
திருவள்ளுவரின் படத்தை வெள்ளுடையில் இருந்து காவி உடைக்கு மாற்றி, நெற்றியில் விபூதிப் பட்டை, ருத்திராட்ச மாலை என்று திருவள்ளுவரை அவரது பழைய பாணி உருவத்தில் மாற்றி, தெய்வப் புலவர் திருவள்ளுவர் என்ற வாக்குக்கு ஏற்ப படத்தை வரைந்து பாஜக., தனது டிவிட்டர் பக்கத்தில் செய்த படப் பதிவு, இப்போது ஊடகங்களில் சர்ச்சை ஆக்கப் பட்டுள்ளது.
கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றியவர் திருவள்ளுவர். மதங்கள் எலாம் தோன்றுவதற்கு முன்பே தனது கருத்துகளை மதங்களைக் கடந்து பொதுவான ஒழுக்க நெறியை முன்வைத்து வழங்கியவர் திருவள்ளுவர்.
ஐவகை நிலத்துடன் நிலத்துக்கு ஒரு கடவுளைப் படைத்து வணங்கி வழிபட்ட தொன்மையான தமிழர் பண்பாட்டில், வாழ்வியல் நெறிகளே இருந்தது, பின்னாளில் மதம் என்று வெளிநாட்டவரால் அடையாளம் காட்டப்பட்டது. ஆயினும், பாரத நாட்டில் வழங்கிய தத்துவ மரபில் சைவ, வைணவ, ஜைன தத்துவங்களில் சிறப்பானவற்றைத் தமது திருக்குறள் நூலில் எடுத்தாண்டு, அதனை பொதுமறையாக அமைத்தவர் திருவள்ளுவர்.
இருப்பினும் அக்கால வழக்கத்தின் படி, இறைவனை, இறையியல் கருத்தை, அறம், பொருள், இன்பம் வீடு என நான்கையும் தனது திருக்குறளில் புகுத்திப் பாடிய திருவள்ளுவர், நாத்திகத்தை அனுசரித்தவர் அல்லர். அவர் ஆத்திகராய், ஆத்திக அடையாளங்களுடன் வாழ்ந்தவர்தாம். ஆனால், நாத்திகத்தை முன்னிறுத்தி பிரசாரம் செய்து ஆட்சியைப் பிடித்த திமுக., தமிழகத்தில் பெருவாரியான மக்களின் எண்ண ஓட்டத்தை சதி செய்து தனது சினிமா, ஊடக பிரசாரத்தின் மூலம் வெறுப்புணர்வைத் தூண்டி, கட்டமைத்தது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு மீதும், பாஜக., மீதும், பிரதமர் மோடியின் மீதும், வெறுப்பு உணர்வு பிரசாரத்தைக் கட்டமைத்தோம் என்று திருமாவளவன் உண்மையை ஒரு டிவி பேட்டியில் ஒப்புக் கொண்டார்.
அது போல், திமுக.,வும் திராவிடர் கழக தொடர்பில் உள்ளவர்களும் கடந்த அறுபது ஆண்டு காலமாக ஒரு வெறுப்பு உணர்வுப் பிரசாரம் மூலம் ஒரு மாயத் தோற்றத்தை மக்கள் மனத்தில் கட்டமைத்து வந்தனர்.
ஆங்கிலேய அடிமை ஆட்சியை தமிழ்மண்ணில் ஏற்படுத்தவே, கிறிஸ்துவ சர்ச்சுகளை இங்கே அமைத்து அரசியல் செய்தனர் ஆங்கிலேயர். அவர்களின் அடிவருடிகளாய் கோடிகோடியாய் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் சொல்படி அரசியல் செய்தவர்கள் திராவிடர் கழகமும் அதனில் இருந்து பிரிந்த திராவிட இயக்கங்களும், கட்சிகளும் என்பது வரலாறு காட்டும் உண்மை.
இந்த நிலையில், தெய்வப் புலவர் திருவள்ளுவரின் தோற்றத்தையே சிதைத்து, ஆட்சி அதிகாரம் கையில் இருந்தது என்பதற்காக, தமிழகத்தின் ஆன்மிக அடையாளமாகத் திகழ்ந்த திருவள்ளுவரை நாத்திகராக உரு மாற்றி படம் வரைந்து, இதுதான் அதிகாரபூர்வ திருவள்ளுவர் படம் என்று இட்டுக் கட்டினர் திராவிட இயக்கத்தினர்.
இந்நிலையில், தங்கள் மரபுக்கு ஏற்ப, திருவள்ளுவரின் இயல்பான தனித்த தோற்றத்தை வெளிப்படுத்தும் வண்ணம் திருவள்ளுவரின் படத்தை காவி உடையணிந்த வகையில் பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.
இதனை வழக்கம் போல் ஊடகங்கள் துணை கொண்டு, இன்று சர்ச்சை ஆக்கியுள்ளது திமுக.,
அண்மைக் காலமாக, தமிழினத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையிலும், இதுவரை திராவிட இயக்கத்தவர்களால் பொய்யாகத் திணிக்கப்பட்டு, பிரசார பலத்தினால் மறக்கடிக்கப் பட்ட பழந்தமிழ் அறிஞர்கள், புலவர்கள் ஆகியோருக்கு மீண்டும் ஆன்மிக வடிவத்தை ஏற்படுத்தும் வண்ணம் உண்மைத் தமிழர்கள் ஈடுபட்டு வருவதை, போலி திராவிட இயக்கத்தினர் சர்ச்சை ஆக்கி வருகின்றனர்.
அன்னை பராசக்தியைப் பாடிய மகாகவி பாரதியாரின் படம் வரையப் பட்ட பாடநூல் கழக புத்தகத்தில், அவரின் தலைப்பாகையில் காவி நிறம் புகுத்தப் பட்டதாக குற்றச்சாடு எழுந்தது. நாட்டின் இயல்பான மூவண்ணத்தில் வரையப் பட்ட தேசியக் கவியின் படத்தில், பாரதியின் தலைப்பாகையில் ஓவியரின் கற்பனையில் அவ்வாறு அமைந்திருக்க, திராவிட மூளையைப் புகுத்தியவர்கள் அதில் காவி ஏறிவிட்டது என்று சர்ச்சைகளை ஏற்படுத்தினார்கள்.
திருவள்ளுவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு. அவர் திருக்குறளை மத நூலாக எழுதவில்லை என்பதும், மக்களுக்கான வாழ்வியல் நெறிமுறை ஒழுக்கங்களைக் குறிப்பிட்டு, மக்கள் மறையாக திருக்குறளைப் படைத்தார் என்பதும், அவர் சார்ந்த சமயம் தொடர்பாக நிர்ணயிப்பதில் அறிஞர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாஜக.,வின் பதிவில் உள்ள படத்தில் திருவள்ளுவர் காவி உடையணிந்து, நெற்றியில் திருநீறு பூசி, ருத்திராட்ஷ மாலை அணிந்து உள்ளதைக் கண்டு மனம் பொறுக்க மாட்டாத நாத்திகர்கள், தங்கள் நெற்றியில் அணிந்த திருநீறு குங்குமத்தை அழித்ததைப் போல் திருவள்ளுவரின் நெற்றித் திருநீறையும் குங்குமத்தையும் அழித்துவிட்டதை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் அவர் நெற்றியில் திருநீறு ஏறுவதா என்று உள்ளம் குமுறி டிவிட்டர் பதிவுகளில் கருத்துகளை எழுதி வருகின்றனர்.



