
ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சிக் காலத்தை நிரந்தரமாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்றி பெற்றவர்களுக்கு அதன் தகுதி காலம் ஏழு ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும்.
தகுதித் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்ற பலருக்கும் வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர்கள் தகுதி காலாவதியாக உள்ளது.
இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தேர்ச்சிக் காலம் ஏழு ஆண்டுகள் வரைதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை நிரந்தரமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வந்துகொண்டிருக்கிறது. இது பற்றி அரசு ஆய்வு செய்து அறிவிக்கும்.
பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புற மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10, 12ம் வகுப்பு சான்றிதழை பெற்ற மாணவர்கள் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் பதிவு செய்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.