசத்தைத் துண்டாடும் நோக்கதோடுதான் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் தேச ஒருமைப்பாடு ஹிந்துத்துவ கொள்கைகளால் மட்டுமே சாத்தியம் என்பது நிரூபணமாகிறது.
யோகம், தத்துவம், ஆயுர்வேதம், கலைகள், அமைதியான சுபாவம் போன்ற அற்புதங்கள் பலவற்றைத் தன்னில் கொண்டுள்ள ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்வது அர்த்தமற்றது. ஹிந்துக்களை ஜாதியின் பெயராலும் குலத்தின் பெயராலும் முன்பு பிரித்ததும், இன்று பிரிப்பதும் ஹிந்து விரோதிகளே.
அரசியல் ஆதாயத்திற்காக இன்று சில அரசியல் கட்சிகள் குலங்களையும் ஜாதிகளையும் கணக்கிட்டு மக்களைத் தூண்டி வருகின்றன. உயர்சாதியினரை மதமாற்றம் செய்தால் அதிகத் தொகை தருவதாகவும், பிற ஜாதியினரை மதம் மாற்றினால் குறைந்த தொகை தருவதாகவும் கூறி வேற்றுமை காட்டுவது மதமாற்றும் கும்பல்களே. இந்த உண்மைகள் ஹிந்து விரோதிகளின் கண்ணில் படவில்லை போலும்.
‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஹிந்து பெண்கள் வஞ்சிக்கப்பட்டு வரும் கசப்பான உண்மையை ஹிந்துக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்றே தோன்றுகிறது. ஹிந்துத்துவத்தோடு ஒன்றிணையாவிட்டால் தம் இருப்புக்கும் தேசத்தின் பாதுகாப்புக்கும் ஆபத்து விளையும் என்ற உண்மையை ஒவ்வொரு ஹிந்துவும் உணரவேண்டும்.
பாரத தேசத்தில் அமைதியையும், வளர்ச்சியையும் விரும்பும் பிற மதத்தவரும் ஹிந்துத்துவ கோட்பாட்டை விரும்ப வேண்டும். ஏனென்றால், இந்தக் கோட்பாட்டில் அவர்களுடைய மதத்தின் சுதந்திரமும் பாதுகாப்பும் வளர்ச்சியும் கூட அடங்கி உள்ளது என்ற உண்மை சற்று யோசித்தால் புரியவரும்.
பதவியும், அதிகாரமும் கிடைக்கவில்லை என்ற ஆத்திரம், கொள்ளையடிப்பதற்கும் அழிவுகளை ஏற்படுப்படுத்துவதற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இவையெல்லாம் சேர்ந்து ஹிந்துக்களின் மீது வெறுப்பாகவும், அரசாங்கத்தின் மீது பகையாகவும் வெளிப்படுகின்றன.
ஹிந்துத்துவ ஆட்சியாக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் போன்ற நேர்மையும் நீதியும் உள்ள மாநிலங்களில் வஞ்சகர்களும் தீவிரவாதிகளும் அடையாளம் காட்டப்படுவதும், ஊழல்வாதிகளின் ஆட்டம் அடங்கிப் போவதும், அனைத்து மத மக்களும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதும், வெளிப்படையாகவே காணமுடிகிறது.
இத்தனையும் பார்த்த பின்னரும் ‘ஹிந்து விரோதம்’ என்பது தேவைதானா? வளர்ச்சியை நோக்கி தேசத்தை நடத்தும் தலைமையின் மேல் குற்றம் சாட்டுவது விவேகம்தானா?
மதமாற்றம் என்பதையே அறியாமல், அமைதியையும் பொறுமையையும் இயல்பாக கொண்ட ஹிந்து மதத்தை விட உயர்ந்ததும் உண்மையானதும் உலகில் வேறொன்று உள்ளதா?
(தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், ஆகஸ்ட், 2025)





