மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பாடத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கப்படுவதாக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் எம்.ஏ.,ஆங்கிலம் முதுகலை படிப்பில் 3வது செமஸ்டரில் commen wealth பாடப்பிரிவில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய Walking with the Comrades என்னும் கட்டுரை உள்ளது.
2017ஆம் ஆண்டு முதல் இப்பாடம் உள்ளது. இதற்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அந்த அமைப்பின் மாநில இணைச் செயலாளர் விக்னேஷ் தலைமையில் ஏபிவிபி அமைப்பினர் கடந்த வாரம் பல்கலைக் கழக துணைவேந்தர் பிச்சுமணியை சந்தித்து அந்தப் பாடத்தை நீக்குமாறு கோரினர்.
அப்போது, பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தான் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களிடம் உறுதி அளித்தார். இது ஊடகங்களில் செய்தியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நவ.11 நேற்று பல்கலையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததி ராய் மாவோயிஸ்ட்கள் குறித்து எழுதிய பாடத்தை நீக்குவதாகவும் அதற்கு பதிலாக கிருஷ்ணன் எழுதிய Nature Land என்ற கட்டுரை இடம்பெறுவதாகவும் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.
துணைவேந்தரின் இந்த அறிவிப்புக்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தங்களின் நியாயமான கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்று அந்த அமைப்பின் விக்னேஷ் தெரிவித்துள்ளார். அதேநேரம் இடதுசாரி அமைப்புகள் இந்த அறிவிப்பை விமர்சித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன
தி.மு.க., எம்.பி., கனிமொழி முதலில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். கனிமொழி தனது டிவிட்டர் பதிவில்,
‛ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்துவிடும்’ என தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, தி.க. தலைவர் வீரமணி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் இடதுசாரி எழுத்தாளர் வெங்கடேசன், இடதுசாரி மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன