
பருவநிலை மாறுதல்களையும், அவற்றால் ஏற்படும் சமூக, பொருளாதார, வாழ்வாதார, அரசியல், இயற்கைப் பேரிடர் பாதிப்புகள், போன்றவற்றை குறித்து அறியாமையினால், பருவநிலை மாறுதல் என்பது, நம்மூர் அயனாவரத்தினருகே ஏதோ இரு பைக்குகள் மோதி விபத்து என்ற செய்தியை படித்துவிட்டு கடந்துபோவதுபோல அலட்சியப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.
பருவநிலை மாறுதல்களை பற்றி தெரியாததாலோ, அல்லது தெரிந்தும், அலட்சியப்படுத்தியதாலேயே எகிப்திய பாரோக்களின் அரசுகள் பொருளாதார, சமூக, அரசியல் பிரச்சனை சந்தித்ததும், இயற்கைப் பேரிடர்களை பற்றி அறிவில்லாததால் 12 – 13 – ம் நூற்றாண்டிலிருந்த கொலராடோ பீடபூமியிலிருந்த அனாசாஜி நாகரிகம் அழிந்ததும், அங்கோர்வாட் 15 ம் நூற்றாண்டில் கைவிடப்பட்டு, மக்கள் வாழத்தகுதியில்லாததாக மாறியதும், கி பி 800 – 1200 ல் நிலவிய வெப்பநிலை அதிகரிப்பால், வைக்கிங்குகள் கிரீன்லாந்தில் குடியேறியதும், 4000 – 4200 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி, ஹரப்பா நாகரிகம் பருவநிலை மாறுதல்களினாலேயே பஞ்சம் நிலவியதால் அழிந்தது என்பதும் புவிஅறிவியல்-பழங்கால சூழலியல்-பழங்கால பருவநிலை மாறுதல்களை ஆராயும் விஞ்ஞானிகளினிடையே மிக சாதாரணமாக தெரிந்த விஷயங்கள்.

மற்றோர் உதாரணமாக, மிகச்சிறப்பான காலத்தை 300 – 31 BCE ல் கொண்டிருந்த எகிப்தை சொல்லலாம். டோலோமிகளால் ஆளப்பட்டுவந்த இந்த காலகட்டத்தில்தான் அலெக்ஸாண்ட்ரியா நூலகமும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அந்தக்காலத்தில் நைல்நதிநீரை நம்பி விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இங்கிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தள்ளி பூமியின் மறுபக்கம் இருந்த எரிமலைகள் வெடித்தபோது, அவற்றிலிருந்து வந்த புகை, வளிமண்டலத்தில் சல்பர் துகள்களை அதிகமாக்கி, அதனால் பருவநிலை மாறுபட்டு, நைல்நதியின் நீர்பிடிப்புப்பகுதிகளில் மழை குறைந்து, அதனால் விவசாயத்துக்கு தேவையான நீர் கிடைக்காததால், எகிப்தில் கலகங்கள் ஏற்பட்டது சமீபத்தில் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஏன், சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள புகார் நகரம் கடற்கோளால் அழிந்தது என்றும், காவிரியில் கடந்த சிலநூறு ஆண்டுகளுக்குமுன்னர் பெரும்வெள்ளம் வந்ததால், காவிரிக்கரையோரம் இருந்த சிலபல கிராமங்கள் அழிந்ததும், மைசூரினருகே உள்ள தலைக்காடு என்ற பகுதி பூகம்பத்தினால் மணல்மூடி மண்ணுக்குள் புதைந்ததும், முதல், இடை, கடை சங்க காலத்தில் வைகையில் வந்த வெள்ளங்களினாலும், வைகைநதி தனது இடத்தை மாற்றிக் கொள்வதனாலும் பலமுறை வைகைக்கரையோரம் இருந்த பாண்டியரின் தலைநகரங்கள் அழிந்ததும் தெரிந்ததே.

புவியியலில் ஒரு விஷயத்தை நாங்கள் நினைவுகொள்வது வழக்கம். அதாவது, புவியியல் என்பது புவியின் வரலாறு. வரலாறில் சுழல் என்பது நியதி.
அதாவது, முன்பொருகாலத்தில நிகழ்ந்த நிகழ்வு, குறிப்பிட்டகால இடைவெளியில் மீண்டும் நிகழும். இது, சிலஆயிரமாண்டுகால மனிதகுல வரலாற்றிற்கும், புவியின் நீண்ட, கோடிக்கணக்கான ஆண்டுகால வரலாற்றிற்கும் பொருந்தும்.
இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், வரலாறு தன்னை மறந்தவரை மன்னிப்பதேயில்லை. மனிதகுல வரலாற்றைவிட, புவியின் வரலாறை மறந்தவர்க்கு முற்றழிவு (Extinction) மட்டுமே புவியால் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. ஒரு முறையல்ல, இரு முறையல்ல, கடந்த 54 கோடி வருடங்களுக்குள் 5 முறை புவியிலிருந்த 90 % உயிரிகளையும், 30 முறை சிறிய அளவிலும் முற்றழிவுக்கு உட்படுத்தியுள்ளது
- மு.ராம்குமார் (இணை பேராசிரியர், பெரியார் பல்கலை)



