நீட் தேர்வும், நீடிக்கும் குழப்பமும்! – புதிய முதலமைச்சர் கவனம் செலுத்துவாரா?

தமிழக அரசின் நடவடிக்கையை நம்பி, மாணவர்கள் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதும், தேர்வுக்கு தயாராகமல் இருப்பதும் பெரும் பின்விளைவுகளையே மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்கொள்ள நேரிடும்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் (NEET – NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்படும் தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வின் அடிப்படையில்தான், இனி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற சூழலில், அதிலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறி இருக்கிறது. இதன்மூலம் தமிழக மாணவர்கள் இனி நீட் தேர்வு எழுத தேவையில்லை என்றும், +2 இறுதித்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அரசு கூறுகிறது. சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆகப் போகிறதே தவிர, அதற்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கப் பெறாததால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.

நீட் தேர்வுக்கு விலக்கு ஏன்?

சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மாநில பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம் போன்ற பல்வேறு பாடத் திட்டங்களில், நாடு முழுவதும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில், சி.பி.எஸ்.இ., என்.சி.ஆர்.டி., ஆகிய பாடத் திட்டத்தின் அடிப்படையிலே நுழைவுத் தேர்வு நடைபெறும். இதனால், மற்ற பாடத் திட்டங்களில் பயின்றவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தாக்கம் எழுந்த நிலையில், நீட் நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான சட்டம் மத்திய அரசால் முதலில் அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியுள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சில் திருத்தச் சட்டம்-2016 என அழைக்கப்படும் அந்தச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் மருத்துவக் கல்வி இருப்பதால், அதில் உள்ள உயர்கல்வியின் தரத்தை நிர்ணயிக்கும் 66-வது பிரிவின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் இந்திய மருத்துவுக் கவுன்சிலின் பரிந்துரைகளின் படியும் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் அதிகார வரம்பில் பொதுப்பட்டியலில் கல்வி இருந்தாலும், அதில் சட்டத்திருத்தம் செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமையும், அதிகாரமும் உள்ளது. அதன்படிதான், பொதுப்பட்டியலில் உள்ள ”மிருகவதை தடுப்புச் சட்டத்தில்” திருத்தம் செய்து, மத்திய அரசு உதவியுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு வழிவகுத்தது. இதே வழியின்படிதான், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்களிக்கும் வகையில் பேரவையில் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது

ஆனால், தமிழக அரசின் சட்டமும், மத்திய அரசின் நீட் தேர்வு சட்டமும், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் திருத்தச் சட்டம் 2016-க்கு முரண்பாடாக இருப்பதை சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால், நீட் நுழைவுத் தேர்விலிருந்து மாணவர்கள் விலக்குபெற முடியாது என்றும், நீதிமன்றத்தை நாடினாலும்கூட, மத்திய அரசின் பக்கமே சாதகமான தீர்ப்பு வரும் என்றும் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

வரும் மே 7-ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு ஜனவரி 31-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில், கால அவகாசம் குறைவாக இருப்பதால், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் ஒருவித குழப்பமும், கவலையும் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்கு எப்படி மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு சட்ட அங்கீகாரம் பெற்றதோ, அப்படி தற்போதைய நீட் தேர்வு சட்டத்திற்கும் சட்ட அங்கீகாரம் பெற்றால்தான், நுழைவுத் தேர்விலிருந்து மாணவர்கள் பயன்பெற முடியும் என்கிறார்கள் சட்ட நுணுக்கங்களை அறிந்தோர். அதற்கு முதலில் பிரதமர் நரேந்திர மோடி சம்மதம் தெரிவிக்க வேண்டும். பிறகு மத்திய சட்ட அமைச்சகம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகங்களின் ஒப்புதலோடு, குடியரசுத்தலைவர் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டத்தை 24 மணி நேரத்திலும், நிரந்தரச் சட்டத்தை ஒரு வாரத்திலும் இயற்றியது போல், இதையும் பெற்று விடலாம் என்று நினைத்தால், தமிழகம் மீண்டுமொரு மக்கள் போராட்டத்தை சந்தித்தால் ஒழிய சாத்தியமில்லை. மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக பல்வேறு அழுத்தங்களை தமிழக அரசு தந்தால்தான் நீட் நுழைவுத் தேர்வு சட்டம் நிறைவேறும். ஆனால் அதை செய்யும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு இப்போதைக்கு இருக்கிறதா என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி. தற்போதைய நிலையில், பேரவையில் நாளை மறுநாள் பெரும்பான்மையை நிரூபிக்கவே பெரும் பாடுபட்டு கொண்டிருக்கும் சூழலில், இது சாத்தியமாகுமா?¬

தமிழக அரசின் நடவடிக்கையை நம்பி, மாணவர்கள் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதும், தேர்வுக்கு தயாராகமல் இருப்பதும் பெரும் பின்விளைவுகளையே மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்கொள்ள நேரிடும். எனவே, நீட் தேர்வுக்கு மனதளவிலும், பயிற்சி அளவிலும் மாணவர்கள் தயாராவதும், அவர்களை பெற்றோர்கள் தயார்படுத்துவதும்தான் நம்முன் இருக்கும் வாய்ப்பு.

கட்டுரை: – ஜி.எஸ்.பாலமுருகன், மயிலாடுதுறை. 9842940657