
ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி கல்கிணற்றுவலசை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 10ம் வகுப்பு வரை 151 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
தலைமை ஆசிரியர் ரோஸ்மேரி உள்பட 8 பெண்,ஆசிரியர்களும் 3 ஆண் ஆசிரியர்கள் உள்ளனர். நேற்று வகுப்பு நடைபெற்று வந்த நிலையில், பள்ளியில் உள்ள குழாயில் தண்ணீர் இல்லை. அப்போது வகுப்பு ஆசிரியை அபிலாஷா மோட்டாரை போடுமாறு மாணவர்களை கூறியதாக தெரிகிறது.

மோட்டார் சுவிட்ச் போட ஒரு மாணவனும் மோட்டாரில் தண்ணிர் ஊற்ற ஒரு மாணவனும் சென்றனர். இதில் ஒருவர் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரமேஷ் மகன் எட்டாம் வகுப்பு மாணவரான கார்த்தீஸ்வரன் (13) சென்றுள்ளனர். அப்போது மோட்டாரிலிருந்து மின்சாரம் பாய்ந்து கார்த்தீஸ்வரன் பலியானார்.
மாணவர் உயிரிழந்த சம்பவம் கிராமத்திற்கு தெரிந்த நிலையில், இறந்த மாணவரின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக மாணவனின் வகுப்பு ஆசிரியை அபிலாஷா, தலைமையாசிரியர் (பொ) தமிழரசு ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் உத்தரவிட்டுள்ளார்.



