கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெட்கம், மானம், சூடு , சொரணை உள்ளதா?

உரத்த சிந்தனை கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
sabarimali iyappan kovil 2 - 2026

சபரி மலை வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சீராய்வு மனு தாக்கல் செய்யும் வரையில் அந்த தீர்ப்பை செயல்படுத்தாமல் இருக்க கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். சீராய்வு மனு என்பது வழக்காடியவர்களின் உரிமை. ஆனாலும்,அவர்களின் உரிமையை தட்டி பறித்து உடனடியாக அன்றைய தினமே தீர்ப்பை அமுல்படுத்த போவதாக களத்தில் இறங்கியது கம்யூனிஸ்ட் அரசு.

ஐயப்ப பக்தர்களை காவல் துறையை ஏவி விட்டு கடுமையாக தாக்கியும் , பல்வேறு வழக்குகளை பதிந்தும் கொடுமை படுத்தியது. அதன் பிறகு ஏற்பட்ட சர்ச்சைகளும், சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் நாம் அறிந்தததே. சீராய்வு மனு மீதான உச்சநீதி மன்ற உத்தரவு குறித்தும் நாம் அறிவோம்.

அதே நேரத்தில் , 2017ம் ஆண்டு குறிப்பிட்ட பல தேவாலயங்கள் யாருக்கு சொந்தம் என்பது குறித்த ஆர்தோடக்ஸ் மற்றும் ஜெகோபைட் என்ற இரு கிருஸ்துவ பிரிவினருக்கிடையே நடந்த ஒரு வழக்கில் ஆர்தோடக்ஸ் பிரிவினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில், உடனடியாக கேரள கம்யூனிஸ்ட் அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பை அமுல்படுத்துவது சுலபமல்ல.

இது மதம் சார்ந்த, உணர்வுகள் குறித்த விவகாரம். அவசரப்பட்டு நாங்கள் அமுல்படுத்த முயற்சித்தால் இரு பிரிவினருக்கிடையே கலவரம் ஏற்படும், வன்முறை வெடிக்கும், சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்றெல்லாம் சொல்லி அமுல்படுத்த மறுத்தது.

இந்த வழக்கில் ஒரு அங்கமான எர்ணாகுளம் மாவட்டம் ‘மர் தோமா செரிய பள்ளி கொத்தமங்கலம் சர்ச்சின்’ நிர்வாகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க ஆவன செய்ய வேண்டுமென்று ஆர்தோடக்ஸ் பிரிவை சார்ந்தவர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

மூவாட்டுப்புழாவின் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பையும், அதை அமுல்படுத்த சொன்ன உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும், உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, அந்த சர்ச்சின் சொத்துக்களையும், வளாகத்தையும், அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளையும் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் தன் கட்டுப்பாட்டில் எடுத்து கொள்ள வேண்டும் என்றும், உத்தரவை மீறி அங்கே போராட்டம் செய்பவர்களை அகற்றுமாறும் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமைதி திரும்பியவுடன் அந்த தேவாலயத்தை ஆர்த்தோடாக்ஸ் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டதோடு கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசின் நிலைப்பாட்டை கடுமையாக கண்டித்ததோடு, உச்சநீதிமன்ற உத்தரவை மாநில அரசு அமுல்படுத்த காவல்துறையை அனுமதிக்க மறுத்ததை சாடியுள்ளது.

அய்யப்பன் கோவில் விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்த கம்யூனிஸ்ட் அரசு, கிருஸ்துவ மதம் குறித்த விவகாரத்தில் வேறு நிலைப்பாட்டை எடுத்துள்ளது கம்யூனிஸ்ட் கட்சியின் ஹிந்து விரோத போக்கை தெளிவாக்கியுள்ளதோடு, கிருஸ்துவ மதத்திற்குள்ளேயே ஒரு பிரிவினருக்கு ஆதரவாக செயல்படுவது மதங்களுக்குள்ளேயே சாதிய மோதல்களை உருவாக்கும் அந்த கட்சியின் தீய நோக்கத்தை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்தியாவில் மதவாத மோதல்களை, சாதிய பிளவுகளை திட்டமிட்டு உருவாக்கி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் முயற்சியில் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து செயல்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேசத்தின் நலன் கருதி, மக்கள் இவர்களை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதன் மூலம் மட்டுமே மத நல்லிணக்கமும், சமூக அமைதியும் காக்கப்படும்.

  • நாராயணன் திருப்பதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.