அரசின் இலவச லேப்டாப்களை உண்மையிலேயே மாணவர்கள் பயன்படுத்து கிறார்களா? அல்லது விற்று விட்டனரா? அவை மாணவர்களின் படிப்புக்கு பயன்பட்டதா? என்பதை கணக்கெடுத்து அறிக்கை தர அனைத்து மாவட்ட சிஇஓ-க்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவ-மாணவியருக்கும் பாலிடெக்னிக் பயிலும் மாணவர்க்கும் இலவச லேப்டாப் – மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், லேப்டாப் பெறும் மாணவ, மாணவிகளின் விவரங்கள், ஆதார் எண் உள்ளிட்டவை EMIS – கல்வித் தகவல் மேலாண்மை இணையத்தில் பதிவேற்றப் படுகின்றன. இந்த லேப்டாப்களை மாணவர்களைத் தவிர வேறு யாருக்கும் வழங்கக் கூடாது.
ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றதும் கொண்டு வரப் பட்டு, கடந்த 8 ஆண்டுகளாக அமலில் உள்ள இந்த திட்டத்தால் மாணவர்களுக்கு எத்தகைய பயன்கள் கிடைத்துள்ளன என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிலையில், இலவச மடிக்கணினி பெற்றுள்ள மாணவர்களிடம் 15 வகையான தகவல்களை பெற அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அந்தத் தகவல் கேட்பில்…
இலவச மடிக்கணினியை மாணவர்கள் பெற்ற வருடம், அந்த மாணவர் தற்போது தொடர்ந்து படிக்கிறாரா, சுயதொழில் செய்கிறாரா, வேலை செய்கிறாரா?
பள்ளியில் எப்போது லேப்டாப் வழங்கப்பட்டது?
லேப்டாப்பை பயன்படுத்தி பாடம் நடத்தப்பட்டதா?
படிப்புக்கு தேவையான சாப்ட்வேர் வழங்கப்பட்டதா?
லேப்டாப்பில் உள்ள தகவல்கள் படிப்புக்கு பயன்பட்டதா?
வழங்கிய ஓராண்டுக்குள் லேப்டாப்பில் பழுது ஏற்பட்டதா?
மாணவர்கள் தற்போது லேப் டாப்பை வைத்துள்ளனரா?
லேப்டாப்பின் தற்போதைய பயன்பாடு என்ன?
லேப்டாப்பை மேற்படிப்புக்காக பயன்படுத்துகின்றனரா?
லேப்டாப்பை வேறு யாருக்கும் கொடுத்து விட்டனரா?
லேப்டாப் பழுதாகியுள்ளதா?
- இத்தகைய விவரங்களை சேகரித்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.