இதற்கெல்லாம் குற்றங்களைத் தெரிந்தே செய்வதும், அதிலிருந்து மீண்டுவரத் தங்களுக்காக கட்சியிலேயே வழக்கறிஞர் குழுக்களை வைத்துக் கொள்வதும், பொய் சொல்லியே வழக்குகளுக்கு வாய்த்தாக்கள் வாங்குவதும், அதற்காகவே பட்டப்படிப்புப் படித்த பண்பாடற்ற கல்வியாளர்களின் (பணத்திற்கோ, பதவிக்கோ, விருதிற்கோ ஆசைப்படும்) அறிவுரைகளும், பாரம்பரியமான ஊடகங்களின், குறிப்பாக தார்மிக உணர்வும், தன்மானமும் இல்லாத பத்திரிக்கை ஆரிசியர்களின் ஈனப் பிழைப்பும், போலி மதவாதிகளும், போலி நாத்திகர்களும் அடிக்கும் கொட்டங்களும், நேர்மையற்ற, ஆடம்பர அரசியல்வாதிகளுக்குப் பல்லக்குத் தூக்கும் அப்பாவித் தொண்டர்களுமே முழு முதற்காரணம்.
குலகல்வி முறை வேண்டாம் என்று கொத்தித்த அரசியல் வாதிகளின் குடும்பத்தினரே அரசியல் வாதியாக வர விரும்புவதும், குலத்தை முன்னிறுத்தியே தேசத்தின் சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதும் என்று அனைத்துத்துறையிலும் நேர்மை இல்லாதவர்கள் அதிகமாகப் பரவிக்கிடக்கிற தேசமாகிப் போனதைத்தான் இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எளிமையான, நேர்மையானவர்களின் குரல் மக்களின் செவிகளின் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.
தன்குலதைச் சேர்ந்தவர்கள் தேசத் துரோகம் செய்தால் அதற்கு நியாயம் கற்பிப்பதும், மற்றவர்கள் செய்தால் நிந்திப்பதுமான குணம் மாறவேண்டும். ஊழல் செய்தவர்கள் நல்ல தமிழில் பேசினால் அவர்கள் நல்லவர்கள் அல்ல, பக்திமான் போல வேடம் போட்டாலும் தீயவர்கள்தான் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் தேசம் தலை நிமிர்ந்து நிற்கும்.
மனச்சாட்சியும், நீதித்துறையும் நேர்மையாகச் செயல்பட வேண்டும். எத்துணை சாவுகளைப் பார்த்தாலும், ஒரு ஒட்டுத் துணிகூடக் கூடவரப் போவதில்லை என்ற பக்குவம் பிறர் பொருளையோ, தேசத்தின் சொத்துக் களையோ கொள்ளை அடிப்பவர்களின் நினைவுக்கு வருவதே இல்லை. பிடிபட்டவுடன் அவர்களுக்கு திடீர் நெஞ்சுவலி நாடகக் காட்சிகள் வந்து விடுகிறது. போலிச் சான்றிதழ் கொடுக்க மருத்துவர்கள் இருக்கவே இருக்கிறார்கள். சிறைச் சாலைகளின் கதவுகளுக்கு அத்தனை பலம் இருக்கிறது.
“பிடிபட்ட பின்தானே கள்வன், அதுமட்டும் அவன்கூடத் தலைவன்” என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகள்தான் இன்றுவரை உண்மை.
படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்ற மகாகவி பாரதியின் வாக்குப் பொய்க்காது.
அரசியல் வாதிகளே..நீங்கள் பொதுச் சொத்தைத் திருடநினைக்கும் முன்பாக ஒரு நிமிடம் உங்கனின் தீவினையால் துன்பப்படப் போகும் உங்கள் பிள்ளைகளை நினையுங்கள். சந்ததி இல்லாதவர்கள் உங்கள் மனச்சாட்சியைக் கேளுங்கள். மனச்சாட்சியே இல்லாதவர்களை இன்னும் இறைவன் படைக்க வில்லை என்று நம்புகிறேன்.
“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.” – தமிழ் மறை.
கட்டுரை: மீ.விசுவநாதன்



