சென்னை:
அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பல்கலைக்கழகங்களில் பரவலாக முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் வந்துள்ளதால், அது குறித்து அவர் ஆலோசனை நடத்தக் கூடும் என்று தெரிகிறது. அண்மையில், பல்கலைக் கழகப் பணி நியமனங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கையுடன் பிடிபட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் கூட்டத்தை சனிக்கிழமை இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூட்டியுள்ளார். இது தொடர்பாக மருத்துவம், வேளாண்மை, கால்நடை, அண்ணா பல்கலைக்கழகம், சட்டம் உள்ளிட்ட அனைத்து பல்கலைக் கழக துணைவேந்தர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10.30க்கு இந்தக் கூட்டம் தொடங்குகிறது. கூட்டத்திற்கு பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
மேலும் இந்தக் கூட்டத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்தும், பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப் படவுள்ளதாகக் கூறப்படுகிறது.