December 4, 2021, 10:27 am
More

  கல்வெட்டியல் ஆய்வறிஞர், முன்னாள் தினமணி ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் காலமானார்..!

  airavatham mahadevan - 1

  சென்னை: தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன், திங்கள்கிழமை இன்று அதிகாலை நான்கு மணிக்கு அவருடைய இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88.

  சிறந்த கல்வெட்டியல் அறிஞராகத் திகழ்ந்தவர். அண்மைக் காலமாக உடல் நலக் குறைவால் அவதிப் பட்டு வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

  அக்டோபர் 2, 1930ல் திருச்சி, மண்ணச்சநல்லூரில் பிறந்தார். திருச்சி தூய வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1954-லிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியிலும், 1987 – 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.

  சிந்து எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள், குறிப்பாக தமிழ் பிராமி எழுத்துக்கள் மீதான ஆர்வம் அவரைக் கல்வெட்டு எழுத்தியலின் மீது ஈர்த்தது. முதலில் பழங்கால நாணயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த மகாதேவன் பின்னர் கல்வெட்டு எழுத்துக்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.

  1966-ஆம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் மகாதேவன் கலந்து கொண்டார்; கரூர் அருகே புகலூரில் காணப்பட்ட குகையெழுத்துகளில் கூறப்பட்டிருந்த செய்தியை (அரசர்களின் பெயர்கள்) வெளிக்கொணர்ந்ததை ஒட்டி அவர் மாநாட்டிற்கு அழைக்கப் பட்டிருந்தார். 1966ல் தமிழ் பிராமி எழுத்துகளுக்கான திரட்டு ஒன்றை வெளியிட்டார்.

  1970ல் தொடங்கி, பல ஆண்டுகள் முயன்று சிந்து சமவெளி எழுத்துக்களைப் பற்றிய ஆய்வு மேற்கொண்டு, சிந்து நாகரிக எழுத்துக்கள் திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவையே என்ற முடிவினை அறிவித்தார்.

  airavatham mahadevan2 - 2

  இந்திய அரசு வழங்கும் 2009 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றவர். இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் 2009 – 2010 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

  ஐராவதம் மகாதேவன் குறித்து அவரின் கீழ் தினமணியில் பணி புரிந்தவர்கள் குறிப்பிடும்போது… கம்பீரம் நிறைந்தவர். கடும் நேர்மையாளர். பழந்தமிழ் இலக்கியத்தில் தோய்ந்தவர். உலகப் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் கூட! நியாயத்தின் பக்கம் மட்டுமே நிற்பவர். எதன் பொருட்டும் யாரோடும் சமரசம் செய்து கொள்ளாதவர்.

  அவர், 1987 முதல் 91 வரையில் தினமணி ஆசிரியராக இருந்தார். 2009 ஆம் ஆண்டு
  பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. தினமும் காலையில் உ.வே.சா. படத்தை வணங்கி விட்டுத்தான் பணியைத் தொடங்குவார். வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்து வந்தார்.

  தினமணியில் யார் வேண்டுமானாலும் பணியில் சேரலாம். உரிய தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் எல்லோருக்கும் வாய்ப்பு உண்டு என்ற முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியவர். அதனால் தான் நாங்களெல்லாம் தினமணியில் சேர முடிந்தது. பத்திரிகை லேஅவுட் முறையை மாற்றியதும் இவரே. எங்கள் கல்லூரி இதழியல் துறை கூறிய யோசனைகளை ஏற்றுக் கொண்டார். இவருடைய காலத்தில்தான் தினமணி நாளிதழின் இணைப்பு இதழ்கள் தரமாக வெளிவந்தன. வணிகமணி, வெள்ளிமணி, தமிழ்மணி போன்ற தரமான முயற்சிகள். அவற்றை எல்லாம் மறக்க முடியாது… என்று நினைவு கூர்ந்தனர்.

  இன்று காலமான ஐராவதம் மகாதேவனின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை சென்னை பெசண்ட் நகர் இடுகாட்டில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். (தகவலுக்கு… போன்: 044 2253 3230 / 90082 41414 )

  News Summary: Former Dinamani Editor and Epigraphist Iravatham Mahadevan (88) expired today– Monday Morning at 4 a.m. at his Chennai Aadambakkam Residence. Cremation today at Chennai Besant Nagar Electric Crematorium. 

  Thiru Iravatham Mahadevan,. Former Dinamani Editor, B1 Narumukai Apartments, Brindavan Nagar Extention, Adambakkam, Chennai-88.
  Phone 044–22533230 Cell 9008241414

  1 COMMENT

  1. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ரங்கராஜன் பெங்களூரில் இருந்து.பழக இனிய வர்த்தக.இரண்டு முறை இவரை தினமணி அலுவலகத்தில் சந்தித்து உரையாடி இருக்கிறேன்

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,787FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-