புதுதில்லி:
நாகாலாந்து மாநிலத்தில் என்.டி.பி.பி.-பா.ஜ.க. கூட்டணி அதிக தொகுகிளில் முன்னிலையில் உள்ளது. இம்மாநிலத்தில் இக்கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிக் கூட்டணி பின்னடவைச் சந்தித்து வருகிறது. பாஜக., திரிபுராவில் முன்னிலையில் உள்ளது.
திரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு 74 சதவீத வாக்குகள் பதிவாயின. மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடந்தது. மேகாலயாவில் 67 சதவீதமும், நாகாலாந்தில் 75 சதவீதமும் வாக்குகள் பதிவாயின.
இந்நிலையில் 3 மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர், வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
காலை 9 மணிக்குப் பிறகு முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியது. 11.30 மணி நிலவரப்படி திரிபுரா மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 40 தொகுதிகளில் பாஜக, முன்னிலை பெற்றது. இடதுசாரி கட்சி18 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. அங்கு ஆட்சி அமைக்க 30 தொகுதிகள் பெரும்பான்மை பெற்றிருந்தால் போதும். அந்த வகையில், இடதுசாரிகள் தங்கள் செல்வாக்கை இழந்து வருகின்றனர். நாட்டில் மேற்குவங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில்தான் இடதுசாரிகள் ஆட்சி இருந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தனர். தற்போது கேரளத்தில் மட்டுமே இடதுசாரி ஆட்சி உள்ளது. திரிபுராவில் ஆட்சியைப் பறிகொடுக்கின்றனர் கம்யூனிஸ்ட்கள். இதனிடையே வெற்றி முகத்தில் உள்ள பாஜக.,வினர் உற்சாகமாக ஹோலி கொண்டாடினர். தாங்கள் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சி அமைப்போம் என்று பாஜக., செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் கூறினார்.
மேகாலயாவில் காங்கிரஸ் 23 தொதிகளிலும், என்பிபி 14 தொகுகளிலும், பா.ஜ.க. 5 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் முன்னிலை பெற்றன.
நாகாலாந்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி – பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. 11.30 மணி நிலவரப்படி இந்த கூட்டணி 29 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. நாகா மக்கள் முன்னணி கூட்டணி 26 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் 1 தொகுதியிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றன.
நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்று வரும் நிலையில், பா.ஜ.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலா 60 தொகுதிகளை உள்ளடக்கிய இந்த 3 மாநிலங்களிலும் தலா 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்ததால் அங்கு ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டதால் ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
நாகாலாந்தில் வடக்கு அங்காமி – 2 தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நெய்பியூ ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டார். எனவே எஞ்சிய 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது