
எதிர்காலக் கனவுகளுடன் படிக்கும் எந்த மாணவருக்குமே தாம் ஒரு ஐஏஎஸ்., ஆகவோ ஐபிஎஸ் ஆகவோ ஆட்சிப் பணி புரிய வேண்டும் என்பதில் ஆசை இல்லாமல் இருக்காது. சிலருக்கு அந்த ஆசை பூர்த்தி ஆகும். சிலருக்கு அது நிறைவேறாவிட்டாலும் ஏதாவது ஒரு குடிமைப் பணியில் அமர்ந்துவிட வேண்டும் என்ற துடிப்பு அவர்களுக்கு நல்ல பணியைப் பெற்றுத் தந்துவிடும்.
IAS தேர்வுக்கு அடிப்படைத் தகுதி:
இந்திய அளவில் IAS. IPS, IFS. IRS முதலிய தேர்வுக்கு அடிப்படைத் தகுதி தேர்வாளர் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்போது இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் புள்ளிவிபரங்கள், பேட்டிகளைப் பார்த்தேன். அதில் B.E, M.B.B.S, BSC M.SC (Agricultural) M.A முதலிய பட்டம் பெற்றவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
IAS தேர்வுக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் +2 படித்து முடித்தபின் கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ மற்றும் பிஎஸ்சி.,யில் நீங்கள் மூன்றாண்டு பட்டம் படிப்புப் படித்தால் போதும். அத்துடன் சிலர் கல்லூரியில் படிக்க முடியாவிட்டால் பல்கலைக்கழகங்கள் நடத்தும் அஞ்சல் வழிக் கல்வியில்
ஏதேனும் நீங்கள் விரும்பும் ஒரு பி.ஏ படித்தால் போதும். அதுவும் UPSC பாடத்திட்டதையும் நீங்கள் தெரிவு செய்யும் விருப்பப் பாடத்தின் அடிப்படையில் இப்பட்டத்தைத் தெரிவு செய்ய வேண்டும்
.பட்டப் படிப்புப் படிக்கும் காலத்தில் UPSC தேர்வுக்கான தேடலில் தொடர்ந்து செயல் பட்டால் பட்டம் முடித்த அதே ஆண்டில் முதல் நிலைத் தேர்வு எழுதி வெற்றி பெற்று விருப்பப் பாடத் தேர்வுக்கும் விண்ணப்பித்துவெற்றி அடைய முடியும்.
நான் புது டெல்லிக்கு அலுவல் நிமித்தமாகச் சென்ற போது தங்கி இருந்த இடத்தைச் சுற்றி IAS பயிற்சி மையங்கள் இருந்தன. அதில் ஒரு மையம் நான் தங்கி இருந்த அறைக்கு மேல் இருந்தது. அங்கு டெல்லிப் பல்கலைகழகப் பேராசிரியருடன் சென்று பார்த்து விட்டு நடைமுறைகளைக் கேட்டு வந்தேன்.
அப்போது அந்த மையத்தின் இயக்குநர் என்னிடம் சொன்னது டெல்லியிலிருக்கும் மாணவர்கள் பெரும்பாலும்+2 முடித்தவுடன் அஞ்சல் வழியில் பட்டப் படிப்பில் சேர்ந்து IAS தேர்வுக்குத் தயாராகி விடுகிறார்கள். அதிலும் ஆன்லைன் மூலம் தரவுகளைத் திரட்டிப் படிக்கிறார்கள். தேர்வு எழுத விரும்புபவர்கள் அவரவர்கள் தாய்மொழியில் தேர்வு எழுதலாம்.
IAS ஆவது உறுதி என்ற சபதம் எடுத்துவிட்டால் மூன்றாண்டு பட்டம் படித்தால் போதும்; ஆண்டையும் வீணாக்கமல் பிறருக்குக் கிடைக்கும் டாக்டர், பி. இ இடத்தையும் தடுக்காமல் மன உறுதியோடு தேர்வு எழுதிப் பலர் வெற்றி பெற்றுள்ளார்கள்.
மாணவர்கள் விருப்பமில்லாமல் சிலர் பெற்றோர்களின் கட்டாயத்தில் தேர்வு எழுதி விரக்தி நிலையில் இருப்பதையும் பார்க்கிறேன். மாணவர்கள் விரும்பும் படிப்புக்கும், பதவிக்கும் முடிவு எடுக்கப் பழக்குவது பெற்றோரின் கடமையாகும்.
நான் உயர்கல்வியில் 40 ஆண்டுக்கால அனுபவத்தில் பல தேர்வுகளை நடத்திய அனுபவத்தில் இக்கருத்தைப் பதிவிட்டுள்ளேன்.படிப்பு என்பது மாணவர்களுக்குச் சுகமான அனுபவமாக இருக்க வேண்டும். அது மன அழுத்தமாக இருக்கக் கூடாது. எந்தப் படிப்பிலும் எந்த வேலையிலும் சாதிக்க நினைத்தால் சாதிக்கலாம் என்பது என் வாழ்வில் நான்
கண்ட உண்மை.
முடியும் என்றால் முடியும் உழைப்பும் படிப்பும் உங்கள் கைகளில் காத்திருக்கின்றன. திட்டமிடுங்கள்! வெற்றி நிச்சயம்!!
- சுபாஷ் சந்திரபோஸ்
(பணி ஓய்வு பெற்ற பேராசிரியர்)