
புதுக்கோட்டை பேரன்ங்குளம் அரசு உதவிபெறும் தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் நுஜிபூர் ரகுமான்(15). புதுக்கோட்டை அசோக்நகரைச் சேர்ந்த சௌபர் சாதிக் மகன் ஆவார்.
மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி கணித ஆசிரியர், ரெக்கார்டு நோட் எழுதக் கொடுத்திருக்கிறார். அதில், நுஜிபூர் ரகுமான் ரெக்கார்டு நோட்டை முடிக்காமல் வந்துள்ளார்.. இதனால், கோபமடைந்த கணித ஆசிரியர், நுஜிபுர் ரகுமானை பிரம்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் மாணவனின் உடலில் முதுகு, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி மாணவன் தன் பெற்றோரிடம் கூறியதையடுத்து உடனே அந்த மாணவனை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தங்கள் பிள்ளையைக் கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுஜிபுர் ரகுமானின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்தனர்.
இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்டபோது, `இதுகுறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஆசிரியர் தவறு செய்திருப்பின் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள அறிக்கையில், “10-ம் வகுப்பு படிக்கும் மாணவரை ஆசிரியர் ஒருவர் காயம் ஏற்படும் வகையில் அடித்ததாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாகத் தற்காலிக பணியிடைநீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி, மெட்ரிக் என அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் உடலளவிலும் மனதளவிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை மீறி செயல்படும் ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் எச்சரித்துள்ளார்.



