
கொரோனா ஊரடங்கு காரணமாக உலக அளவில் அனைத்து செய்தித்தாள் நிறுவனங்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்திய செய்தித்தாள் நிறுவனங்களுக்கும் ஏறக்குறைய 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 30 லட்சம் பேர் வரை ஈடுபட்டுள்ளனதாகக் கூறப் படும் நிலையில், பத்திரிகைகளை குதறிப் போட்டுள்ளது கொரோனா!
இந்நிலையில், தமிழகத்தின் முன்னணி நாளிதழ்களின் உரிமையாளர்கள் முதல்வரை சந்தித்தார்கள். கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் திணறும் பத்திரிகைகளின் சிரமங்களை பட்டியலிட்டார்கள். அரசு விளம்பர பாக்கித்
தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டுகோள் விடுத்தார்கள்.
இதன் பின்னணி குறித்து ஊடக வட்டாரங்களில் கூறப்படுவது… கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன பத்திரிகைகள். ‘இந்தியாவின்’ மார்க்கெட் லீடரான ஆங்கில நாளிதழுக்கே ‘டைம்’ சரியில்லை. கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தை தவிர, மற்ற 2 பதிப்புக்களை மூடிவிட்டது. தமிழகத்தில் உள்ள 4 பதிப்புக்களில் 2 பதிப்புகளை மூடப் போகிறது.
தமிழகத்தின் முன்னணி ஆங்கில நாளிதழ் அதிரடியாக சம்பளத்தைக் குறைந்திருக்கிறது. ரூ 25 ஆயிரம் வரை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 10 சதவீதமும், அதற்கு மேல் பெறுவோருக்கு 20 சதவீதமும் குறைத்திருக்கிறது. அதன் தமிழ் பதிப்பு, ஊழியர்களுக்கு தந்த சம்பளமோ 30 சதவீதம்தான்.
தமிழகத்தின் முன்னணி தமிழ் நாளிதழ் இந்த மாதம் சம்பள குறைப்பிற்கு திட்டமிட்டிருக்கிறது. 55 வயதுடைய ஊழியர்கள் கணக்கெடுக்கப் படுகிறார்கள். அந்த குழுமத்தின் மாலை நாளிதழ் 58 வயது முடியும் நிலையில் இருந்த ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. அந்த குழுமத்தின் எப்எம்.,மில் பணியாற்றிய பத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணி இழந்திருக்கிறார்கள்.
‘உண்மையின் உரைகல்லான’ தமிழ் நாளிதழ் 5 உரிமையாளர்களிடம் உள்ளது. அதன் சேலம், வேலூர் பதிப்பின் உரிமையாளர், மறு அறிவிப்பு வரும் வரை நாளிதழ் வெளிவராது என்றே அறிவித்துவிட்டார். சென்ற மாதமே 2,3 தவணைகளில் சம்பளம் போட்ட நாளிதழ்கள் உண்டு. இந்த மாதம் என்ன நடக்கப் போகிறதோ?
வார இதழ்கள் சவலைப் பிள்ளையாய் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. நெற்றிக் கண்ணை திறக்கவே முடியவில்லை. தொலைக் காட்சிகளின் நிலையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. விளம்பரம் இல்லை. வருமானம் இல்லை. அதன் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி இருக்கிறது.
இந்நிலையில், செய்தித்தாள் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு பிரதமருக்கு எம்பிக்கள் வாயிலாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை செய்தித்தாள் நிறுவனங்களின் நிர்வாகிகள் கூட்டாக சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதில் தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் மற்றும் ஐஎன்எஸ் துணைத் தலைவர் ஆதிமூலம், தி ஹிந்து பதிப்பக குழும இயக்குனர் என் ராம், தினகரன் நிர்வாக இயக்குனர் ஆர் எம் ஆர் ரமேஷ், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்தனர். செய்தித்தாள் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தங்களது கட்சி எம்பிக்களிடம் கையெழுத்து பெறுவதுடன் பிரதமரிடம் வலியுறுத்துவதாகவும் முதல்வர் துணை முதல்வர் ஆகியோர் உறுதியளித்தனர். அடுத்து ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்தித்து வலியுறுத்த இருப்பதாக செய்தித்தாள் நிறுவனங்களின் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கெனவே செய்தித்தாள் நிறுவனங்கள் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக செய்தித்தாள்களின் அகில இந்திய அமைப்பான இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி எனும் ஐஎன்எஸ் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக பிரதமருக்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காக தமிழகத்தில் உள்ள முக்கிய செய்தித்தாள் நிறுவனங்களின் நிர்வாகிகள் முடிவு செய்து அரசியல் மட்டத்தில் பலரையும் சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக எதிர்கட்சித் தலைவரும் திமுக., தலைவருமான மு.க.ஸ்டாலினையும் சந்தித்துப் பேசினர். இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின், “மக்கள் பக்கம் நிற்கின்ற அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, தி.மு.கழகம் துணை நிற்கும்” என்று உறுதி அளித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர்களான தினமலர் திரு. ஆதிமூலம், இந்து திரு. என்.ராம், தினகரன் திரு. ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் சந்தித்து, கோரிக்கைக் கடிதத்தை அளித்தனர். அதில், அவர்கள் மூவருடன், தினத்தந்தி திரு. பாலசுப்ரமணிய ஆதித்தன், இந்தியன் எக்ஸ்பிரஸ் திரு. மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோரும் கையெழுத்திட்டிருந்தனர்.
நோய்த் தொற்று குறித்தும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் குறித்தும், சமூக வலைதளத்தின் பரப்பு அதிகரித்துவரும் இந்தக் காலத்தில், மக்களிடம் உண்மைச் செய்திகளை, நடுநிலையோடு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள அச்சு ஊடகங்களான பத்திரிகைகளின் தேவை மிகவும் அதிகம். அவை நெருக்கடிக்கு உள்ளாவதிலிருந்து மீளும் வகையில்,
- மத்திய அரசு, பத்திரிகை அச்சுக்காகிதம் மீதான வரியைக் குறைக்கவேண்டும்
- அரசு விளம்பரங்கள் தொடர்பாக மத்திய – மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவைத் தொகையை உடனடியாக பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டும்
- காலத்தின் தேவை கருதி அரசு விளம்பரக் கட்டணத்தை நூறு விழுக்காடு அளவிற்கு உயர்த்தி வழங்க வேண்டும்; இவைதான் பத்திரிகைத் துறையின் முக்கியமான கோரிக்கைகள்.
மக்கள் பக்கம் நிற்கின்ற அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காகப் பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, தி.மு.கழகத்தின் நாடாளுமன்ற மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் நிச்சயம் துணை நிற்பார்கள் – பிரதமரிடம் இதனை வலியுறுத்துவார்கள் என்ற உறுதியினை அவர்களிடம் வழங்கினேன் என்று கூறியிருந்தார் ஸ்டாலின்.
இந்நிலையில் அச்சு ஊடகங்கள் மீண்டும் முன் போல் எழுமா என்ற கேள்வியும் கவலையும் எழுந்திருப்பது போல், வாழ்வாதாரம் இழந்து பணிகளை இழந்து தள்ளாடும் ஊடகவியலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் கூட பெரும் கவலையில் தான் ஆழ்ந்திருக்கின்றனர். கவலை என்பது முழுதாக மூளையை ஆக்கிரமித்து விட்டால், ஊடகவியலாளர்களால் சிறந்த சிந்தனையுடன் முழுதாக செயலாற்ற இயலாது! அதனால் தங்கள் திறனை முழுதாக இந்த சமுதாயத்துக்காக அளிக்க இயலாத சிந்தனைத் தடைக்கு ஊடகவியலாளர்கள் வந்துள்ளனர். மத்திய அரசு அச்சு ஊடக வீழ்ச்சியைத் தடுத்த நிறுத்த முயற்சி எடுக்கும் போது, பரிதாபநிலையில் உள்ள ஊடகவியலாளர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்!