
– திருப்பூர் கிருஷ்ணன் –
***
குடும்பத் தளைகளைத் துறந்து துறவு வாழ்வு வாழ்ந்த மெய்ஞ்ஞானியான ஸ்ரீரமணரின் சரிதத்தை இலக்கணத் தளைகளுக்கு உள்பட்ட வெண்பாக்களாக எழுதிப் புரட்சி செய்தார் கிரேஸி மோகன். நமது ஆன்மிக மரபு நெறியின் உன்னதத்தை வெளிதேசத்தினருக்கும் உணர்த்திய மகானின் வரலாறு, மரபுக் கவிதையாகவே அமைந்ததும் பொருத்தம் தான்.
கிரேஸி மோகன் பெயரைக் கேட்டதுமே பலருக்கு உதட்டில் ஒரு சின்னப் புன்முறுவல் தோன்றும். மேடைகளில் அவரைப் பார்த்தபோதெல்லாம் அவர் சிரிக்க வைத்ததால், அவர் பெயரே நம் மனத்தில் மகிழ்ச்சிஅலையைப் பரப்பும்.
அவர் பெயரைக் கேட்டாலோ அவர் புகைப்படத்தைப் பார்த்தாலோ உடனே உதடு மெல்லப் பிரிந்து சிறியதொரு புன்முறுவலையாவது காட்ட வேண்டும் என்பது நம் ஆழ்மனம் நம்மையறியாமல் நம் உதட்டிற்கு இட்டிருக்கும் கட்டளை!
சங்கப் பாடல்களின் கீழே `வயலும் வயல்சார்ந்த இடமும், மலையும் மலை சார்ந்த இடமும்` என்றெல்லாம் குறிப்பிடுவார்கள். அதுபோல் கிரேஸி மோகன் என்றாலே `சிரிப்பும் சிரிப்பு சார்ந்த இடமும்` என்பது பொருள்.
என் நெருங்கிய நண்பராக இருந்த கிரேஸி மோகன் ஒரு முப்பரிமாணப் பிரமுகர்! நடிகர், மரபுக் கவிஞர், ஓவியர் என மூன்று துறை வல்லுநராகத் திகழ்ந்தவர்.
*சரியாக ஓராண்டுக்கு முன் இதே நாள். 2019 ஜூன் 10 மதியம். பல தொலைபேசி அழைப்புக்கள் வந்த வண்ணமிருந்தன.
`கிரேஸி மோகன் வயிற்று வலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டு சென்னை ஆழ்வார்ப் பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார், அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது` என்றெல்லாம் அடுத்தடுத்துத் தகவல்கள்.
கொஞ்ச நேரத்தில் மதியம் இரண்டு மணியளவில் கடைசித் தகவல் வந்து சேர்ந்தது. அவர் காலமாகிவிட்டார்!
அதைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது. முந்தின தினம் கூட அவர் நோய்வாய்ப் பட்டிருந்ததாகச் செய்தி எதுவும் வரவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு முன்னால் கூட நன்றாகப் பேசியவர்தான்.
கிடுகிடுவென்று அவர் வாழ்க்கை இறுதியை நோக்கி விரைந்து சடாரென முடிந்தே போய்விட்டது. நம்ப முடியவில்லை.

அந்த மாத அமுதசுரபியில் அவரது சிபிஎல் (கிரேஸி ப்ரீமியர் லீக்) என்ற நாடகத்தைப் பற்றிப் பாராட்டி எழுதியிருந்தேன். மே மாதம் இல. கணேசன் அவர்களைத் தலைவராகக் கொண்ட பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பு கிரேஸி மோகனின் அந்த நாடகத்தைத் தன் பதினான்காம் ஆண்டு விழாவில் மேடையேற்றியது.
ஒரே நாடகத்தின் உள்ளே பல நாடகங்களாக அந்த நாடகம் வடிவமைக்கப் பட்டிருந்தது. நாடக மேடையில் ஒரு புதுமை அது. `சாக்லேட் கிருஷ்ணா, மீசையானாலும் மனைவி` உள்ளிட்ட கிரேஸியின் நாடகங்களிலிருந்து செதுக்கிய மிக சுவாரஸ்யமான காட்சிகள் அடுத்தடுத்து மேடையில் நடிக்கப்பட்டன.
கிரேஸியின் மிகக் கூர்மையான வசனங்கள். மாது பாலாஜியின் அட்டகாசமான நடிப்பு. மற்ற நடிகர்கள் அதற்கு ஈடுகொடுத்து நடித்த விதம். எஸ்.பி. காந்தனின் கவனமான இயக்கம். எல்லாம் சேர்ந்த மிகச் சிறந்த கூட்டு முயற்சி வெற்றியடையக் கேட்பானேன்? பார்வையாளர்கள் சிரிப்பலையில் மூழ்கினார்கள்.
கிரேஸி மோகன் காலமாவதற்குச் சில நாட்கள் முன்னால் அஞ்சலில் அமுதசுரபியைப் பெற்றுக் கொண்டதும் சிபிஎல் (கிரேஸி ப்ரீமியர் லீக்) பற்றி நான் எழுதியதைப் படித்துவிட்டு என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.
நாடக விமர்சனத்தைப் பற்றிய தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட அவர், நீண்ட நேரம் பல்வேறு விஷயங்கள் தொடர்பாகப் பேசினார்.
தொலைபேசியில் அவர் அவ்வப்போது என்னுடன் பேசக் கூடியவர்தான் என்றாலும் அன்று பேசியதுபோல் அத்தனை நேரம் என்றும் பேசியதில்லை. முக்கியமாக அன்று அவர் பேசியதன் பெரும்பகுதி அவர் அப்பாவைப் பற்றியது.
*கிரேசி மோகனின் அப்பா ரங்காச்சாரி ஒரு மாபெரும் வாசகர். பல புத்தகங்களை மிக்சியில் போடாமலே கரைத்துக் குடித்தவர்! அவர் படிக்காத புத்தகம் என்பது அவர் இருந்தவரை எழுதப்படாத புத்தகமாகத் தான் இருக்கும். அப்படியொரு பெரிய படிப்பாளி.
மாதந்தோறும் அமுதசுரபியை வாசித்தபின் விரிவாகத் தொலைபேசியில் விமரிசனம் செய்வார். அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்வார். குறைகளையும் சுட்டிக்காட்டத் தயங்கமாட்டார். நிறைகளைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவார்.
அமுதசுரபி அவர்கள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் முதலில் படிப்பவர் அவர்தான்.
அவர் காலமானபோது, ஒரு சிறந்த வாசகருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என என் மனம் விரும்பியது. `மறக்க முடியாத அப்பா` என்ற தலைப்பில் தன் தந்தையைப் பற்றி ஒரு கட்டுரை தருமாறு கிரேசி மோகனை வேண்டினேன்.
அவர் எழுதிய உருக்கமான அஞ்சலிக் கட்டுரை அமுதசுரபியில் இடம்பெற்று ஏராளமான வாசகர்களின் நெகிழ்ச்சி கலந்த பாராட்டைப் பெற்றது.
அவர் அப்பாவுக்கு என்மேல் இருந்த பிரியத்தைப் பற்றித்தான் அன்று கிரேசி மோகன் நெடுநேரம் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தார். நான் கலந்துகொண்ட அவரது தந்தையின் எண்பதாம் ஆண்டு விழாவைப் பற்றியெல்லாம் நானும் நினைவுகூர்ந்து பேசினேன்.
மிகச் சில நாட்களில் தந்தை சென்ற இடத்திற்கே அவர் போய்ச்சேரப் போகிறார் என்பது அப்போது எனக்குத் தெரியாது. …

* என் புதல்வர் அரவிந்தன் கிரேசி மோகனின் பெரிய ரசிகர். அதற்கு ஒரு காரணம் உண்டு.
அவர் 2009இல் சென்னை அரும்பாக்கம் வைணவக் கல்லூரியில் எம்.எஸ். டபிள்யு படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு கல்லூரி விழாவுக்கு யாரேனும் ஒரு புகழ்வாய்ந்த பிரமுகரை அழைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு வந்து சேர்ந்தது.
கிரேசி மோகனிடம் வர இயலுமா என என் புதல்வர் கேட்டபோது அவர் எந்த பந்தாவும் செய்யாமல் எந்த நிபந்தனையும் விதிக்காமல் உடனே ஒப்பக்கொண்டார். மாலையில் நாடகம் இருப்பதால் காலை நேர நிகழ்ச்சியாக வைத்துக் கொள்ளுமாறு மட்டும் கூறினார்.
சொன்ன நேரத்திற்குச் சரியாக வந்து விழாவில் மிகச் சிறப்பாகப் பேசி மாணவர்களைக் கலகலக்க வைத்துவிட்டுச் சென்றார். அன்றுமுதல் என் புதல்வருக்குக் கிரேஸி என்றால் ஒரு தனி கிரேஸி!…
*என் புதல்வரும் நானும் கிரேசி மோகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த உடனே புறப்பட்டோம். தகவல் அறிந்து உடன் இணைந்துகொண்டார்கள் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் திருமதி கிரிஜா ராகவனும் எழுத்தாளர் க்ளிக் ரவியும்.
நாங்களெல்லாம் வடபழனி, அஷோக் நகர் என அருகருகாக வசிப்பவர்கள்.
நாங்கள் கிரேஸியின் இல்லத்திற்குப் போய்ச் சேர்ந்தபோது மாலை ஐந்தரை மணி இருக்கலாம். அங்கு அதற்குள் வந்து திரண்டிருந்த கூட்டம் மலைக்க வைத்தது.
நாடக நடிகர்கள், திரை நட்சத்திரங்கள், எழுத்துலகப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், ஓவியர்கள் என எங்கும் பிரமுகர்கள் மயம். தன் வாழ்நாளில் தன் பண்பான நடத்தை மூலம் அவர் ஆயிரக்கணக்கானவர்களின் இதயத்தை வென்றிருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
தனிமனித ஒழுக்கத்திலும் சமுதாய ஒழுக்கத்திலும் மேலோங்கி வாழ்ந்த ஒரு நடிகரின், ஓர் எழுத்தாளரின், ஓர் ஓவியரின் வாழ்க்கைக்கு இயற்கை அன்று முற்றுப்புள்ளி வைத்திருந்தது. அஞ்சலி செலுத்தியபின் அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டவாறே நாங்கள் வீடு திரும்பினோம்….
*அவர் `ரமணாயணம்` என்ற தலைப்பில் அமுதசுரபியில் எழுதிய மரபுக் கவிதைத் தொடர் வாசகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பெருமைக்குரியது. எழுத்துத் துறையில் கிரேசி மோகனுக்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுத்தந்த தொடர் அது என்று சொல்ல வேண்டும்.
நகைச்சுவை வசனங்களுக்கும் நகைச்சுவை நடிப்புக்கும் மட்டுமே புகழ்பெற்ற ஒருவரை மரபுக் கவிதை அன்பர்கள் சிறந்த மரபுக் கவிஞராக அங்கீகரித்ததற்குக் காரணமாக அமைந்த தொடரும் அதுதான்.
அந்தத் தொடர் பல சவால்களுக்கு உட்பட்டு எழுதப்பட்டிருப்பதை வாசகர்கள் புரிந்து கொண்டார்கள்.
முதல் சவால், ஸ்ரீரமணர் திருச்சரிதம் ராமாயண மகாபாரதம் போல் கதைப்போக்கும் திருப்பங்களும் நிறைந்த சரிதமல்ல. அது புனிதமே வடிவான ஒரு மகானின் அண்மைக்கால வரலாறு.
சம்பவங்களை விட, தத்துவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட வேண்டிய உயர்நிலை மெய்ஞ்ஞானி ஸ்ரீரமணர். ஆழ்ந்த தத்துவப் புரிதல் இல்லாவிட்டால் இத்தகைய தொடர் எழுதுவது மிகக் கடினம்.
இரண்டாவது சவால் அதிகக் கதைப்போக்கு இல்லாத எளிய வரலாற்றை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் தரவேண்டிய நிர்பந்தம்.
அதிலும் ஒரு பத்திரிகையில் தொடராக வெளிவரும்போது வாசகர்கள் விரும்பி வாசிக்கும் வகையில் சுவாரஸ்யமாக இல்லாவிட்டால் அது வெளிவரும் வாய்ப்பே இருக்காது.
மூன்றாவது சவால் அந்தத் தொடர் நேரிசை வெண்பாக்களால் அமைக்கப்பட்டது என்பது. `இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை தட்டாது, நாள் மலர் காசு பிறப்பு என்ற வாய்பாட்டில் முடிந்து, இரண்டாமடியின் ஈற்றுச்சீர் முதல் இரு அடிகளுக்கேற்ப எதுகை பெற்று வரவேண்டும்` என்பது நேரிசை வெண்பாவுக்கு யாப்பிலக்கணம் வகுக்கும் விதி.
(தனக்கு வெண்பா இலக்கணம் கற்றுத்தந்த தன் நண்பர் சு. ரவி பற்றி அடிக்கடி நன்றியோடு குறிப்பிடுவார் கிரேஸி மோகன்.)
வெண்பா எழுதி எழுதிப் பழகிய கைதான் இத்தகைய `வெண்பாத் தொடர்` முயற்சியில் ஈடுபட முடியுமே தவிர, எல்லா மரபுக் கவிஞர்களும் இதுபோன்ற நூலை எழுதி விட இயலாது.
மரபுக் கவிதை என்றாலே பெரும்பாலும் எண்சீர் விருத்தம் என்று ஆகிவிட்ட காலம் இது. அதைத் தாண்டி கடினமான தளை விதிகளுக்கு உள்பட்டு எழுதவேண்டிய வெண்பா, எழுத்தெண்ணிப் பாட வேண்டிய கட்டளைக் கலித்துறை போன்ற வகைகளின் பக்கம் இப்போதெல்லாம் அதிகம் யாரும் தளைவைத்துப் படுப்பதில்லை – மன்னிக்கவும் – தலைவைத்துப் படுப்பதில்லை!
எனவே பாலை நிலத்தில் அரிதாய்ப் பெய்யும் மழைபோல இத்தொடர் அமைந்தது என்பதையும் வாசகர்கள் கவனத்தில் கொண்டார்கள்.
ஜெயகாந்தன் போன்றவர்கள் கிரேசி மோகனின் கவிதையாற்றலைப் பாராட்டியிருக்கிறார்கள். தற்காலப் பேச்சு வழக்கையும் வட்டாரத் தமிழ்ச் சொற்களையும் கூட சீர்களாக்கி, சீரும் சிறப்புமாக வெண்பாக்களைப் படைக்கும் வல்லமை மோகனுக்குக் கைவந்த கலையாயிருந்தது.
குடும்பத் தளைகளைத் துறந்து துறவு வாழ்வு வாழ்ந்த மெய்ஞ்ஞானியான ஸ்ரீரமணரின் சரிதத்தை இலக்கணத் தளைகளுக்கு உள்பட்ட வெண்பாக்களாக எழுதிப் புரட்சி செய்தார் கிரேஸி மோகன்.
நமது ஆன்மிக மரபு நெறியின் உன்னதத்தை வெளிதேசத்தினருக்கும் உணர்த்திய மகானின் வரலாறு, மரபுக் கவிதையாகவே அமைந்ததும் பொருத்தம் தான்.
அந்தத் தொடர் நிறைவடைந்ததும், நான் வெண்பாவிலேயே இன்னொரு தொடர் எழுதுமாறு வேண்டினேன். யாரைப் பற்றி எழுதலாம் எனக் கேட்டார் அவர். நான் என் ஆசையைச் சொன்னேன்.
`நீங்கள் சொல்வது சரி. ர வை அடுத்து ரா தானே வரவேண்டும்?` என்றார் அவர் சிரித்தவாறே.
`ஆனால் அவரைப் பற்றி எழுத என்னால் முடியுமா?` எனத் தயங்கினார். `முயலுங்கள், முடியும்!` என்றேன். ஆனால் அவர் முயல்வதற்குள் அவர் வாழ்க்கை முடிந்துவிட்டது.



